தொகுப்பு

Archive for the ‘பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்


பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவரின் படிப்பு, உத்யோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் திருப்தியடைந்த பின்னரே திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனால், மணமான இந்த எட்டு மாதங்களில் அவருக்கும் எனக்கும் கேரக்டர், ரசனை அனைத்துமே நேர்மாறானதாக இருப்பதாக உணர்கிறேன். குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?”

டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர், வேலூர்:

“பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் மட்டுமல்ல… காதல் திருமணங்களிலும் மணமான சில வருடங்களுக்கு கணவன் – மனைவி இருவரின் எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம் ஏமாற்றம் அடைவது இயல்புதான். இதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டால், சமூகத்தின் பொதுத்தன்மையில் உங்களது தனிப்பட்ட குடைச்சலாக நீங்கள் பதற்றப்படுவது சற்றே மட்டுப்படும்.

இப்பிரச்னையைப் பொறுத்தவரை, சொல்வதற்கு எளிதானதும் நடைமுறையில் சற்றுக் கடினமானதுமான தீர்வு… அட்ஜஸ்ட் செய்து போவதுதான். விட்டுக் கொடுக்கும்போது இழப்பதைவிட பெறுவதே அதிகமாக இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முயலுங்கள். காலக்கெடுவை நெருக்காது, உங்களவரை புரிந்து கொள்வதையும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களை அறிவதையும் ஒரு புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தோடு மேற்கொண்டு பாருங்கள்.

அதேபோல, ‘உங்கள் கணவரின் ஆர்வங்கள், ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காண முயலுங்கள். அவரது எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிய முற்படும்போது, தானாக அவரும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைவார். இது ஒரு ரேடியோ ட்யூன் செய்யப்படுவதுபோல இல்லறத்தில் இயல்பாக மலரும்.

எல்லாவற்றையும்விட, நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது முழுமையாகக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களின் இந்த எல்லா முயற்சிகளும் பலன் தரத் தவறினால், குடும்ப நல ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் உங்கள் எதிர்பார்ப்புகளை, சங்கடங்களை எல்லாம் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு பக்குவத்துடன் அடையாளம் காட்டலாம்.

‘எல்லா விஷயங்கள்லயும் அவரும் நானும் நேரெதிர்…’ என்று கவலைப்படும் பெண்கள், இறுதியாக இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘ஐடியல் பார்ட்னர்கள்’ சினிமாவில், சீரியலில் மட்டுமே அமைவார்கள். நடைமுறையில், ஒருமித்த ரசனை உள்ள தம்பதியரைவிட வெவ்வேறு தளங்களில் ரசனை உள்ளவர்களின் தாம்பத்யமே வெகுகாலத்துக்கு சுவாரஸ்யமளிக்கும். ஆம்… ஒருமித்த ரசனைகள் நாள்போக்கில் புதுமையின்றி போரடித்துப் போகலாம். எனவே, புலம்பலை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் புரிதலை துரிதமாக்குவதன் மூலம் உங்களை செம்மையான வாழ்க்கைத் துணையாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்!”

‘கிண்டலுக்கு ஆளாகும் கீச்சுக் குரல்… கவர்ச்சிக் குரலாக வழி என்ன?’

“என் மகள் சிறுவயதிலிருந்தே சற்று கீச்சுக்குரலாக பேசுவாள். இப்போது அவள் பணியாற்றும் அலுவலகத்தில் அது பரிகாசத்துக்கு உரியதாகியிருக்கிறது. ‘டீம் லீடர்’ பொறுப்பில் இருக்கும் அவளுக்கு குரலில் கனமும் கச்சிதமும் அவசியம் என்று மேலதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். குரல் மேம்பட மருத்துவத் தீர்வு இருக்கிறதா?”

டாக்டர் ஆர்.சையீத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

“உங்கள் மகளின் பிரச்னை, பிறவிக்கோளாறா… இல்லை, இடையில் வந்ததா என்ற நீங்கள் குறிப்பிடவில்லை. எனினும் இதுபோன்ற குரல்நாண் தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் ‘ஸ்ப்ரோபோஸ்கோப்பி’ (Sproboscopy) என்ற சிறிய பரிசோதனை மூலம் அடையாளம் காணலாம். தேவையெனில், போனோ சர்ஜரி (Phono surgery) என்ற அறுவை சிகிச்சை மூலமும், அதைத் தொடர்ந்த ஸ்பீச் தெரபி மூலமும் சராசரி குரலுக்கு முயற்சிக்கலாம். இந்த சிகிச்சை வழிமுறைகள் பெரும்பாலும் ஆண் குரல் வாய்க்கப் பெற்ற பெண்களுக்கு, சராசரி குரலை மீட்க மேற்கொள்ளப்படுவதைப் போன்றது. எனவே, உடனடியாக ஒரு காது, மூக்கு, தொண்டை மருத்துவர் உதவியுடன் பிரச்னைக்கான மருத்துவத் தீர்வை அணுகுங்கள்.

சிறப்பான பேச்சு என்பதன் பின்னணியில் குரல்நாண் அதிர்வு, நாக்கு சுழற்சி, உதடுகளின் ஒத்துழைப்பு, மொழியின் ஆளுமை, சொற்பிரயோக பயிற்சி என பல அம்சங்கள் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குரல் தொடர்பான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல்… உள்ளார்ந்த ஆளுமை, தலைமைப் பண்பில் துடிப்பு இவற்றையும் தேவையைப் பொறுத்து தனிப்பயிற்சிகள் மூலம் உங்கள் மகளுக்குக் கொடுப்பதன் மூலம், அவரது குரலில் உரிய மாற்றத்தைப் கொண்டுவர முயற்சி எடுங்கள்.

நன்றி:-

டாக்டர். டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர், வேலூர்:

டாக்டர் ஆர்.சையீத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்