தொகுப்பு

Archive for the ‘பகுதி-02 கிராமத்து கைமணம்! – ரேவதி சண்முகம்’ Category

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்


கிராமத்து சமையல்னாலே, நொறுக்குத் தீனியோ, பலகாரமோ எதுவானாலும் நிச்சயமா சத்துள்ள ஆகாரமாத்தான் இருக்கும். தேவையான பொருட்களும் நமக்கு சுலபமா கிடைக்கறதா, விலை குறைஞ்சாத்தான் இருக்கும். இங்க நாம பார்க்கப்போறதும் அந்த ரகம்தான்..

நவதான்ய உருண்டை

சோளம், கம்பு, கொள்ளு, பாசிப் பயிறு, சோயாப்பயிறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள்ளு.. இந்த ஒம்பது வகையான தானியங்களை யும் வகைக்கு கால் கப் அளவுக்கு எடுத்து, ஒவ்வொண்ணையும் தனித்தனியா, வெறும் வடை சட்டில போட்டு சிவந்து, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்துக்குங்க. ஆறினதும் மெஷின்ல கொடுத்து மாவா நைஸா அரைச்சுக்குங்க.

ரெண்டரையிலிருந்து மூணு கப் அளவுக்கு சர்க்கரையை எடுத்து மிக்ஸில போட்டு பொடிச்சு பவுடராக்குங்க. இதை, அரைச்சு வெச்சிருக்கற தானிய மாவோட கலந்து, கூடவே உருக்கின அரை கப் நெய், அரை கப் தேங்காய்த் துருவல் எல்லாத்தையும் சேர்த்து பிசறி பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சு வைங்க. உருண்டை பிடிக்க வராம மாவு பொல பொலனு உதிர்ந்தா கவலைப்படாதீங்க. ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பால் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சு உருண்டை பிடிங்க. பதமா இருக்கும்.

புரோட்டீன் சத்து நெறஞ்ச இந்த உருண்டைல மணத்துக்குனு ஏலக்காய் மாதிரி எதையும் சேர்க்க வேண்டாம். வறுபயிறு வாச னையே கமகமனு அத்தனை பிரமாதமா இருக்கும். பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு ஒரே ஒரு உருண்டை கொடுத்தாப் போதும். வயிறு நெறஞ்சு உற்சாகமாயிடுவாங்க

கம்புரொட்டிஎள்ளுப்பொடி

ரெண்டு கப் அளவுக்கு கம்பு எடுத்து தண்ணிய தெளிச்சு பிசறி, உரல்ல போட்டு குத்தி புடைக்கணும். அதைக் காயவெச்சு மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்குங்க. இந்த மாவை வேணுங்கற அளவுக்கு எடுத்து உப்பு போட்டு கலக்கி, கொஞ்சம் கொஞ்சமா கொதி நீரை ஊத்தி நல்லா அழுத்தி பிசையணும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்.. இல்லேன்னா, வாழை இலையை எடுத்து அதுல கொஞ்சங் கொஞ்சமா மாவை எடுத்து வெச்சு தண்ணியத் தொட்டு மெல்லிசு ரொட்டியா தட்டிக்குங்க. சூடான தோசைக் கல்லுல போட்டு சுட்டெடுங்க. ரொட்டியைச் சுத்தி எண்ணெய்விட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுங்க. மிதமான தீயில சுடணும்.

வேகறதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கும். பொறுமையாதான் சுடணும். சத்தான இந்த ரொட்டியை சாப்பிட்டுப் பார்த்தா, அந்த ருசியே சிரமத்தைப் பார்க்காம அடிக்கடி இதைச் செஞ்சு சாப்பிடச் சொல்லும்.

கம்பு ரொட்டிக்கு தொட்டுக்க ஜோரானது எள்ளுப்பொடி. சரி, அதை எப்படி செய்யறது?

எள்ளை கல், மண் நீக்கி, சுத்தப்படுத்தி வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற வரைக்கும் வறுத்துக்கோங்க. உளுந்து, மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய்ல சிவக்க வறுத்துக்கோங்க. பூண்டு, புளி, உப்பு, எள், உளுந்து, மிளகாய் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்செடுத்தா போதும், பொடி தயார்! புளிக்காத கெட்டித் தயிர்ல இதைக் கலந்து கம்பு ரொட்டிக்கு தொட்டுகிட்டா.. அட, அட.. அதை நெனச்சாலே எச்சில் ஊறுதே!

இதே மாதிரி கட்டித் தயிர்ல வெல்லத்தைக் கலந்து கம்பு ரொட்டியை அதுல முக்கியெடுத்து கூடவே எள்ளுப் பொடியை தொட்டு சாப்பிட்டுப் பாருங்க. ‘தித்திக்குதே..’னு குஷியாயிடுவீங்க.

காராமணி கீரைத்தண்டு குழம்பு

மணமும் ருசியும் அத்தனை பிரமாதமா இருக்கற இந்தக் குழம்பை கிராமத்து ஆளுங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க.

அரை கப் காராமணியை சுத்தம் பண்ணி, வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற அளவுக்கு வறுத்து, அளவான உப்பு சேர்த்து வேக வையுங்க. தண்டங்கீரையை ரெண்டு பெரிய தண்டா எடுத்து பொடியா நறுக்கி, உப்பு போட்டு வேகவையுங்க.

2 பெரிய வெங்காயம், 4 தக்காளி இதை பொடியா நறுக்கிக் கங்க. ரெண்டு முழு பூண்டை எடுத்து உரிச்சு வைங்க. வடை சட்டில 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை காயவெச்சு, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம் இதையெல்லாம் தாளிச்சு, பூண்டு, வெங்காயத்தை வதக்குங்க. வதங்கினதும் தக்காளியச் சேர்த்து வதக்கணும். காராமணி, கீரை இதையெல்லாம் வேக வெச்ச தண்ணி இருக்குமில்லையா அதுல கொஞ்சமா புளியை ஊறவெச்சு கரைச்சு வடிகட்டி அந்த கரைசலை தக்காளியோட சேர்த்துடுங்க. அதோட ரெண்டரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. பச்சை வாடை போனதும் மூணு பல் பூண்டை நசுக்கி குழம்புல போடுங்க. கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் போட்டு மூடி வெச்சு அடுப்பை அணைச்சுடுங்க.

கமகமக்கற இந்த காராமணிக்குழம்பு இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாடு எல்லாத்துக்கும் ரொம்ப அருமையா இருக்கும்.

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை