தொகுப்பு

Archive for the ‘பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்


“பற்களை கவனிக்க மறந்தால், மாரடைப்புகூட வரலாம்!”

“என் கணவரின் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அவரது பற்களை பரிசோதித்த மருத்துவர்கள், பல் பராமரிப்பில் கவனம் வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். கூடவே, ‘பற்கள் தூய்மை விஷயத்தில் அலட்சியம் காட்டினால் ஹார்ட் அட்டாக்கூட வரலாம்’ என்றும் பயமுறுத்தியிருக்கிறார்கள். ‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்களே…’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் என் கணவர். உண்மையில் பல் பராமரிப்புக்கும் இதய பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம்? கூடவே, அவருக்கு பல் வரிசையானது ஒன்றின் மீது ஒன்றாக அமைந்துள்ளதால் தினசரி ஒழுங்காக பல் துலக்கினாலும் சுத்தமின்றியே இருக்கிறது. என்ன செய்வது..?”

டாக்டர் என்.குருசரண், பல் சிறப்பு மருத்துவர், திருச்சி:

“உங்கள் கணவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனை சரியானதுதான். குழாய் வழியாக உப்புத் தண்ணீர் சென்றால், குழாயின் உட்புறத்தில் உப்பு படிவதால், தண்ணீரின் போக்குவரத்து தடுமாறுவதுபோல், ரத்தக்குழாயின் உட்புறமும் லேசான படிமானங்கள் சேரும்போது ரத்தத்தின் போக்கி லும் தடுமாற்றங்கள் எழும். ஃபைபர், கொழுப்பு மற்றும் ரத்தத்திலிருக்கும் சில பொருட்களும் இம்மாதிரியான படிமானங்களுக்குக் காரணமாகும். இதனால் பாதிக்கப்படும் ரத்தக்குழாய், இதய அடைப்புக்கு வித்திடுகிறது. இந்தப் பிரச்னையை ‘அத்ரோஸ்க்ளரோஸிஸ்’ (Atherosclerosis) என்பார்கள். இந்த வகை படிமானங்களுக்கு பல் மற்றும் ஈறில் சேரும் அழுக்குகள் பிரதான காரணமாவதுதான் உங்கள் கணவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் பின்னணி.

பல் பராமரிப்பில் அலட்சியம் காட்டும்போது பல்லின் அழுக்கு ஈறில் சேர்ந்து, டார்டர் (Tartar) அல்லது கால்குலஸ் (Calculus) எனப்படும் படிமானங்களாக பற்பரப்பில் உருவெடுக்கின்றன. இதில் தலையெடுக்கும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து உடலில் விரவும்போது, உடலானது பாக்டீரியாக்களுக்கு எதிர்வினையாற்ற தலைப்படும். இந்த எதிர்வினையின் பக்கவிளைவாக ஃபைபர் கொழுப்பு போல ‘அத்ரோஸ்க்ளரோஸிஸ்’ புதுக் காரணத்தோடு படிகிறது. இதுவே நாள்பட, இதய பாதிப்பை உண்டு பண்ணுகிறது.

மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களிலும் ‘அத்ரோஸ்க்ளோரோஸிஸ்’ படிமானம் நிகழ வாய்ப்புகள் உண்டு. அதுமாதிரியான சந்தர்ப்பங்களில் ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதம் வருவதற்கான ஆபத்தும் உண்டு.

இதே பிரச்னை, ஒரு கர்ப்பவதிக்கு வரும்போது எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. தவிர, இந்த பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானதும்கூட. சுமார் 12 வயதில் இந்த படிமான வாய்ப்பு ஆரம்பிக்கிறது.

எனவே, பல் மற்றும் வாய் சுத்தத்தில் கூடுதல் அக்கறை வேண்டும். காலையில் கடமைக்காக பிரஷ் செய்வதே பல் பராமரிப்பு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இனியேனும் தினமும் இருவேளை உரிய முறையில் பிரஷ் செய்வதும், என்ன சாப்பிட்ட பிறகும், குறிப்பாக காபி, ஜூஸ் போன்ற திரவ ஆகாரங்களாக இருப்பின் உடனடியாக வாய் கொப்பளிப்பதும் அவசியம்.

இவற்றோடு, ‘டெண்டல் ஃப்ளாஸ்’ எனப்படும், பிளாஸ்டிக் நூலைக்கொண்டு பல் இடுக்குகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு முதல்முறை மட்டும் முறைப்படி பல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

உங்கள் கணவரைப்போல ஒழுங்கற்ற வரிசையில் பல் அமையப் பெற்றவர்களின் பல் இடுக்குகளை சுத்தம் செய்ய, இந்த ‘டெண்டல் ஃப்ளாஸ்’ அவசியமானது. பல், ஈறு மட்டுமல்ல… நாக்கு மற்றும் முழு வாய் சுகாதாரத்தையும் மனதில் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து, அவசியமெனில் ‘ஸ்கேலிங்’ எனப்படும் பல் தூய்மை பராமரிப்பை பெறவேண்டும். விளைவுகள் விபரீதமானவை என்பதால் வருமுன் காக்கும் இதுபோன்ற எளிய நடவடிக்கைகளே புத்திசாலித்தனமானது!”

“நாற்பத்தி இரண்டு வயதாகும் எனக்கு, தலையில் வட்ட வட்டமாக முடி கொட்டுகிறது. சித்த வைத்தியத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பிரச்னை சரியாகவில்லை. நிலைமை இன்னும் மோசமாகி மற்ற இடங்களிலும், புருவங்களிலும் முடி கொட்ட ஆரம்பித்துவிட்டது. இதிலிருந்து மீள்வது எப்படி?”

டாக்டர் செந்தில்குமார், சருமநோய் மருத்துவர், மதுரை:

“உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை ‘ஆலோபோசியா’. இதை ‘பூச்சிவெட்டு’ என்று நம் ஊர்களில் சொல்வதுண்டு. இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான பிரதான காரணங்கள், கிருமிகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவைதான். மிகவும் அரிதாக பரம்பரையும் சிலசமயங்களில் காரணமாக இருக்கலாம்.

சருமத்தில் மட்டுமல்ல… வயிற்றில், சிறுநீர் வழிப்பாதையில் ஏற்படும் கிருமிகளின் விளைவாககூட தலையில் முடி கொட்டச் செய்யும் இது, நான்கு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் தாக்கலாம். பாதிப்படைந்தவர்களுக்கு ஸ்டீராய்டு கலந்த ஊசி அல்லது ஆயின்மென்ட் போன்றவற்றை அவர்களுடைய பிரச்னைகளின் வீரியத்துக்கேற்ப சின்னதாக ஆரம்பித்து, பின்பு படிப்படியாக உயர்த்தி கொண்டே வருவோம். மற்றபடி, சாப்பாட்டு விஷயத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளச் சொல்வோம். இப்படிச் செய்தாலே மூன்று மாதங்களிலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போய் விடும்.

மன அழுத்தத்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டவர்கள், மருந்துகளைப் பயன்படுத்துவதால் மட்டும் குணமடைந்துவிட முடியாது. மன அழுத்தம் ஏற்பட காரணமான பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டால்தான், உரிய நிவாரணம் காண முடியும்.

நன்றி:- டாக்டர் என்.குருசரண், பல் சிறப்பு மருத்துவர், திருச்சி:

நன்றி:-டாக்டர் செந்தில்குமார், சருமநோய் மருத்துவர், மதுரை:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்