தொகுப்பு

Archive for the ‘பகுதி-03 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்’ Category

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்


அந்தந்த சீசன்ல அதிகமா விளையற பொருட்களை வெச்சு விதவிதமா சமைச்சு, வேணுங்கற அளவுக்குச் சாப்பிடறது கிராமத்து மண்ணுக்கே உள்ள சிறப்புகள்ல ஒண்ணு.

அப்படி, இப்போ மலிஞ்சு கெடக்கற மாங்காயை வெச்சு ஒரு சமையல் குறிப்பைப் பார்க்கலாமா..?

……………………………………………………………

மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி

எந்த வகை மாங்காய்னாலும் சரி.. ஒரு மாங்காயை எடுத்துக் கழுவி தோலோடவே சின்னச் சின்ன துண்டங் களா நறுக்குங்க. அரை கப் பாசிப் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவெச்சு எடுங்க. குழையக்கூடாது.

பருப்பு நல்லா வெந்த பிறகு, நறுக்குன மாங்காய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு இதையெல்லாத்தையும் அதுல சேர்த்து மாங்காய் மசியற வரைக்கும் வேகவைங்க.

முக்கால் கப் வெல்லத்தை எடுத்து கால் கப் தண்ணி சேர்த்து கொதிக்க வைங்க. வெல்லம் கரைஞ்சு கொதிச்சதும் வடிகட்டி, அதை மாங்காய் பருப்பு கலவையோட சேர்த்து இன்னும் அஞ்சு நிமிஷம் கொதிக்க வெச்சு இறக்குங்க.

வடை சட்டில ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து தாளிச்சு, மாங்காய் கலவைல கொட்டிக் கிளறுங்க.

இனி சாப்பிடவேண்டியதுதான்.

பாசிப் பருப்போட மணம், மாங்காயோட புளிப்பு, வெல்ல இனிப்புனு கலந்து கட்டி ரொம்ப ருசியா இருக்கும், இந்த மாங்காய் பாசிப்பருப்பு பச்சடி!

பொதுவா பச்சடின்னாலே மாங்காய், மிளகாய், வெல்லம் போட்டுத்தான் பண்ணுவோம். ‘உடம்புச் சூட்டை கிளப்பும்’கிறதால சிலபேர் இதத் தவிர்க் கறதும் உண்டு. ஆனா, இந்த பச்சடில மாங்காயோட சூட்டை பாசிப் பருப் போட குளிர்ச்சி அடக்கிடறதால அந்த பிரச்னையே இல்லை.

——————————————————————————–

பால் கொழுக்கட்டை

ஒரு கப் பச்சரிசி மாவை எடுத்து அகலமான ஒரு பாத்திரத்துல போட்டுக்குங்க.

ஒன்றரை கப் தண்ணிய கொதிக்க வெச்சு, அதை மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி கிளறுங்க. கிளறின மாவு கெட்டியா சப்பாத்தி மாவு மாதிரி இருக்கணும்.

பொடிச்ச வெல்லம் ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கோங்க. ஒண்ணேகால் கப் தண்ணில, பொடிச்ச வெல்லத்தைப் போட்டு கொதிக்க வைங்க. கொதிச்சு, வெல்லம் கரைஞ்சதும் வடிகட்டி, மறுபடியும் அடுப்புல வெச்சு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க வைங்க.

ஏற்கெனவே தயாரா வெச்சிருக்கற மாவை தேன்குழல் அச்சுல நிரப்பி, கொதிக்கற வெல்லப் பாகுல பிழியணும். பிழிஞ்ச மாவை ஒரு நிமிஷம் வேக வைங்க. அப்புறமா அதை மெல்லிசு கரண்டி காம்பால லேசா கிளறிவிடுங்க. மாவு கரையாது. ஆனா, சின்னச் சின்ன துண்டா உடையும். உடைஞ்சதும் கிளர்றதை நிறுத்திடுங்க. மறுபடியும் இந்தக் கலவை கொதிக்க ஆரம்பிச்சதும் மிச்சமிருக்கற மாவுல கொஞ்சம் எடுத்து அச்சுல நிரப்பி, வெல்லக் கலவைல பிழிஞ்சு விடுங்க. இதையும் ஒரு நிமிஷத்துக்கு அப்புறம் கரண்டி காம்பால லேசா கிளறி உடைச்சுவிடுங்க.

இதேமாதிரி எல்லா மாவையும் பிழிஞ்சு வேக வெச்சதும், தீயைக் குறைச்சு, வெல்லக் கலவைல அரை டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நல்லா கிளறுங்க.

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை அகலமான ஒரு தட்டுல விட்டு பரவலா தடவுங்க. அதுல இந்த வெல்ல மாவுக் கலவையைக் கொட்டி சமப்படுத்துங்க. ஆறினதும் விருப்பமான வடிவத்துல வெட்டி எடுத்துச் சாப்பிட லாம்.

ரொம்ப ஜோரா இருக்கும் இந்தக் கொழுக்கட்டை!

இந்தக் கொழுக்கட்டை செய்யறப்ப முக்கியமா கவனத்துல வெச்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னான்னா, மாவை ஒரு தரம் ஒரே ஈடுதான் பிழியணும். ரெண்டு மூணு ஈடாவோ மொத்த மாவையும் ஒரே தரமாவோ பிழிஞ்சு விட்டுட்டா கழி மாதிரி ஆயிடும். மாவும் வேகாது.

தேங்காய் துருவலுக்கு பதில் ஒரு கப் கெட்டியான தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். அப்படி தேங்காய்ப்பால் சேர்க்கறதா இருந்தா வெல்லத்தை அரை கப் தண்ணி சேர்த்து கரைச்சா போதும்.

தேங்காய்ப்பாலுக்குப் பதில் மாட்டுப்பாலை ஊத்தியும் வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையை வெச்சும் இந்தக் கொழுக் கட்டையை செய்யலாம். அது ஒரு தனிச் சுவையா இருக்கும்.

………………………………………………………………..

காப்பரிசி

புட்டரிசிங்கற சிகப்பரிசியை ஒரு கப் அளவுக்கு எடுத்து, அதை கல் உமி போக சுத்தம் பண்ணி, கழுவி வைங்க.

பல்லு பல்லா சன்னமா நறுக்கின தேங்காயை கால் கப் அளவுக்கு எடுத்து, அதை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில லேசா வறுத்து அரிசியோட கலக்குங்க. அதோட, வறுத்த எள் ஒரு டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை கால் கப் இதையெல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.

ஒரு கப் வெல்லத்தை எடுத்து பொடிச்சு, கால் கப் தண்ணி யோட சேர்த்து கொதிக்க வைங்க. கொதிச்சதும் வடிகட்டி மறுபடியும் அடுப்புல வெச்சு காய்ச்சுங்க. நல்லா முத்தின பாகு பதம் வந்ததும் அரிசி கலவையை கொட்டிக் கிளறி இறக்குங்க.

ஆறினதும் பொல பொலனு உதிரும். அப்படியே அள்ளிச் சாப்பிட வேண்டியதுதான்.

கிராமப்புறங்கள்ல நெனச்சப்ப எல்லாம் இதைச் செஞ்சு சாப்பிடுவாங்கனு வைங்க. இருந்தாக்கூட வளைகாப்பு, ஆடிப் பெருக்கு, கோயில் திருவிழா.. மாதிரி விஷேச நாட்கள்ல இந்தக் காப்பரிசி இல்லாத வீடே இருக்காது.

…………………………………………………………………….

சந்திப்பு: கீர்த்தனா

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை