தொகுப்பு

Archive for the ‘பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்

ஜூலை 11, 2010 1 மறுமொழி

சின்னக் குழந்தைக்கு எண்ணெய் குளியலா?

‘‘என் தங்கை மகள் பதினோரு மாதக் குழந்தை. பிறந்தது முதலே அடிக்கடி சிறுநீர் கழித்தபடி இருக்கிறாள். ஜட்டியை மாற்றிய சில நிமிடங்களிலேயே நனைத்து விடுகிறாள். இதனால், அந்த இடமே உப்புநீரில் ஊறியதுபோல் தோலுரிந்து புண்ணாகிவிடுகிறது. அடிக்கடி அவள் சிறுநீர் கழிக்காமல் இருக்கவும் புண் நிரந்தரமாக குணமாகவும் வழி சொல்லுங்கள்.

மேலும், தலையை சொரிந்து சொரிந்து அவளுக்கு புண்ணாகிவிட்டது. பேபி ஹேர் ஆயில் தடவுகிறோம். பேபி ஷாம்புதான் போடுகிறோம். முதல் ஏழு மாதங்களுக்கு காய்ச்சிய மருதாணி, கறிவேப்பிலை எண்ணெயைத் தடவினோம். அதனால் இப்படி பிரச்னை ஆகியிருக்குமா? விளக்கம் ப்ளீஸ்…’’

டாக்டர். ஜெ.விஸ்வநாத், குழந்தை நல மருத்துவர், சென்னை:

‘‘பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால்தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறாள் என்று நினைக்கிறேன். குழந்தைக்கு என்ன பால் தருகிறீர்கள் என்று தெரிய வில்லை. பசும் பால் அல்லது ஆவின் பால் தருவதாக இருந்தால், அதனுடன் தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. டின் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும்.

குழந்தையின் புண் குணமாக, குழந்தை நல மருத்துவரை அணுகி, அவர் தரும் ஆயின்மெண்டைத் தடவி வாருங்கள். நிச்சயம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இறுக்கமான உடைகளை அணிவிப்பதைத் தவிருங்கள். அடுத்தது, குழந்தையின் தலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை… இதற்கு ‘சட்டிப் பத்து’ என்று பெயர். இது எண்ணெய்ப் பசை, அழுக்கு, தலையில் போடும் முகப்பவுடர், பூஞ்சைக் காளான் (ஃபங்கஸ்) இவையெல்லாம் கலந்த இன்ஃபெக்ஷனால் ஏற்படுவது. இதற்கு ஆன்ட்டி ஃபங்கஸ், ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஸ்டீராய்டு கலந்த ஆயின்மெண்டைத் தடவினால் சரியாகிவிடும்.

நீங்கள் கருதுவதுபோல, மருதாணி எண்ணெய், கறிவேப்பிலை எண்ணெய் போன்றவற்றை உபயோகித்ததாலும் தலையில் புண் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. சிலர், குழந்தையின் தலையில் முகப் பவுடரைப் போட்டு விடுவார்கள். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே. இந்த பவுடர், தலையில் உள்ள சின்னஞ்சிறு துவாரங்களை அடைத்துவிட வாய்ப்புண்டு.

பொதுவாக, குழந்தை பிறந்து மூன்றாண்டுகளுக்கு எண்ணெய் குளியலே கூடாது. வாரம் ஒருமுறை ஷாம்பு குளியலே போதுமானது. ‘கண்ணீர் வராத பேபி ஷாம்பு’ என்றே கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துங்கள். விரைவில் பலன் கிடைக்கும்.’’

‘‘எனக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கிறது என மருத்துவர் சொன்னார். இதனால், மாதவிலக்கு சமயங்களில் அரிப்பு இருக்கிறது. மேலும், அந்தப் பகுதி வீக்கத்துடன் காணப்படுகிறது.

அரிப்பு இருக்கும் சமயத்தில், டாக்டர் பரிந்துரை செய்த ஒரு க்ரீமை தொடர்ந்து மூன்று தினங்கள் உபயோகிக்கிறேன். உடனே, அரிப்பு குறைந்தாலும் அடுத்த மாதவிலக்கின்போது மீண்டும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் என் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது. மாத்திரைகளையும் க்ரீமையும் எடுத்தால்தான் கட்டுப் படுகிறது.

என் வயது 40. என் கணவருக்கு 43. இதற்கு நிரந்தரத் தீர்வு கூறவும்.’’

டாக்டர். ஹேமலதா, மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை:

‘‘பிறப்புறுப்பில் அரிப்புக்கான பொதுவான காரணங்கள் மூன்று. அவை… நுண்ணுயிர்க்கிருமிகள், அலர்ஜி மற்றும் சர்க்கரை வியாதி. இவை ஒவ்வொன்றையும் எப்படிக் கண்டறிவது, எப்படி குணமாக்குவது என்று பார்க்கலாம்.

நுண்ணுயிர்க்கிருமிகள்… அதாவது, ஃபங்கல் அல்லது பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய வஜினல் ஸ்மெர் அல்லது வஜினல் ஸ்வாப் கல்ச்சர் அண்ட் சென்ஸிடிவிடி (Vaginal smear (or) vaginal swab culture and sensitivity) என்ற சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் மாத்திரை, க்ரீம்கள் மூலமான சிகிச்சையை நீங்களும் உங்கள் கணவரும் தொடர்ந்து 14 நாட்களுக்கு மேற்கொண்டாலே முழு நிவாரணம் பெறலாம்.

அடுத்தது, அலர்ஜி. மாதவிலக்கின்போது சரியான பராமரிப்பின்மை, சுத்தமற்ற உள்ளாடைகள், சில சோப்புகள், கணவர் உபயோகிக்கிற காண்டம் என்று அலர்ஜி ஏற்பட பல காரணங்கள் உண்டு. இவற்றில் எது காரணம் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் பரிசோதிக்கலாம்.

மூன்றாவது, சர்க்கரை நோய்… உங்களுக்கு வயது நாற்பதாகிவிட்டதால் சர்க்கரை வியாதிக்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. சர்க்கரை வியாதி இருக்கிறதா என்று பரிசோதித்து, நோய் இருப்பின் அதற்கான சிகிச்சை எடுங்கள். அரிப்பு சரியாகிவிடும்.

இந்தக் காரணங்களைத் தவிர, வல்வா (vulva _ உதடு போன்ற, இருபக்கமும் உள்ள பகுதி) பகுதியில் தொற்று இருந்தாலும் அரிப்பும், வீக்கமும் இருக்கும். அதற்கு ‘ஸ்கின் பயாப்ஸி’ டெஸ்ட் செய்து, அதன் அடிப்படையில் சிகிச்சை பெறவேண்டும். இந்த நோய்த் தொற்று இருந்தால் குணமாக சிறிது காலம் பிடிக்கும்.

மேலும், கான்சரின் ஆரம்ப அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான டெஸ்ட்டையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பாப்ஸ்மெர் (Papsmear) எனப்படுகிற அந்த டெஸ்ட்டையும் உடனடியாக செய்து, கர்ப்பப் பையில் ஏதேனும் புண் உள்ளதா என்று கண்டறிந்து, சிகிச்சை பெறவேண்டும்.’’

‘‘நான் அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொண்டதால் என் கர்ப்பப் பையின் திசுக்கள்அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இப்போது ‘பி.எஃப்.ஆர்.’ ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். அது என்ன ஆபரேஷன்? அதைச் செய்தால் அதிக நாள் ஓய்வெடுக்கவேண்டுமா?’’

டாக்டர். ஜெயம் கண்ணன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

‘‘அடிக்கடி அபார்ஷன் செய்தவர்களுக்கும் நிறைய குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் பெண்ணுறுப்புப் பாதை தளர்ந்துபோயிருக்கும். தும்மினால்கூட அவர்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறி, வேதனைப்படுவார்கள். இந்தப் பாதையை இறுக்கமாக்க செய்யப்படுவதுதான் பி.எஃப்.ஆர். (P.F.R- Pelvic Floor Repair) ஆபரேஷன்!

இந்த ஆபரேஷனுக்குப் பிறகு 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டியிருக்கும். 3 வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும். அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. இந்த ஆபரேஷனால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாது.’’

நன்றி:-

டாக்டர். ஜெ.விஸ்வநாத், குழந்தை நல மருத்துவர், சென்னை:

டாக்டர். ஹேமலதா, மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை:

டாக்டர். ஜெயம் கண்ணன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை:

டாக்டர் கே.ராஜாசிதம்பரம், பொது அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்