தொகுப்பு

Archive for the ‘வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு’ Category

வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு

செப்ரெம்பர் 21, 2010 2 பின்னூட்டங்கள்

“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்!”

_________________________________________________________________________

பொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள், பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே. ஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்! விட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்!

கோவை பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவியான பவித்ராவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பொறியியலோடு வாழ்க்கை யில் மற்றொரு இலக்கும் இருந்தது. கல்லூரி அளவில் கொண்டாடப்படும் தன்னுடைய அழகை நாடே ஆராதிக்கும் வகையில் மாடலிங் துறையில் புகுந்து கலக்க வேண்டும் என்பது!

இந்த ஆர்வத்தால் தன்னிடமிருந்த கேமரா மொபை லில் தன்னைத் தானே விதவிதமாக, அழகழகாக புகைப்படம் எடுத்து, அவற்றைத் தோழிகளுக்கும் குடும்பத்தினருக்கும் அவ்வப்போது காட்டி, “ஏய் நல்லாயிருக்குப்பா…” என்று அவர்களிடமிருந்து காம்ப்ளிமென்ட் வாங்கி சந்தோஷப்படுவது அவரது ஹாபியாகிப் போனது. இந்தப் பொழுதுபோக்கே… விபரீத பொறியில் அவரை சிக்கவைக்கும் என்று எவர்தான் நினைத்திருப்பார்கள்?!

அன்று அப்படித்தான் புதிதாக தான் வாங்கிய உள்ளாடையை அணிந்து பார்த்த பவித்ராவுக்கு, அந்த பிராண்ட் உள்ளாடையை அணிந்து போஸ் தந்து கொண்டிருக்கும் மாடல் பெண்ணைவிட, அது தனக்கு எடுப்பாக இருப்பதாகப் பட்டது. தனது தரப்பை தோழிகள் நம்ப வேண்டுமே?! எடுத்தார் கேமரா மொபலை. க்ளிக்கினார் உள்ளாடையோடு பல படங்கள்! இம்முறை இந்தப் படங்களை வீட் டில் உள்ளவர்களுக்கு காட்டவில்லை பவித்ரா. தன் கிளாஸ் ஃப்ரெண்ட்ஸான நான்கு தோழிகளிடம் மட்டும் காட்டினார்.

அதில் ஒரு விஷம மாணவி, புளூடூத் மூலம் அந்தப் படத்தை சுட்டு, சுற்றுக்குவிட, இன்றைக்கும் அந்தப்படங்கள் இணையத்திலும், விவஸ்தை கெட்டவர்களின் செல்போன்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. பொறியியல், மாடலிங் இரண்டு கனவுகளும் கானலாகி விட, வெளியில் தலைகாட்ட முடியாத பவித்ராவின் குடும்பம், தொடர்புகளை அறுத்துக்கொண்டு இப்போது எங்கோ ஒரு ஊரில் இருக்கிறது.

நம்மூர் கல்லூரி மாணவிகள் மத்தியில் பவித்ராவின் உதா’ரணங்கள்’ ஏராளம். தமிழகத்தின் கட்டுப்பெட்டியான தென் மாவட்ட பெண்கள் கல்லூரி ஒன்றிலிருந்து கோவா டூர் சென்றார்கள். ஆர்வக்கோளாறு மாணவிகள் கூட்டமொன்று ஆளரவமற்ற இடத்தில் நீச்சல் போட்டு, குறைந்த, நனைந்த உடைகளுடன் இருந்த தங்களை ஜாலியாக செல்போனிலும் பதிவு செய்துகொண்டது. அந்த செல்போன் சர்வீசுக்குப் போன இடத்தில், அந்தக் காட்சிகள் சி.டி-யில் பதியப்பட்டு மதுரையில் கன்னாபின்னாவென்று நாறியது.

“இந்த உதாரணங்கள் வெகு சாதாரணமானவை. தங்களின் ஆர்வக்கோளாறால் எழுதவே கூசும் அளவுக்கு சைபர் உலகின் விஷப்பசிக்கு இரையாகும் மாணவிகள் ஏராளம். எம்.எம்.எஸ், வெப்காம் என நவீன தொழில்நுட்பத்தின் எதிர்மறை நிழலில் இளம்பெண்கள் தெரிந்தே செய்யும் அலட்சியத் தவறுகள் பல…” என்று ஆரம்பித்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, அப்படி தான்னைத் தானே ‘க்ளிக்கி’ பரிதாப நிலைக்கு ஆளான அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறினார்.

“கண்ணியமான கல்லூரிப் பெண்ணான அவளை காதலிப்பதாகச் சொன்ன தன் கிளாஸ்மேட்டை ‘ஸாரி’ என்று சிம்பிளாக புறக்கணித்தாள் அவள். கல்லூரிப் படிப்பு முடிந்தது. வேலைக்காக வெளிநாடு சென்றவன், நண்பர்களிடம் இவளின் மொபைல் நம்பர் வாங்கிப் பேச, முன்பு ‘நோ’ சொன்னவள், ‘ஃபாரின் போயும்கூட நம்மளையே நினைச்சுட்டு இருக்கானே’ என்று உருகி, அவன் காதலுக்கு இப்போது ‘யெஸ்’ சொல்லியிருக்கிறாள்.

பரஸ்பர பேச்சுப் பகிர்தல்கள் ஒரு கட்டத்தில் பரஸ்பர புகைப்பட பகிர்தல்களாகி இருக்கிறது. இறுதியில், தன் அந்தரங்கப் புகைப்படங்களைத் தானே எடுத்து, அவனுக்கு மெயில் அனுப்பியிருக்கிறாள் இவள்… ‘இவன்தானே என் புருஷனாகப் போறான்’ என்ற நம்பிக்கையில். ஆனால், அவனுக்கு அங்கேயே வசதியான என். ஆர்.ஐ. பெண் கிடைக்க, இவளின் நச் சரிப்பை அடக்க தன் கைவசமிருந்த அவளது ஏடா கூட படங்களை துருப்புச் சீட்டாக்கினான் அவன். அந்தப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று அவன் மிரட்ட, மனமொடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றவளை உயிர்த்தோழிகள் அரவணைத்து போலீஸில் புகார் கொடுக்க வைத்தனர். அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட, சுப திருப்பமாக இப்போது அவனே முன் வந்து இவளை மணந்துள்ளான்” என்ற வனிதா,

“இப்போது பல கல்லூரி மாணவிகளும் ஆசைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், தோழி களுடனான ஜாலி தருணங்களுக்காகவும், காதல னிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் என, தங்கள் செல்போனில் தங்களைத் தாங் களே இப்படி அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது, பெருகி வருகிறது. சட்டத்தின் பார்வையில் இப்படி கேமராவில் தவறான படங் களை எடுப்பதும் அதை பரப்பு வதும், பகிர்ந்து கொள்வதும் குற்றமே. அப்படிப் பார்த்தால், இதில் முதல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பெண்களே.

எம்.எம்.எஸ், புளூடூத் மற்றும் இணையத்தின் ஆக்டோ பஸ் கரங்களில் இம்மாதிரியான அந்தரங்கப்படங்கள் கிடைக்கும்போது அவற்றால் ஏற்படும் விளைவுகளை ஒருகணம் உணர்ந்தார்கள் எனில் இந்தச் சகதியில் எந்த இளம்பெண்ணும் கால் வைக்க மாட்டார்கள்” என்றவர், ஒரு வேளை தாங்கள் எடுத்த புகைப் படங்களால் சைபர் க்ரைமின் பிடியில் சிக்கிவிட்டவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.

“பிரச்னை என்றால், உடனடியாக காவல் துறையை அணுகி புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பெண்கள் தயங்கக்கூடாது. சைபர் க்ரைம் சிறப்புப் பிரிவு, நிபுணர்கள், விஷேச உபகரணங்கள் எல்லாம் காவல்துறையிடம் இருக்கின்றன. அதை வைத்து குற்றவாளிகளை அடக்க முடியும். பாதிக்கப்படுபவர்கள் வாய் மூடி மௌனிப்பது விஷமிகளை தூண்டி விடுவதாக அமையும்” என்று திடம் ஊட்டி முடித்தார் வனிதா.

விஷமிகளை சட்டமும் காவல்துறையும் கட்டுப்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய அழகை மெச்சி அரைகுறையாக படம் எடுத்து, இந்த விஷமிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வைக்கும் பெண்களின் மனநிலை பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவது பற்றியும் பேசினார் திருச்சி, ‘ஆத்மா’ மனநல மைய தலைமை மருத்துவரான ராமகிருஷ்ணன்.

“நார்சிஸம் (Narcism) எனப்படும் நம்மை நாமே அழகு பார்ப்பதும், ரசிப்பதுமான மனப்பான்மை மனிதர்கள் மத்தியில் பொதுவானது; சாதாரணமானதும்கூட… எல்லாம் ஒரு அளவு வரை. ஆனால், இந்த ரசனையின் இன்னொரு யுக்தியான எக்ஸிபிஷனிஸம் (Exhibitionism) எனப்படும் தனது அழகையோ, பாலின அவயங்களையோ மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் மனநிலை, தடம் புரளவே வைக்கும்.

பொழுதுபோக்குக்காகவோ, ஆர்வக்கோளாறினாலோ அப்படித் தங்களை அழகாக, அந்தரமாக புகைப்படங்கள் எடுத்து ரசிக்கும் பெண்கள், நாளடைவில் அப்ஸஷன் (Obsession) எனப்படும், குறிப்பிட்ட அந்த எண்ணத்திலிருந்து திரும்ப முடியாத பிடியில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவார்கள்.

நான்கு சுவர்களுக்குள் எடுக்கப்படும் புகைப்படங்கள்தானே என நினைத்து உங்கள் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலிலும் இறங்காதீர்கள். விபத்தைத் தவிர்க்க சாலையில் இருக்கும் மஞ்சள்கோட்டைப் போல, நமது வாழ்க்கையிலும் எதிர்படும் பல்வேறு மஞ்சள் கோடுகளை மதித்து நடக்க வேண்டும்” என்றார் ராமகிருஷ்ணன்.

கோவையை சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுண ரான சுஜிதா இந்த பிரச்னை தொடர்பாக பேசியபோது, “இணையதளத்தின் சமூக தளங்களில் உலவும் இளம் பெண்கள், அங்கு கூடியிருக்கும் கூட்டத்துக்கு இடையில் தனக்கென ஓர் இடம் பிடிப்பது, இணைய நண்பர் களை எப்போதும் தன் பிடியிலேயே வைத்திருக்கும் பிரயத்தனம், அதன் நீட்சியாக தங்களை வித்தியாச படமெடுத்துப் பதியும் முயற்சி என தங்கள் நிலையில் இருந்து எளிதில் கீழிறங்கத் தலைப்படுகிறார்கள். டிஜிட்டல் பதிவாக எடுக்கப்படும் புகைப்படங்களை, அவை ஸ்டோர் செய்யப்பட்ட உபகரணங்களில் இருந்து அழித்த பின்னரும் நவீன மென்பொருள்கள் உதவியால் மீட்கப் படவும் வழியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்த பெண், நிச்சயம் தன்னை அரைகுறையாக படமெடுக்க முயல மாட்டார்” என்று சொன்ன சுஜிதா,

”செல்போன் கேமரா, 3ஜி தொழில்நுட்பம், வெப்காம் போன்ற இந்த நவீன நுட்பங்கள் எல்லாம் இருமுனைக் கத்திபோல. கவனமாக கையாளவிட்டால் நமக்கு பெருத்த சேதத்தை தராமல் விடாது!” என்ற எச்சரித்தார்!

நன்றி:- எஸ்.கே.நிலா

நன்றி:- அ.வி