தொகுப்பு

Archive for the ‘பகுதி-04 கிராமத்து கைமணம்!’ Category

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்


வயிற்றுப் பசிக்கு  நாக்கு ருசிக்கு மட்டுமில்லீங்க… உடல் ஆரோக்கியத்துக்கும் கிராமத்து கைமணம் ரொம்ப ஜோருங்க! இயற்கையா கிடைக்கிற பொருட்கள்ல, இதமான சுகம் தர்ற கிராமத்து சமையலுக்கு எப்பவுமே தனி மவுசுதாங்க!

சில ‘ஆரோக்கிய’ ரெசிபிக்களை பார்க்கலாமா?

……………………………………………………………………………………….

முள் முருங்கை அடை

நெஞ்சு சளி, கபம் இதுக்கெல்லாம் அருமருந்து முள் முருங்கை கீரை. அதனால அடிக்கடி அதை சமையல்ல சேர்த்துக்கறது கிராமத்து வழக்கம். ஆனா குழம்பு, கூட்டுனு கொடுத்தா யாரும் அவ்வளவா விரும்பி சாப்பிடமாட்டாங்கனு அடையா செஞ்சு சாப்பிடுவாங்க.

அடைனு சொன்னாலும், செய்யற முறையப் பார்த்தா பூரி மாதிரி இருக்கும். அதனால குழந்தைங்களுக்கும் இதை ரொம்ப பிடிக்கும்.

முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்செடுங்க. அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கோங்க.

இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளா எடுத்து, உள்ளங்கைல வெச்சு வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம்.

இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும். இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

————————————————————-

பாசிப்பருப்பு சீயம்

முக்கால் கப் பாசிப்பருப்பை எடுத்து மலர வேக வெச்சு, கொஞ்சங்கூட ஈரம் இல்லாதபடிக்கு தண்ணிய வடிச்சுட்டு வைங்க.

அரை கப் பச்சரிசி, அரை கப் உளுந்தை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வெச்சு, நைஸா, இட்லிமாவு பதத்துக்கு அரைச்சு, ஒரு சிட்டிகை உப்பு கலந்து எடுத்துக்கோங்க.

பாசிப் பருப்போட முக்கால் கப் சர்க்கரை, அரை கப் தேங்காய் துருவல், அரை டீஸ்பூன் ஏலத்தூள் இதையெல்லாம் கலந்து சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டிக்கோங்க. அரிசி மாவுக் கலவைல இதை முக்கியெடுத்து சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க.

சூடா இருக்கறப்பவே சீயத்தை ரெண்டா வெட்டி அதுமேல பரவலா கொஞ்சம் நெய் விட்டு சாப்பிட்டா ஆஹா.. அந்த சுவைய என்னன்னு சொல்ல?! அபாரமா இருக்கும், போங்க!

இதுக்கு மேல் அலங்காரம், சேர்ப்பு எதுவுமே செய்ய வேண்டாம். அப்படியே கொடுத்தாலே குட்டிப் பிள்ளைங்க இஷ்டமா சாப்பிடுவாங்க.

இதுல முக்கியமான விஷயம்.. சர்க்கரை சேர்த்ததுமே பருப்பு கலவை நீர்த்துக்கும். அதனால் அந்தக் கலவைய ரொம்ப நேரம் அப்படியே வெச்சிருக்காம உடனேயே -மாவுல முக்கியெடுத்து பொரிச்சுடணும்.

தேவைப்பட்டா பருப்புக் கலவைல 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு கலக்கலாம். கலவை கொஞ்சம் கெட்டிப்படும். பாசிப் பருப்போட வேக வெச்சு மசிச்ச கொண்டைக் கடலை, காராமணியும் சேர்க்கலாம். ருசியும், சத்தும் கூடுதலா இருக்கும்.

—————————————————————–

சீம்பால் திரட்டு

கன்னு போட்ட நாலஞ்சு நாளுக்கு மாட்டுக்கு சுரக்கற பாலை வழக்கம் போல நாம உபயோகிக்க முடியாது. சீம்பால்னு சொல்ற அந்தப் பால் அவ்வளவு கெட்டியா புது வாசனையோட இருக்கும். கன்னுக் குட்டிக்கு சத்து கொடுக்கற அந்தப் பாலை திரட்டுப் பால் மாதிரி சுவையா செஞ்சு சாப்பிடறது ஊர் வழக்கம். செய்யறது ஈஸியா இருக்கும். ஆனா சுவை ஓஹோனு இருக்கும். செய்யறது எப்படினு சொல்றேன்..

சீம்பால் (மாடு கன்னு போட்ட ரெண்டாம், மூணாம் நாள் பால்) 2 கப் அளவுக்கு எடுத்து அதுல 1 கப் சர்க்கரை, பொடியா நறுக்கின முந்திரி துருவல் ரெண்டு டேபிள் ஸ்பூன், ஏலத் தூள் 1 டீஸ்பூன்.. எல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.

இட்லிப் பானைல தண்ணி ஊத்தி, அதுல பால் கலவை உள்ள பாத்திரத்தை வெச்சு, சன்னமான தீயில அரை மணி நேரம் வேக வைங்க. அப்புறமா கலவைல ஒரு கத்திய சொருகிப் பாருங்க. கத்தில பால் ஒட்டலேனா கலவை வெந்துடுச்சுனு அர்த்தம். அப்போ பாத்திரத்தை இறக்கிடுங்க.

கலவை ஆறினதும் ஒரு தட்டுல கவிழ்த்து சின்னச்சின்ன துண்டுகளா வெட்டி பரிமாறுங்க. எல்லாரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

ஏலத்தூள் வாசனை பிடிக்காதவங்க வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கலாம். கலர்ப் பொடிங்க கலந்து வேகவெச்சுக் கொடுத்தா பிள்ளைங்க குஷியா யிடுவாங்க.

……………………………………………………………………

சந்திப்பு: கீர்த்தனா

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை