தொகுப்பு

Archive for the ‘பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள் – பொடுகு வெரிகோஸ் வெயின்ஸ்


பொல்லாத பொடுகுக்கு என்னதான் தீர்வு?“கல்லூரியில் படிக்கும் என் மகன் பொடுகுத் தொல்லையால் மிகவும் அவதியுறுகிறான். வீட்டு மருந்துகள், பொடுகு எதிர்ப்பு ஷாம்புகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. பொடுகு, தொற்றக்கூடியது என்பதால், கல்லூரியில் பலர் தன்னிடமிருந்து ஒதுங்குவதாக வருந்துகிறான். இதற்கு தீர்வு என்ன?”

டாக்டர் க.உதயசங்கர், தோல்நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி


“நீங்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, தலையை பாதிக்கும் ‘சோரியாசிஸ்’ வகையை தவறுதலாக ‘பொடுகு’ என்று சுயமருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பல அடுக்குகள் கொண்ட தோலின் மேற்பகுதி உரிவது வழக்கம்தான். ஆனால், அது மிக அதிகமாக இருந்தால் ‘சோரியாஸ்’ பாதிப்பு என அடையாளம் கொள்ளலாம். பரம்பரை, சுற்றுச்சூழல் போன்றவைதான் சோரியாசிசுக்கான பொதுவான காரணிகள். ரத்த அழுத்தம், மலேரியா, மனநல சிகிச்சை போன்றவற்றுக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் அது ஏற்படலாம். குறிப்பாக டீன்-ஏஜில் உள்ளவர்களுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சோரியாஸ் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, அதற்கான சிகிச்சையைப் பெறலாம். பொதுவாக தோல் நோய் நிபுணர் பரிந்துரைக்கும் பிரத்யேக ஷாம்புவை தலையில் 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வந்தாலே விரைவில் சோரியாஸிஸ் கட்டுக்குள் வரும். இரவில் தடவிக்கொள்ளும் லோஷன்களையும் பயன்படுத்தலாம். அரிப்பு அதிகமிருந்தால் கட்டுப்படுத்த மாத்திரைகள் இருக்கின்றன.

உங்கள் மகனின் பிரச்னை பொடுகுதான் என மருத்துவரால் அடையாளம் காணப்பட்டால், அதை நிவர்த்திக்கும் எளிய மருந்துகள் இருக்கின்றன. குறிப்பாக, பருவ வயதினருக்கு எண்ணெய் சுரப்பிகள் ஓவர் டைம் வேலை செய்வதால், தலையின் மேற்பகுதியிலிருக்கும் ‘ஈஸ்ட்’டுடன் இந்த எண்ணெய் சுரப்புகள் சேர்ந்து, பொடுகைத் தோற்றுவிக்கின்றன. இதற்கு டாக்டர் பரிந்துரைக்கும் பொடுகு எதிர்ப்பு ஷாம்புகளை குறைந்தது வாரம் இருமுறை தலை குளியலுக்கு உபயோகித்து வந்தாலே கட்டுக்குள் வந்துவிடும்.

சோரியாசிஸ் தொற்றக்கூடியது அல்ல. ஆனால், பொடுகு சுலபத்தில் தொற்றக்கூடியது. எனவே, பொடுகு விடுபடும் வரை… சீப்பு, துண்டு போன்றவற்றை தனித்தனியாக பயன்படுத்துவதே நல்லது.”

“நாற்பது வயதாகும் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. ஆனால், கட்டுக்குள்தான் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கால் ஆடுசதையில் நரம்புகள் முடிச்சு முடிச்சாக தோன்றி பயமுறுத்துகின்றன. ஆரம்பத்தில் வலி ஏதும் இல்லாது பார்வைக்கு மட்டுமே உறுத்தலாக தெரிந்த இந்த முடிச்சுகள், இப்போது லேசான விறுவிறு வலியுடன் தென்படுகின்றன. டெக்ஸ்டைல்ஸ் பணிச்சூழலில் நான் நின்றபடியே இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்த முடிச்சுகள் ஆபத்தானவையா… மரபு சார்ந்தவையா… இவற்றிலிருந்து குணம் பெறுவது எப்படி?”

டாக்டர் கே.ராஜாசிதம்பரம், பொது அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

“அதை, பெரும்பாலானவர்கள் நரம்பு முடிச்சுகள் என்றே நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அதெல்லாம் ரத்த நாள முடிச்சுகள். மருத்துவ வழக்கில் இதை ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ (Varicose Veins) என்கிறார்கள்.

இதயத்துக்கு அருகில் இருக்கும் அவயங்கள் மற்றும் இதயத்துக்கு மேலிருக்கும் உடல் பாகங்களில் இருந்து இதயத்துக்கு ரத்தம் வந்து சேர்வது சுலபமாக நடக்கும். ஆனால், இடுப்புக்கு கீழே உள்ள ரத்த நாளங்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டியிருப்பதால், இதுபோன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆக்ஸிஜன் தேவையான அளவு கிடைக்காத கால் தசைகள், தங்கள் இயல்பான இறுக்கம் குறைந்து தொய்வடையும்போது இந்த ரத்தநாள முடிச்சுகள் தோன்றுகின்றன.

வாழ்க்கை மற்றும் வேலைச்சூழல்தான் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்ப்பவர்களுக்கும், படுத்தபடுக்கையாக இருப்பவர்களுக்கும், ‘ஒபிசிட்டி’ எனப்படும் அதீத உடல்பருமன் உள்ளவர்களுக்கும், வயிற்றில் ஏதேனும் கட்டி இருப்பவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரத்தநாள முடிச்சுகள் உருவாகக்கூடும்.

இந்த முடிச்சுகள் கண்ணுக்குத் தெரியாத ஆரம்ப நிலையிலேயே காலில் சற்று பிடித்து இழுப்பது போன்ற அறிகுறிகளை காட்டும். முடிச்சுகள் புலனாகும்போது, தோலின் தன்மையும் நிறமும் மாறும். நாளாக, அரிப்பும் ரணமும் வரலாம். மருத்துவர் ‘டாப்ளர்’ ஸ்கேன் மூலம் உங்களது பாதிப்பின் தீவிரத்தை அடையாளம் காண்பார். கட்டிகள் தொடர்பான ஐயத்துக்கு வயிற்றையும் ஸ்கேன் பார்த்துவிடுவது நல்லது. பாதிப்பு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், ‘க்ரீப் பாண்டேஜை’ மூன்று மாதத்துக்கு அணியும்படி அறிவுறுத்தப்படுவார்கள். இரவு படுக்கும்போது, கால்களை உயரமான இடத்தில் வைப்பது நல்லது. அதற்கு, தலையணைகளை பயன்படுத்தலாம்.

நாள்பட்ட தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி. ஏனெனில்… இந்த முடிச்சுகள் தோற்ற உறுத்தல் மட்டுமல்ல, காலின் திறன் மற்றும் காயம் ஏற்பட்டால் சுலபத்தில் ஆறாதது என பொது உடல்நலக் கோளாறுகளையும் தந்துவிடும். அதிலும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கூடுதல் ஆபத்து. மேல்தொடையில் செய்யப்படும் சிறு ஆபரேஷன் மூலம் விடிவைப் பெற முடியும். தோற்றப் பொலிவுக்காக கால் தசையில் இருக்கும் முடிச்சுகளையும் அகற்றிக் கொள்ளலாம்.

ரத்த நாள முடிச்சுகளுக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்ற போதும், உரிய தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் இதைத் தவிர்த்துவிடலாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதும், மிகை உடல் பருமன் வராது தற்காத்துக்கொள்வதும் அவசியம். முக்கியமாக நீண்ட நேரம் நின்றவாறான பணிச்சூழலில் இருப்பவர்கள் அவ்வப்போது உட்கார்வதும் கால்களை மடிப்பதும் அவசியம்.”

நன்றி:-
டாக்டர் க.உதயசங்கர், தோல்நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி

டாக்டர் கே.ராஜாசிதம்பரம், பொது அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:


நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்