தொகுப்பு

Archive for the ‘கோடை பானங்கள்’ Category

கோடை பானங்கள் – நங்கநல்லூர் பத்மா

ஏப்ரல் 2, 2010 1 மறுமொழி

தகிக்கும் வெயிலைப் பற்றிக் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், ‘அடிச்சோம்ல 100 ரன்’ என ஓடிக்கொண்டே இருக்கும் குட்டீஸ்கள்…

‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கத்தான் சம்மர் லீவே விட்டிருக்காங்க தெரியுமா?’ என அக்னி நட்சத்திர வெயிலில்கூட அலப்பறை செய்யும் வாண்டூஸ்கள்…

– இவர்களெல்லாம் ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…’ என்று கோடையைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், ஒரு பருவத்துக்குப் பின் ‘வெயில்’ என்றாலே எல்லோருமே அலற ஆரம்பித்து விடுகிறோம். வயிற்றுப்போக்கு, மயக்கம், நீர்க்கடுப்பு… வெயில் கட்டி, தோல் வறட்சி, தேகம் கறுத்தல்… என அக மற்றும் புறப் பிரச்னைகள் வாட்டி எடுப்பதுதான் காரணம்.

வெயில் காலத்தில், வியர்வை காரணமாக உடலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுவதுதான் பெரும்பாலான பிரச்னைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது!

“இதிலிருந்தெல்லாம் தப்பிக்க, நம் வீட்டுச் சமையலிலேயே தீர்வுகள் இருக்கின்றன” என்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.

”கோடையில் பருகுவதற்கென்றே ஸ்பெஷலான, எளிமையான பல பானங்கள் நம் தாத்தா – பாட்டி காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கின்றன. அவையெல்லாம், நமக்கு அருகிலேயே, உடனடியாக, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள், தானியங்களைக் கொண்டு வீட்டில் தயாரித்துவிடக் கூடியவைதான். காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் அதனையெல்லாம் மறந்து கொண்டே இருக்கிறோம்” என்று சொல்லும் பத்மா, சிறப்பான மருத்துவக் குணம் கொண்ட அத்தகைய சூப்பர் ஸ்பெஷல் பானங்கள் தயாரிக்கக் கற்றுத் தருகிறார்.

வெயில் ஸ்பெஷல் பானங்களைக் குடிங்க… வெயிலோடு விளயாடுங்க!

குறிப்பு: எளிமையான இந்த பானங்களில் சிலவற்றை ஐஸ் சேர்த்துக் குடிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரையில் ஐஸ் என்பதை சேர்க்காமல் இருப்பதே அதிக ஆரோக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கேரட் ஜூஸ்

தேவையானவை: கேரட் – 2, பாதாம் பருப்பு – 4, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – அரை லிட்டர், கல்கண்டு – 100 கிராம்.

செய்முறை: கேரட்டைத் தோல் சீவிக் கழுவி, துண்டுகளாக்கி வேக வைக்கவும். பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் கல்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி பருக லாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

குறிப்பு: கோடைக்காலத்தில் நிறைய குழந்தைகள் எதையுமே சாப்பிடாமல் அடம் பிடிக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஜூஸ் அருமையான உணவு. இதன் மூலமே நிறைய சத்துக்கள் கிடைத்துவிடும். இது, விட்டமின்-ஏ சத்து நிறைந்தது!

ஜிஞ்சர் மோர்

தேவையானவை: மோர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ள லாம்.

குறிப்பு: இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!

கிர்ணி ஜூஸ்

தேவையானவை: கிர்ணிப்பழம் – 1, பால் – 500 மில்லி, சர்க்கரை – 100 கிராம்.

செய்முறை: கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.

மாதுளை ஜூஸ்

தேவையானவை: மாதுளம் பழம் – 1, சர்க்கரை – 100 கிராம், தேன் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப்.

செய்முறை: மாதுளம் பழத்தை தோல் உரித்து, முத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு: இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ்

தேவையானவை: வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள், மோர் – 500 மில்லி, உப்பு – சிறிதளவு.

செய்முறை: வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.

குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – ஒரு கப், இளநீர் – 1.

செய்முறை: நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கவும். மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, மீண்டும் தண்ணீர் சேர்க்கவும். பிறகு, தேன் சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

குறிப்பு: இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், நீரிழிவு நோய், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

ஜிஞ்சர்தனியா ஜூஸ்

தேவையானவை: இஞ்சி – அரை அங்குலத் துண்டு, தனியா – 4 டீஸ்பூன், தேன் – 4 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – 1.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு… தோல் சீவிய இஞ்சி, தனியாவை அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.

குறிப்பு: காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, அஜீரணம் நீங்கும்; நன்கு பசி எடுக்கும். இதை வாரம் ஒரு முறை குடிக்கலாம்.

தக்காளி ஜூஸ்

தேவையானவை: தக்காளி – கால் கிலோ, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – ஒரு கப் (அ) குளூக்கோஸ் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். தக்காளியைக் கழுவிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். சர்க்கரைக்குப் பதில் குளூக்கோஸ் சேர்க்கலாம்.

குறிப்பு: இது வெயிலினால் தோல் வறண்டு போவதை தடுக்கும்!

அன்னாசிபப்பாளி ஜூஸ்

தேவையானவை: அன்னாசி, பப்பாளி பழத் துண்டுகள் கலவை – ஒரு கப், சர்க்கரை, பால் – தலா ஒரு கப்.

செய்முறை: பப்பாளி, அன்னாசிபழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து பருகவும். பால் விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு: இரண்டு பழங்களும் சேர்வதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அன்னாசிப் பழம், உணவுக் குடலின் செயல்களை சீரமைக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியைத் தூண்டும்.

புதினா ஜூஸ்

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, தேன் – 4 டீஸ்பூன், இளநீர் – 1. உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன் சேர்த்துக் கலக்கவும். பருகுவதற்கு முன், இளநீர் சேர்த்துப் பருகவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், வியர்வையினால் உடம்பிலிருந்து இழக்கப்படும் தாது உப்புக்களையும், சத்துக்களையும் உடனே மீட்டுத் தரும். பித்தத்தினால் உண்டாகும் தலை சுற்றலைத் தடுக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.

ஃப்ரூட்ஸ்லெமன் ஜூஸ்

தேவையானவை: கொய்யாப்பழம், வாழைப்பழம் – தலா 1, உரித்த மாதுளம்பழ முத்துக்கள் – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – 1 கப்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்க வும். கொய்யாப்பழம், வாழைப்பழம், மாதுளை முத்துக்களைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பருகவும்.

குறிப்பு: இது, புளிப்பும் இனிப்பும் கலந்த வித்தியாசமான சுவையில் இருக்கும். எலுமிச்சம்பழத்துக்கு பதில் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்தும் அருந்தலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

ஃப்ரூட் லஸ்ஸி

தேவையானவை: ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் – தலா 1, ஸ்ட்ராபெர்ரி – 4, உலர்ந்த திராட்சை – 10, சர்க்கரை – ஒரு கப், புளிப்பில்லாத தயிர் – 200 மில்லி.

செய்முறை: வாழைப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கவும். ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கவும். ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கவும். ஆரஞ்சை சுளைகளாக உரித்து, கொட்டையை நீக்கிக் கொள்ளவும். எல்லா பழங்களையும் ஒன்று சேர்த்துக் கலந்து, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும். பிறகு தயிர், சர்க்கரை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் மிக்ஸியில் ஒரு முறை சுற்றியும் கொடுக்கலாம்.

குறிப்பு: வெயில் காலத்துக்கு ஏற்றது இந்த ஃப்ரூட் லஸ்ஸி. இது, உடல் சூட்டையும் நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

மல்டி வெஜிடபிள் ஜூஸ்

தேவையானவை: முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், முள்ளங்கித் துருவல் எல்லாம் சேர்ந்து – ஒரு கப், வெள்ளரித் துண்டுகள் – சிறிதளவு, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், இளநீர் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முட்டை கோஸ், கேரட், முள்ளங்கித் துருவலை வதக்கிக் கொள்ளவும். இவற்றுடன் வெள்ளரித் துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டவும். தண்ணீர் விட்டுக் கலந்து, மிளகுத்தூள், உப்பு, இளநீர் கலந்து பருகவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், டயட் பராமரிப்புக்கு உகந்தது! ரத்தத்தைச் சுத்தப்படுத்தி புத்துணர்ச்சி தரும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்!

சுரைக்காய் ஜூஸ்

தேவையானவை: சிறிய சுரைக்காய் – 1, மோர் – ஒரு கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது, உடல் சூட்டைக் குறைக்கும்… சிறுநீரைப் பெருக்குவதால் நீர்க்கடுப்பு பிரச்னை வராது.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி பழம் – 10, சப்போட்டா பழம் – 2, இளநீர் – ஒரு டம்ளர், சர்க்கரை – ஒரு கப்.

செய்முறை: கழுவிய ஸ்ட்ராபெர்ரி, தோல் உரித்த சப்போட்டாவை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை நன்கு வடிகட்டி, சர்க்கரை, இளநீர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜூஸ், தோல் வறட்சியைப் போக்கும்… புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

குக்கும்பர் ஜூஸ்

தேவையானவை: வெள்ளரிக்காய் – 1, புளிக்காத தயிர் – 1 கப், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 1, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அதைத் தயிருடன் கலந்து, உப்பு சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், வெயிலினால் தோல் வறட்சியாவதைத் தடுக்கும்.

பீட்ரூட்தர்பூசணி ஜூஸ்

தேவையானவை: தர்பூசணித் துண்டுகள் – 2 கப், பீட்ரூட் துருவல் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேன் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். கடாயில் பீட்ரூட் துருவலை லேசாக வதக்கவும். தர்பூசணித் துண்டுகளை விதை நீக்கி, வதக்கிய பீட்ரூட் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனை வடிகட்டி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, தேன் கலந்து அருந்தவும். விருப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்று வந்த பின்பும் இந்த ஜூஸை குடித்தால், நாள் முழுக்க எனர்ஜியுடன் வைத்திருக்கும். தர்பூசணி அடிவயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும்.

பாகற்காய் ஜூஸ்

தேவையானவை: பாகற்காய் – 200 கிராம், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், பனங்கல்கண்டு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாகற்காயை வில்லைகளாக நறுக்கி விதை நீக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். இதை ஆற வைத்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, தண்ணீர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பனங்கல்கண்டு போட்டுக் கலந்து பருகவும்.

குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… வயிற்றில் இருக்கும் குடல்புழு நீங்கி, நன்கு பசியெடுக்கும். மூச்சிரைப்பு, ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்தது.

நீராகாரம்

தேவையானவை: அரிசி – 200 கிராம், மோர் – 2 கப், சின்ன வெங்காயம் – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு, குக்கர் மூடியைத் திறந்து சாதத்தை எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் அதில் தண்ணீர் விடவும். காலையில் அப்படி செய்திருந்தால், மாலையில் சாதத்தை நன்கு கரைத்து மோர் விட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு போட்டு வைத்து கலக்கி வைத்து விடவும். பிறகு, வேண்டும்போது குடிக்கலாம்.

குறிப்பு: இரவே சாதத்தில் தண்ணீர் விட்டு காலையில் இவ்வாறு செய்தும் குடிக்கலாம். கோடைக்காலம் முடியும் வரை இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால்… உடல் சூட்டால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்கலாம். இதற்கென தனியாக சாதம் வைக்கத் தேவையில்லை. மிச்சப்படும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால்கூட போதும்.

பானகம்

தேவையானவை: புளி – 150 கிராம், வெல்லம் (அ) கருப்பட்டி – 200 கிராம், சுக்குப்பொடி – கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்து, வடிகட்டவும். வெல்லம் அல்லது கருப்பட்டியை நன்கு பொடித்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டால்… வேண்டும்போது பருகலாம்.

குறிப்பு: இது எனர்ஜி தரும் பானம். குளிர்ச்சிக்கு உத்தரவாதமானது. உடல் சூட்டை சட்டெனக் குறைக்கும் வல்லமை பெற்றது.

கேப்பைக் கூழ்

தேவையானவை: கேழ்வரகு – 200 கிராம், மோர் மிளகாய் – 4, கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மோர் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், மோர் சேர்த்து, கட்டியில்லாமல் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கிள்ளிய மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். அடிபிடிக்காமல் கிளறி, கூழ் பதத்துக்கு வந்ததும்… ஈரக் கையில் கூழைத் தொடும்போது.. கையில் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.

குறிப்பு: மோரில் கூழைக் கரைத்துக் குடித்தால் வயிறு சம்பந்தமான வெயில் கால நோய்கள் வராது.

நியூட்ரிஷியஸ் கஞ்சி

தேவையானவை: பார்லி – 4 டேபிள்ஸ்பூன், கோதுமை – 4 டேபிள்ஸ்பூன், சோளம் 4 டேபிள்ஸ்பூன், தினை – டேபிள்ஸ்பூன், கம்பு – 4 டேபிள்ஸ்பூன், கேழ்வரகு – 1 கப், பாதாம்பருப்பு – 10, முந்திரிப்பருப்பு – 10, சோயா – 1 கப், கொள்ளு -1 கப், பால் – ஒரு டம்ளர், வெல்லம் – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து கொள்ளவும். வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, நைஸாக அரைத்து, பிறகு ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். 4 டேபிள்ஸ்பூன் மாவுக்கு 1 டம்ளர் வீதம் தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கரைத்த மாவை விட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

குறிப்பு: வெயில் காலத்தில் வியர்வையினால் அதிகமான சத்துகள் உடலை விட்டு வெளியேறும். அதை இந்த கஞ்சி ஈடுகட்டும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இதமான கஞ்சி இது!

வடித்த கஞ்சி

தேவையானவை: அரிசி – கால் கிலோ, பனங்கல்கண்டு, வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு 5 பங்கு தண்ணீர் விட்டு சாதம் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். சாதம் வெந்ததும், கஞ்சியை வடிக்கவும். வடித்த கஞ்சியுடன் வெண்ணெய், உப்பு, பனங்கல்கண்டு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

குறிப்பு: இது கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. கர்ப்பக் காலத்தில் கால் வீக்கம் வராமல் தடுக்கும். கோடைக்காலத்தில் உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலியை இது நீக்கும்.

பார்லிஓட்ஸ் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ், பால் – தலா ஒரு கப், பார்லி – 100 கிராம், சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: பார்லியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்ததும், ஓட்ஸ் சேர்த்துக் கலந்து பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரை, ஏலக்காய்க்கு பதிலாக உப்பு, மோர் கலந்தும் குடிக்கலாம். கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது. இது, கோடைக்காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பை குறைக்கும்.

மூலிகை கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், ஓமம், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – 10, மோர் – ஒரு கப், சுக்குத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை பொன்னிறமாக வறுத்து ரவை போல உடைத்துக் கொள்ளவும். ஓமம், மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். உடைத்த அரிசியை கஞ்சி பதம் வரும் வரை வேக வைக்கவும். பொடித்து வைத்த ஓமம், மிளகு, சீரகம், உப்பு, சுக்குத்தூள் சேர்த்து, மோர் விட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: இது எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. வெயில் காலத்தில் நீர்க்கடுப்பு வராமல் இருக்க இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்!

ஸ்வீட் கார்ன்சோயா கஞ்சி

தேவையானவை: சோயா – 200 கிராம், இஞ்சி பேஸ்ட் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், ஸ்வீட் கார்ன் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயாவை ரவை போல உடைத்து, கொதிக்கும் நீரில் சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும்… இஞ்சி பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு வெண்ணெய் சேர்த்துக் கலந்து, நறுக்கிய கொத்தமல்லி, ஸ்வீட் கார்ன் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: சோயாவில் புரதச் சத்து அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கஞ்சி மிகவும் நல்லது. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும்.

உளுந்தக் கஞ்சி

தேவையானவை: முளைகட்டிய உளுந்து – ஒரு கப், முளைகட்டிய வெந்தயம் – ஒரு கப், முளைகட்டிய சோளம் – சிறிதளவு, புழுங்கல் அரிசி (வறுத்து உடைத்தது) – ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மோர் – ஒரு கப். உப்பு – தேவையான அளவு,

செய்முறை: உளுந்து, வெந்தயம், சோளம், உடைத்த அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கவும். அதில் உப்பு, மோர், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.

குறிப்பு: வெயிலில் அதிகம் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. வாரம் ஒரு முறை குடித்தால் அலைச்சலினால் உண்டாகும் களைப்பு நீங்கும். உடல் வலுப்பெறும். உடலுக்குக் குளுமை தரும்.

ஜவ்வரிசிபார்லி கஞ்சி

தேவையானவை: பார்லி – 100 கிராம், ஜவ்வரிசி – 4 டீஸ்பூன், கோதுமை ரவை – ஒரு கப், மோர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, ஜவ்வரிசியை ஒன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் கோதுமை ரவையை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும் குக்கர் மூடியைத் திறந்து, உப்பு, மோர் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: ஜவ்வரிசி, வயிற்றுக்குக் குளுமையானது. பார்லி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. உப்பு. மோருக்கு பதிலாக பால், சர்க்கரை சேர்த்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பயித்தங் கஞ்சி

தேவையானவை: பாசிப் பருப்பு – 100 கிராம், வெல்லம் (பொடித்தது) – 1 டேபிள்ஸ்பூன், பால் – 1 கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி – 6, வாழைப்பழத் துண்டுகள் – 4.

செய்முறை: வெறும் கடாயில் பாசிப் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். குக்கரில் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, வெந்த பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் போட்டுக் கலக்கி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியவுடன் வாழைப்பழத் துண்டுகளை சேர்த்தால்… சுவையான பயித்தங் கஞ்சி ரெடி!

குறிப்பு: கோடைக்காலத்துக்கே உரிய வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகியவற்றைத் தடுக்கும். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலும் சேர்க்கலாம்.

குருணைக் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி – 200 கிராம், பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். உடைத்த அரிசி, பருப்பை தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும். 4 விசில் வந்ததும் இறக்கி… உப்பு, சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

குறிப்பு: உடல் நலக் குறைவின்போது இந்தக் கஞ்சியைக் குடிப்பது மிகவும் நல்லது. நாரத்தங்காய், உப்பு எலுமிச்சை ஊறுகாய் இதற்கு சிறந்த காம்பினேஷன். இது, வெயிலினால் இழக்கப்படும் நீர்ச்சத்தையும் சக்தியையும் மீட்டுத் தர வல்லது.

நன்றி:-

நன்றி:- அவள்  விகடன்

*****************

பிரிவுகள்:கோடை பானங்கள், மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,