தொகுப்பு

Archive for the ‘பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்

ஓகஸ்ட் 4, 2010 1 மறுமொழி

புளிக்குழம்பு சாப்பிட்டால் கருத்தரிக்காதா?

‘‘எனக்கு 24 வயது. என் மூக்கின் மேலிருந்த ஒரு சிறு கொப்பளத்தைக் கைகளால் தேய்த்துவிட்டேன். அது, சில நாட்களிலேயே கறுப்பாகத் தழும்பு போல பெரிய அளவில் மாறிவிட்டது! கடந்த ஒரு மாதமாக அப்படியேதான் உள்ளது.

அதோடு, உதடுகளும் சுற்றியுள்ள பகுதிகளும் கருமையாக உள்ளன. இந்தக் கருமை மாற நான் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து எனக்கு உதவுங்கள் டாக்டர்…’’


டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை:

‘‘எப்போதுமே முகப் பரு, கொப்பளம் இதையெல்லாம் கிள்ளவே கூடாது. கிள்ளினால், அதிலிருந்து வெளிப்படும் சீழ், முகம் முழுக்கப் பரவி இன்னும் அதிகமான பருக்களையும் கொப்பளங்களையும் உருவாக்கிவிடும். கிள்ளிவிட்டதால் காயமாகி, அது தழும்பாகிவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். அந்தத் தழும்பு தட்டையாக, மென்மையாக இருந்தால் இரண்டே மாதத்தில் மறைந்து போய்விடும். வேறு சிகிச்சை தேவையில்லை.

கொப்பளம் இருந்த இடம் காய்ந்து பருமனாக இருந்தால், உடனே டாக்டரிடம் காண்பித்து, பருக்களுக்கு அளிக்கும் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

இது பனிக்காலம் என்பதால் உலர்ந்த சருமம் இருப்பவர்களுக்கு, உதடுகள் கருத்துப் போகக்கூடும். உதட்டில் தினமும் தேங்காய் எண்ணெய் (அ) ஆலீவ் எண்ணெயை தடவி வாருங்கள். கருமை மறைந்து ரோஜா இதழ்களாகப் புன்னகைக்கலாம்’’

‘‘எனக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது என் வயது 36. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டேன். பத்து வருடங்கள் கழித்து குடல் பகுதியில் கரு உருவானது. அது ஆபத்து என்பதால், அறுவை சிகிச்சையின் மூலம் கருவை அகற்றிவிட்டனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும் இப்படி கரு உருவாகுமா?

இப்போது வலப்பக்க மார்பகத்தில் கட்டி போல் உள்ளது. மாத விலக்கு ஆகும் முன்பு வலிக்கிறது. வலது கை அக்குள் பகுதியிலும் வலி இருக்கிறது. விலக்கு முடிந்ததும் வலியில்லை. இது ஏன்?

இதேபோல் வலது காதில் சீழ் வருகிறது. துர்நாற்றமடிக்கிறது. காய்ச்சல் வந்தாலும், சளி பிடித்தாலும், உடலில் வலி ஏற்பட்டாலும் காதில் சீழ் வருகிறது. இதற்கு என்ன காரணம்?

நான் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’

டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை:

‘‘உங்கள் பிரச்னைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதலாவது பத்து வருடங்களுக்கு முன் உண்டான கர்ப்பம். பொதுவாக, கு.க. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் சிலருக்கு கர்ப்பம் தரிக்கலாம். இது, கர்ப்பப்பைக்கு முட்டையை எடுத்துச் செல்கிற குழாயில் ஏற்படுகிற கர்ப்பம். இதுதான் பரவலாக ஏற்படுவது. ஆனால், உங்களுக்கு குடல் பகுதியில் கர்ப்பம் உண்டாகியிருக்கிறது. இப்படி குடல் பகுதியில் கர்ப்பம் உண்டாவது மிக மிக அபூர்வமானது. உங்களுக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றியது சிறந்ததே.

இரண்டாவதாக, வலப்பக்க மார்பகத்தில் கட்டிபோல் உள்ளது என்றும் மாத விலக்கின்போது மட்டும் வலிப்பதாகவும் கூறுகிறீர்கள். ஹார்மோன் கோளாறினால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இதை ‘பைரோ அடினோசிஸ்’ என்பார்கள்.

இது சாதாரணமானதுதான் என்றாலும் அக்குள் பகுதியிலும் வலியுள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், உடனடியாகப் புற்றுநோய் சிறப்பு நிபுணரை அணுகி, ‘புற்றுநோய் இருக்கிறதா?’ என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். இது வெறும் பரிசோதனைதான். பயப்பட வேண்டாம். எந்த வியாதியையுமே ஆரம்பகட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சையை மேற்கொள்வதுதான் சிறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். அதிலும், கேன்சர் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுவதுமாகக் குணப்படுத்திவிடலாம்.

அடுத்தது, காதில் சீழ் வரும் விஷயம்… அநேகமாக உங்களின் நடுக் காதில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் செவிப்பறையில் துவாரம் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்போது சீழ் வரலாம். இதற்கு ஈ.என்.டி. மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற மூன்றுமே மூன்று தனித்தனிப் பிரச்னைகள்தான். அவற்றுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை’’

‘‘என் வயது 20. எனக்கு சில மாதங்களாக மாத விலக்கு பிரச்னை உள்ளது. ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தேதிகளில் மாத விலக்கு ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நான் விலக்காகவில்லை. எங்கள் குடும்ப டாக்டர் என்னைப் பரிசோதித்து, சில மாத்திரைகளைக் கொடுத்து, சாப்பிடச் சொன்னார். அதன்படி நானும் சாப்பிட்டு வந்தேன்.

இப்போதெல்லாம் மாத்திரை சாப்பிட்டால்தான் மாதவிலக்கு ஏற்படுகிறது. என் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் ‘குண்டாக இருக்கிறவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை வரும். நீ குண்டுதானே’ என்கிறார்கள். எனது எடை 75 கிலோ. நிஜமாகவே குண்டாக இருப்பதால் இது போன்ற பிரச்னை வருமா?’’

டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை:

‘‘இருபது வயதில் 75 கிலோ எடை என்பது மிகவும் அதிகம். அதிகமான எடை இருந்தாலே, ஹார்மோன் பிரச்னை தானாகவே வரும். உங்களின் எடையை 60 கிலோவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகமிக அவசியமானவை. எண்ணெய்ப் பதார்த்தங்கள், வறுவல் போன்றவற்றுக்கு ‘குட் பை’ சொல்லுங்கள். அரிசியால் ஆன உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது வாக் செல்ல வேண்டும். அதோடு ஏரோபிக்ஸ் போன்ற பிற உடற்பயிற்சிகளையும் முயற்சிக்கலாம். பகல் தூக்கத்தையும் அதிக நேரம் தூங்குவதையும் முதலில் நிறுத்துங்கள். இவற்றோடு மருத்துவரின் அறிவுரையுடன் உடல் எடையைக் குறைக்கிற மாத்திரைகளும் எடுக்கலாம்.

மாதவிலக்கு பிரச்னை பற்றி அறிய நீங்கள் ஹார்மோன் டெஸ்ட் செய்துகொள்ளவேண்டும். முட்டை உற்பத்தியாகிறதா? அப்படி ஆகவில்லையென்றால் ஏன், எதனால் என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்கேற்பதான், உங்களுக்குச் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தப் பிரச்னைக்கு எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மூவாயிரம் ரூபாய்வரை ஆகும்.’’

‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் கரு உண்டாகவில்லை. என் உறவினர் ஒருவர் ‘உடலின் அதிக சூடு காரணமாக விந்தணுக்கள் இறக்கக்கூடும். சூட்டை அதிகரிக்கிற புளியே உணவில் சேர்க்கக் கூடாது’ என்கிறார். என் வீட்டிலோ புளியோதரை, புளிக்குழம்பு போன்றவற்றை அடிக்கடி செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தாம்பத்ய உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை. மாதவிலக்கான நாளில் இருந்து சரியாக 14\வது நாள் உறவு கொண்டும் பலன் இல்லை.

என் கேள்விகள் இதுதான்…

1. உணவில் புளி சேர்த்தால், உடலின் சூடு அதிகமாகி, விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மையா?

2. நாள் கணக்கு பார்த்து உறவுகொண்டும் ஏன் எனக்கு இன்னும் கருத்தரிக்கவில்லை?

3. நாங்கள் மகப்பேறு மருத்துவரை இப்போதே அணுகலாமா? அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா?’’

டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:

‘‘உங்கள் வயது என்னவென்று நீங்கள் குறிப்பிடவில்லை. 24 வயதுக்குள்தான் என்றால் நீங்கள் தாராளமாக இன்னும் 2 வருடங்கள் காத்திருக்கலாம். மற்றவர்கள், ஸ்பெர்ம் அனலைசஸ் அதாவது விந்தணு, முட்டை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

30-ஐ நெருங்கியவர்களாகவோ, 30-க்கு மேற்பட்டவர்களாகவோ இருந்தால் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

சாப்பாட்டில் புளி அதிகம் சேர்ப்பதால் எல்லாம் தாம்பத்ய உறவிலோ, விந்தணுக்கள் உற்பத்தியிலோ எந்த பாதிப்பும் இருக்காது. கவலை வேண்டாம்.

ஆண்களுக்கு, உடம்பில் சூடு அதிகமானால் விந்தணுக்கள் இறந்துவிடும் என்பது உண்மைதான். தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் அருகில் பணிபுரிகிறவர்களுக்கு உடம்பில் நேரடியாக சூடுபடுவதால், விந்தணுக்களின் எண்ணிக்கை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு, ரத்த நாளங்களில் ஏற்படுகிற சில மாற்றங்களால் உடம்புக்குள் சூடு அதிகரித்து, அதனாலும் விந்தணுக்கள் குறையலாம்.

மற்றபடி, பொதுவாக, திருமணம் முடிந்து 5 அல்லது 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், மருத்துவ சிகிச்சை எடுக்கிறவர்கள் மட்டுமே, மருத்துவரின் அறிவுரைப்படி, நாட்களை கணக்கிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது என்கிறீர்கள். தாம்பத்ய உறவிலும் பிரச்னை இல்லை என்பதால், கருத்தரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்திருப்பதில் தப்பே இல்லை!’’

நன்றி:- டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, தோல் சிகிச்சை நிபுணர், சென்னை:

நன்றி:-டாக்டர் என்.சிவராசன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஈ.என்.டி. சிறப்பு மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் கீதாஹரிப்ரியா, மகப்பேறு மருத்துவர், சென்னை:

நன்றி:டாக்டர் ஸ்ரீகலா பிரசாத், மகப்பேறு மருத்துவர், சென்னை:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்