தொகுப்பு

Archive for the ‘எடையைக் குறைக்கப் போராட்டமா’ Category

எடையைக் குறைக்கப் போராட்டமா?


நீங்கள், கவனமாக உணவு உண்டாலும், உடற்பயிற்சிக் கூடத்தில் மணிக்கணக்கில் செலவிட்டாலும் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

உங்களின் எடை ஒருகட்டத்துக்கு மேல் குறையாமல் நின்று விட்டதா? அதற்கு, நீங்கள் இதுவரை அறியாத ஓர் உள்காரணம் இருக்கலாம். எதனால் எடை கூடுகிறது என்று தெரியாத சில நிலைகளுக்கான காரணங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்…

`ஹைப்போதைராய்டிசம்’:

`ஹைப்போதைராய்டிசம்’ என்றால், உங்கள் உடல், மிகக் குறைவான அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது என்று அர்த்தம். நல்ல உடற்செயலியலுக்கு தைராய்டு ஹார்மோன் அவசியம். “உங்கள் உடம்பு, குறைவான தைராய்டு ஹார்மோனை சுரந்தால், உங்களின் அடிப்படையான செயல் விகிதமும் குறையும்.

அந்நிலையில் நீங்கள் என்ன சாப்பிட்டாலும் அது கூடுதல் கலோரிகளாகி எடை கூடும்” என்கிறார்கள். `ஹைப்போதைராய்டிசத்துக்கு’ மரபணு ரீதியானது உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வழக்கமாக இதற்கான சிகிச்சையில் ஒரு `டோஸ்’ தைராய்டு ஹார்மோன் அளிப்பது அடங்கும்.

`இன்சுலின்’ எதிர்ப்பு:

இன்சுலினை உடம்பால் கிரகிக்க முடியாமையும், அதைக் கொண்டு குளுக்கோஸை சிதைக்க முடியாமையும் `இன்சுலின்’ எதிர்ப்புக்குக் காரணமாகின்றன. அதாவது உங்கள் உடலில் அதிகமான குளுக்கோஸ் சேர்ந்து, எடை அதிகரிப்புக்குக் காரணமாகிறது. “ரத்த சர்க்கரை அளவைக் கீழே கொண்டு வருவதற்கு இயல்பான ஒருவருக்கு 10 `யூனிட்கள்’ இன்சுலின் தேவை என்றால், இன்சுலின் எதிர்ப்பு உடைய ஒருவருக்கு 30 முதல் 40 யூனிட்கள் இன்சுலின் தேவை.

மற்றொரு வேடிக்கையான முரண்பாடு, இன்சுலின் எதிர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணம், அதிக எடை. வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்புதான் இன்சுலின் எதிர்ப்புக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. எனவே, பெருத்த தொந்தி அல்லது இடுப்பு அளவு 90 செ.மீ.க்கு மேல் இருப்பவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஒரு கெட்ட செய்தி: பெரும்பாலான இந்தியர்கள் இன்சுலின் எதிர்ப்பை அடையும் தன்மையுடன் இருக்கிறார்கள்.

ஒரு நல்ல செய்தி: உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் பெரும்பாலானவர்களால் இதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அடிப்படை உடற்செயலியல் விகிதம்:

அடிப்படை உடற்செயலியல் விகிதம் (`பேசல் மெட்டபாலிக் ரேட்’- `பி.எம்.ஆர்’) என்பது உங்கள் உடல் ஓய்வில் இருக்கும்போது எவ்வளவு கலோரிகள் செலவழிக்கப்படுகின்றன என்கின்ற அளவாகும். உங்கள் உடம்பில் என்ன வேகத்தில் உணவு செரித்துக் கிரகிக்கப்படுகிறது என்று நிர்ணயிப்பது பி.எம்.ஆர். ஆகும். எனவே பி.எம்.ஆர். அளவு குறைவாக இருந்தால் விரைவாக எடை கூடும், கூடுதல் எடையைக் குறைப்பதும் கடினமாகும். சிலருக்கு உடற்செயலியல் விகிதம் மரபு ரீதியாகவே குறைவாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் உடற் செயலியல் விகிதத்தைக் கூட்டிக்கொள்ள அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். `நீங்கள் அதிகாலையில் நடைப் பயிற்சி செய்வதால் அதிக கலோரிகளை எரிக்காமல் இருக்கலாம், ஆனால் அந்த சுறுசுறுப்பின் தாக்கம் நாள் முழுவதும் இருக்கும்’ என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி:-தினத்தந்தி