தொகுப்பு

Archive for the ‘I.P.L கற்றுத் தரும் பாடங்கள்’ Category

IPL கற்றுத் தரும் பாடங்கள்! – வா.கார்த்திகேயன்


ஐ.பி.எல். கற்றுத் தரும் பாடங்கள்!

நேற்று வரை மிகச் சிறந்த பிஸினஸ் மாடல் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட ஐ.பி.எல். இன்று எல்லோரின் வசவுக்கும் இலக்காகியிருக்கிறது. ஐ.பி.எல். என்பதே லலித் மோடியின் மூளையில் உதித்ததுதான் என்று அவரை புகழ்ந்து தள்ளியவர்கள், இன்று எல்லா தவறுகளுக்கும் அவரே காரணம் என்று கைகாட்டுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அமைப்பில் நடந்த பல்வேறு தவறுகளை அரசுத் துறை நிறுவனங்கள் விசாரிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஐ.பி.எல். நமக்குக் கற்றுத் தரும் பிஸினஸ் பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.

நேர்மையான தலைமை!

சின்ன நிறுவனமோ, பெரிய நிறுவனமோ அதன் தலைமைப் பதவியில் இருப்பவர் நேர்மையாளராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் இடை மற்றும் கடைநிலை ஊழியர்கள் நேர்மை தவறி, தவறு செய்யும்பட்சத்தில் அந்த நிறுவனத்தின் இமேஜ் பெரிதாகப் பாதிக்கப்படாது. ஆனால் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் சின்னத் தவறு செய்தாலும் அதனால் நிறுவனத்தின் இமேஜ் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். ஐ.பி.எல். அமைப்பின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை டிவி நிறுவனத்துக்கு கொடுத்ததில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தது வரை பல விஷயங்கள் நேர்மையாக நடந்த மாதிரி தெரியவில்லை. லலித் மோடி மீது மட்டுமே இத்தனை குற்றச்சாட்டுகள் குவிந்தால், அந்த அமைப்பில் வேறு எந்த விஷயம்தான் சரியாக நடந்திருக்க முடியும்?

வெளிப்படையான தன்மை!

எந்த ஒரு பிஸினஸூக்கும் வெளிப்படையான தன்மை அவசியம். ஐ.பி.எல். அமைப்பைப் பொறுத்த வரை அது கொஞ்சம்கூட இல்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. ஐ.பி.எல். அமைப்பில் எல்லாமே ஏலத்தின் பேரில் நடந்தாலும், அந்த ஏல முறையே மிகப் பெரிய ஏமாற்று என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. அஹமதாபாத் அணிக்காகப் போட்டியிட்ட அதானி மற்றும் வீடியோகானின் நிறுவனங்களில் ஏலப் பத்திரங்கள் மாயமாகியுள்ளன. லலித் மோடி சொல்லித்தான் அதானி நிறுவனம் ஏலம் கேட்டுள்ளது என்ற தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆக மொத்தம் ஐ.பி.எல். அமைப்பில் நடந்த விஷயம் எதுவும் வெளிப்படையாக நடந்த மாதிரித் தெரியவில்லை. திரைமறைவில் நடக்கும் எந்த விஷயமும் ஒருநாள் வெளிச்சத்துக்கு வராமல் போகாது. வெளிப்படையான தன்மை கொண்ட நிறுவனமே சிக்கல்களில் சிக்காமல் சிறப்பாகச் செயல்படும்.

குவியும் அதிகார மையம்!

அத்தனை அதிகாரங்களையும் தன் ஒருவரிடமே வைத்திருந்தார் லலித் மோடி. அத்தனை வேலை களையும் அவரே செய்தார். அவரே விதிமுறைகளை உருவாக்கினார்; அது தனக்கு சரிவராத போது அவரே மாற்றினார். மீடியா ஒப்பந்தங்கள் போடுவது முதல் ஸ்பான்ஸர்களிடம் பேசுவது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என அத்தனை வேலைகளையும் (அதிகாரங்களையும்) அவரே செய்ததால், அவர் எல்லா வேலையையும் சரியாகத்தான் செய்கிறாரா என்பதை எல்லோருமே பார்க்கத் தவறிவிட்டனர். மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களான தோனி, சச்சினைவிட பத்திரிகைகளில் அதிகக் கவனம் பெற்றது இவர்தான். இந்த அதிகாரம் 2009-ம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தலையே கொஞ்சம் தள்ளிவையுங்கள் என்று பேச வைத்தது. நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாய கத்தின் அடிப்படைத் தேவை. ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்காக அதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பேச வைத்தது இந்த அளவுக்கதிகமான அதிகாரம் தான்.

கேள்வி கேட்க வேண்டும்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பல துணை அமைப்புகள் உள்ளன. ஐ.பி.எல். அதில் ஓர் அமைப்பு மட்டுமே. ஆனால் இந்த அமைப்பு வந்தபிறகு இதுவே பிரதான அமைப்பு போல மாறியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கே லலித் மோடிதான் தலைவர் என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்கள் உள்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. ‘மூன்று ஆண்டுகளாக அணியின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களை மோடி ஏன் வெளியிடவில்லை?’ என்று இப்போது கேட்கும் பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷாங் மனோகர், கடந்த மூன்று ஆண்டு காலம் இந்தக் கேள்வியை கேட்காமல் விட்டது ஏன்? அவர் மட்டுமல்ல, பி.சி.சி.ஐ. செயலாளராக இருக்கும் இந்தியா சிமென்ட் சீனிவாசன் உள்பட யாருமே கேட்கவில்லை. இதைவிடக் கொடுமை, ‘நாங்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஏனோ கேட்கவில்லை’ என பட்டோடி விட்டேத்தியாகப் பேசியது. எந்த நிறுவனமாக இருந்தாலும் கேள்வி கேட்டால் மட்டுமே தவறுகள் தடுத்து நிறுத்தப்படும்.

தலைவர் நல்லவரா?

லலித் மோடியை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் முன் அவரைப் பற்றி விசாரித்தார்களா என்று தெரியவில்லை. இன்று அவர் மீது பல ஊழல் குற்றச் சாட்டுகளை சொல்கிறவர்கள் அவரை ஐ.பி.எல்.லுக்கு எப்படித் தலைவராக்கினார்கள்? எல்லாவற்றையும்விட அவர் அமெரிக்காவில் படிக்கும்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானதாகவும் ஒரு செய்தி உண்டு. இதை எல்லாம் யாருமே ஏன் கவனிக்க வில்லை?

தெளிவான விதிமுறைகள் வேண்டும்

ஐ.பி.எல். அமைப்பைப் பொறுத்தவரை தெளிவான விதிமுறைகள் இல்லாதது பல தவறுகள் நடக்கக் காரணமாகிவிட்டது. லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பில் தலைவர். ஆனால் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளில் அவரது உறவினர்களுக்குப் பங்கு இருக்கிறது. இந்தியா சிமென்ட் சீனிவாசன் பி.சி.சி.ஐ. செயலாளர். ஆனால் அதே நிறுவனம்தான் சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறது. ஒரே நபர் இரண்டு முக்கிய இடங்களில் இருந்தால் எப்படி நியாயமாக நடந்துகொள்ள முடியும்?

அசட்டுத் தைரியம்

என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் தலைமைக்கு வரக்கூடாது. அப்படி வருமெனில் அவர் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார். இது அரசியலுக்கும் பொருந்தும்; எந்த பிஸினஸூக்கும் பொருந்தும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த எண்ணமும் லலித் மோடிக்கு வந்தது. விளைவு, படிப்படியாக பல தவறுகளைச் செய்தார். வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப்புக்கும் மல்டி ஸ்கிரின் மீடியாவுக்கும் இடையே ஒப்பந்தம் பேசி முடிக்க ‘ஃபெசிலிட்டேஷன் பீஸ்’ என்கிற பெயரில் 80 மில்லியன் டாலர் பணம் கைமாறி இருக்கிறது. இது என்ன பீஸோ என்று குழம்ப வேண்டாம்; கமிஷன் என்பதன் அலங்காரமான இன்னொரு பெயர்தான் இது. எனவே எந்த நிறுவனத்தின் தலைமைக்கும் அசட்டுத் தைரியம் கூடவே கூடாது.

ஆக மொத்தத்தில் பரபரப்பான கிரிக்கெட் போட்டிகளை மட்டுமல்ல, மகத்தான பிஸினஸ் பாடங்களையும் தன்னால் கற்றுத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறது ஐ.பி.எல். அமைப்பு.


நன்றி:- நா.வி