தொகுப்பு

Archive for the ‘பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்’ Category

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள் – மனவளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாடு, நகம் கடிக்கும் பழக்கத்தால், அபார்ஷன், காது கேட்கும் திறன், விரை வீக்கம்

ஏப்ரல் 26, 2010 1 மறுமொழி

பார்வையில் குமரி… பழக்கத்தில் குழந்தை!

‘‘எனது தங்கைக்கு வயது 19. இந்த வயதுக்குரிய உடல் வளர்ச்சி இருந்தாலும் மனதளவில் இன்னும் முதிர்ச்சி இல்லை. அவளால் சமூக நடப்புகளைப் புரிந்து கொண்டு செயல்பட முடியவில்லை. டாக்டரிடம் காண்பித்தபோது, மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதாகக் கூறினார். அவளுக்கு எல்லா விஷயங்களும் புரிகிறது. ஆனால், அதற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஏழாம் வகுப்புக்கு மேல் அவளால் பள்ளிக்கும் போக முடியவில்லை.

படிப்பும் இல்லாமல் வீட்டுவேலையும் செய்யாமல், ஒரு பெண் தன் எதிர் காலத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்? இவளை சரிப்படுத்த நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஏதாவது பயிற்சி மையத்தில் சேர்க்கலாமா? மதுரையில் இதற்கான சிறப்பு மருத்துவர் இருந்தால் தெரிவியுங்கள்…’’

டாக்டர். தாரா, மனநல நிபுணர், சென்னை:

‘‘உங்கள் தங்கைக்கு இருப்பது மனவளர்ச்சிக் குறைபாடுதான். சிறு வயதிலேயே முறையான சிகிச்சை கொடுத்திருந்தால், ஓரளவுக்கு அவரைத் தயார்ப் படுத்தியிருக்கலாம். இப்போது 19 வயது ஆகிவிட்டதால், இதற்குமேல் முழுமையாக அவரைச் சரிப்படுத்துவது கஷ்டமே. அதற்காக நீங்களோ, உங்கள் பெற்றோரோ மனம் தளர்ந்துவிட வேண்டாம். உங்கள் தங்கைக்கு சில பயிற்சிகள் தருவதன் மூலம் ஓரளவு குணமாக்க முடியும்.

இதுபோன்ற குறைபாடு உள்ளவர் களுக்கு, மதுரையில் ‘ஸ்ருஷ்டி’ என்னும் மறுவாழ்வு மையத்தில் பலவகை பயிற்சிகள் தருகிறார்கள். உங்கள் தங்கை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு, தினசரிப் பழக்க வழக்கங்களை அங்கே அவருக்குக் கற்றுத் தருவார்கள். இதற்காக உங்கள் தங்கை அங்கேயே தங்கவேண்டியிருக்கும்.

அவரைப் பரிசோதித்தபின், மருத்துவரே என்ன வகையான சிகிச்சையும் பயிற்சியும் தேவை என்று கூறுவார். நம்பிக்கையுடன் இருங்கள்’’

___________________________________________________________________________________

‘‘எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது என் உடல்நலனை உத்தேசித்து, என் கணவர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துகொள்ள தீர்மானித்து இருக்கிறார். ஆனால், அதில் அவருக்கு சில சந்தேகங்கள்…

குடும்பக் கட்டுப்பாடு செய்தால் அது தாம்பத்ய உறவைப் பாதிக்குமா? சிகிச்சைக்குப் பிறகு ஆண் உறுப்பிலிருந்து விந்து வெளியேறாதே… பிறகு எப்படி திருப்தியான வாழ்க்கை இருக்க முடியும்? ஆண்களுக்கு அறுவைசிகிச்சை எளிமை யானதா? எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டும்? எந்தெந்த முறைகளில் இந்த சர்ஜரி செய்யப்படுகிறது? எது சிறந்ததது? சற்று விரிவாகவே பதில் சொல்ல வேண்டுகிறேன்…’’

டாக்டர். சபிதா ஸ்ரீதரன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை:

‘‘உங்கள் கணவர் ‘வாசக்டமி’ என்கிற அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் ‘கர்ப்பம் தரிக்குமே’ என்ற பயம் இருக்காது என்பதால் செக்ஸ் உணர்வு கூடுமே தவிர, குறையாது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு விந்து வெளியேறாது என்பதிலும் உண்மையில்லை. அந்த திரவத்தில் கரு உருவாக்கும் உயிரணுக்கள் இருக்காது, அவ்வளவுதான்!

இந்த அறுவைசிகிச்சை எளிமையானதுதான். இதற்காக மருத்துவமனையில் ஒரே ஒரு நாள்தான் தங்கவேண்டியிருக்கும். வாசக்டமி தவிர, வேறு எந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையும் ஆண்களுக்குக் கிடையாது.’’

___________________________________________________________________________________

‘‘நகம் கடிக்கும் பழக்கத்தால், எனது நகங்கள் உடைந்துபோய் பொலிவின்றி காட்சியளிக்கின்றன. வளரவும் இல்லை. இரண்டு விரல்களில் மட்டும்தான் இந்தப் பாதிப்பு என்றாலும், அவற்றால் என் கையே அசிங்கமாக உள்ளதாகத் தோன்றுகிறது. டாக்டரிடம் காட்டியபோது, ‘Tinaderm solution’ என்ற மருந்தை உபயோகிக்க சொன்னார். ஆனால், அது பெரிய அளவில் பலன் தரவில்லை. வேறு ஏதேனும் சிகிச்சை முறை உள்ளதா?’’

டாக்டர்.கே.முத்துசாமி, தோல் மருத்துவ நிபுணர், சேலம்:

‘‘உங்களுக்கு ஏற்பட்டுள்ளது காளான் தொற்றுநோயாக இருக்கலாம். இந்த நோயின் பாதிப்பு படிப்படியாக எல்லா விரல்களிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த நோயை ‘ஸ்கிராப்பிங்’ என்கிற பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு ஏற்பட்டுள்ளது காளான் தொற்றுநோய் எனில் அதை மருந்து, மாத்திரை மூலம் முழுமையாகக் குணப் படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உடனடியாக தோல் மருத்துவ நிபுணரைச் சந்தித்துப் பேசுங்கள். வெறும் ஆயிண்ட்மென்ட் டால் இதைக் குணப்படுத்தவே முடியாது. தொடர்ந்து, இரண்டு மாத காலத்துக்கு ஆயிண்ட்மெண்ட்டுடன் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.’’

___________________________________________________________________________________

‘‘என் வயது 47. எனக்கு 22 வயதில் திருமணம் ஆனது. 23 வயதில் 3 மாத அபார்ஷன். 50 நாட்கள் தொடர் ரத்தப்போக்கு இருந்தது. சுத்தப்படுத்திய பிறகு பொறுக்கமுடியாமல் டாக்டரிடம் போக… ‘ஏன் உடனே வரவில்லை?’ என்று திட்டினார். பின் உடல் குணம் அடைந்ததும் பத்து மாதத்தில் குழந்தை பிறந்தது.

பிறகு 10 வருடம் கழித்து மீண்டும் அபார்ஷன். பின் 20 நாளுக்கு ஒரு முறை மாதவிலக்கு. அதீத ரத்தப்போக்கு என்று தொடர்ந்தது. அப்படியே கஷ்டத்துடன் பல வருடங்கள் கழிந்தபிறகு சமீபத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் கர்ப்பப் பையை நீக்கினார்கள். அதனுடன் ஓவரீஸையும் எடுத்து விட்டார்கள். அதை எடுத்திருக்கக் கூடாதோ என்று என் மனதில் ஒரு எண்ணம்.

ஏனெனில், இந்த 5 மாதத்தில் என் முகத்தில் ஆங்காங்கே வரிகள் தெரிகின்றன. 5 மாதம் முன்பு இப்படியெல்லாம் இல்லை. இதைச் சரிசெய்ய க்ரீம் தடவலாமா? வேறு ஏதாவது டானிக் மாத்திரை உண்டா?’’

டாக்டர். புஷ்பா ராஜூ, மகப்பேறு நிபுணர், நெல்லை:

‘‘47 வயதான உங்களுக்கு கர்ப்பப் பையை எடுத்தபோது ஓவரீஸையும் சேர்ந்து எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. அவற்றை எடுக்காமல் விட்டால், அதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்பட்டு மீண்டும் ஆபரேஷன் செய்யக்கூட நேரிடலாம். ஓவரீஸ் எடுத்ததால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க, நீங்கள் எடுத்துக் கொள்கிற மாத்திரைகளே போதுமானவை.

முகத்தில் ஏற்படும் கருப்பு கோடுகள், கண் களைச் சுற்றி கருவளையம் போன்றவை மெனோபாஸின் விளைவுகளாகும். அதைக் குறைப்பதற்கு ‘ஆலோவேரா’ என்கிற பொருள் அடங்கிய பல இயற்கைப் பொருட்கள் கிடைக்கின் றன. இவற்றைத் தடவுவதால் அந்தப் பிரச்னைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

மேலும், புரதம் சேர்ந்த உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. தினமும் யோகாவும் தியானமும் செய்வதால் சோர்வு, எலும்பு பலவீனம் போன்றவற்றை பெருமளவிற்குக் குறைக்கலாம். தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்த்து சந்தோஷமாக இருங்கள்…’’

___________________________________________________________________________________

‘‘எனக்குக் கடந்த 5 ஆண்டு களாக இடது காதில் சத்தம் கேட்கிறது. தலைச்சுற்றல் பிரச்னை வேறு. மருத்துவர் பல பரிசோதனைகள் செய்து இடது காது 70 சதவிகித அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்ப தாகக் கூறினார். மேலும், வலது காதிலும் 11 சதவிகிதம் பாதிப்பு இருப்பதாக சொன்னார். காதுக்குக் கருவி பொருத்த முடியுமா? எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். அதை எடுப்பதால், வேறு ஏதேனும் ஆபத்து வந்துவிடாதே?’’

டாக்டர். ரீட்டா ரூபி ஆல்பர்ட், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், வேலூர்:

‘‘காது சரியாகக் கேட்காததும், ஒரு காதில் மட்டும் சத்தம் கேட்பதும் மெனிரியஸ் எனப்படுகிற நோயின் அறிகுறிகள்! காதில் உள்ள மூன்று பகுதிகளான வெளிக்காது, நடுக்காது, உள்காது என்பதில் உள்காதில்தான் இந்த நோய் ஏற்படுகிறது. உள்காதில்தான் கேட்கும் திறனுக்கான உறுப்பும் உடலின் நடவடிக்கைகளுக்கு ஏற்றபடி பேலன்ஸ் பண்ணக்கூடிய நரம்புகளும் உள்ளன, இங்கே நீர்க்கோர்வை ஏற்படுவதால், காது கேட்கும் திறன் குறைவதும் தலைச்சுற்றலும் ஏற்படுகிறது.

இந்த இடத்தில் நீர்க்கோர்வை ஏற்பட தைராய்டு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், அலர்ஜி போன்ற பல காரணங்கள் உண்டு.

காதுக்குக் கருவி பொருத்தலாம். ஆனால், அது முழுமையாக பலனளிக்கும் என்று உறுதி சொல்லமுடியாது. எம்.ஐ.ஆர். ஸ்கேன் எடுப்பது நல்லது. சரியான காரணத்தை கண்டுபிடித்து ஓரளவாவது சரிசெய்துகொள்ள அது உதவும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதால் வேறு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. பயப்பட வேண்டாம்!

தலைச்சுற்றல் இருப்பதால், உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்பளம், மிக்சர், ஊறுகாய், கருவாடு போன்றவற்றை முழுக் கத் தவிர்த்துவிடுங்கள். இருட்டில், தனியே வெளியே போகாமல் இருப்பது நல்லது.’’

___________________________________________________________________________________

‘‘என் மகனுக்கு வயது 21. அவனுக்கு விரையில் வீக்கம் என்று அவனே டாக்டரிடம் காட்டி, ஸ்கேன் செய்து பார்த்து, மாத்திரை சாப்பிடுகிறான். ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டால், சரியான பதில் தருவது இல்லை. இப்போது யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. எப்போதும் கண் கலங்கிய நிலையில் பதற்றத்துடன் இருக்கிறான். அவனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய் திருக்கும் அத்தை மகளிடம்கூட முன்பு போல சரியாகப் பேசுவது இல்லை. அவனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ‘வெரிக்கோசில்’ என்று உள்ளது. அப்படி என்றால் என்ன? அவன் திருமணம் செய்து கொள்ளலாமா? அவனது பிரச்னைக்கு மாத்திரை தவிரவும் ஏதேனும் சிகிச்சை உண்டா?’’

டாக்டர். ஞானராஜ், சிறுநீரக சிறப்பு நிபுணர், வேலூர்:

‘‘உங்கள் மகனுக்கு ஏற்பட்டிருக்கிற குறைபாட்டின் பெயர் வெரிக்கோசில் (Varecocele). அதாவது, விரைக்குப் போகிற ரத்தக் குழாய் பெரிதாக இருக்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. அது குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். மற்றபடி, அவர் திருமணம் செய்துகொள்ள எந்தத் தடையுமில்லை. இந்தக் குறைபாட்டினால் தாம்பத்ய உறவு எந்தவகையிலும் பாதிக்கப்படாது.

முதலில் உங்கள் மகனை சிறுநீரக மற்றும் மனநல மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்குப் பேசத் தயக்கம் இருந்தாலோ, அவர் தயங்கினாலோ, அவருடைய நெருங்கிய நண்பர் யாரிடமாவது நீங்களே பேசி, அவரை ஆலோசனை பெறச் செய்யுங்கள்.’’

****************************************************************************************

நன்றி:-டாக்டர். தாரா, மனநல நிபுணர், சென்னை:

நன்றி:-டாக்டர். சபிதா ஸ்ரீதரன், மகப்பேறு சிறப்பு மருத்துவர், மதுரை:

நன்றி:-டாக்டர்.கே.முத்துசாமி, தோல் மருத்துவ நிபுணர், சேலம்:

நன்றி:- டாக்டர். ரீட்டா ரூபி ஆல்பர்ட், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், வேலூர்:

நன்றி:- டாக்டர். புஷ்பா ராஜூ, மகப்பேறு நிபுணர், நெல்லை:

நன்றி:-டாக்டர். ஞானராஜ், சிறுநீரக சிறப்பு நிபுணர், வேலூர்:

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள் – மனவளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாடு, நகம் கடிக்கும் பழக்கத்தால், அபார்ஷன், காது கேட்கும் திறன், விரை வீக்கம்

########################################################################

பிரிவுகள்:பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,