தொகுப்பு

Archive for the ‘ஹாபியிலும் பார்க்கலாம் காசு’ Category

ஹாபியிலும் பார்க்கலாம் காசு! – சி.சரவணன்


னிதர்கள் எத்தனை விதமோ, அத்தனைவிதமாக இருக்கிறது அவர்களின் பொழுதுபோக்குகளும்..! பாட்டுக் கேட்பது, டி.வி பார்ப்பது, எதையாவது விளையாடுவது என்று ஆளுக்கு ஆள் சில வழக்கத்தை ஹாபியாக வைத்திருப்பார்கள். சிலர், பொழுதுபோக்குவதிலும் காசு பார்க்கிறார்கள். ஹாபியிலும் காசு கிடைக்குமா..?

‘‘ஏன் கிடைக்காது? ஹாபியாக ஸ்டாம்ப் சேகரிக்க ஆரம்பித்த என்னிடம் இப்போது இருக்கும் கலெக்ஷனின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்’’ என்கிறார் சென்னையில் ஸ்பென்ஸர் பிளாஸாவை ஒட்டிய நடைபாதையில் கடை போட்டிருக்கும் சீதா ராமன். பழங்கால நாணயங்கள், கரன்ஸிகள், அரிய ஸ்டாம்ப்கள் என்று விதவிதமாகச் சேகரித்து வைத்திருக்கிறார்.

“ஸ்டாம்ப்கள் சேர்ப்பது, எட்டு வயதில் விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம். ஒருகட்டத்தில் வீட்டை அடைக்கும் அளவுக்கு ஸ்டாம்ப்கள் குவிந்துவிட்டன. என்ன செய்ய லாம்..? என்று யோசித்தபோது, அதைக் காசுகொடுத்து வாங்கிக்கொள்ள ஆட்கள் இருப்பது தெரிந்தது. கொஞ்சத்தை விற்றுவிடலாம் என்று தீர்மானித்தேன். அதில் கிடைத்த காசைப் பார்த்ததும், அதையே தொழிலாக்கி விட்டேன்.

இப்போது என்னிடம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ஸ்டாம்ப்கள் இருக்கின் றன. மராட்டிய மன்னர் வீர சிவாஜி காலத்து தங்க நாணயத்தின் இன்றைய விலை, இரண்டு லட்சம் ரூபாய் வரை போகிறது. மற்றபடி ரூபாய் 25, 50 மதிப்பிலான நாணயங்கள் இருக்கின்றன. ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விலை போகிற ஸ்டாம்ப்களும் என்னிடம் இருக்கின்றன’’ என்றார் சீதாராமன்.

பழைய நாணயங்களைத் தேடிப்போய் மூர்மார்கெட்டில் மொத்தமாக வாங்கு கிறார். இதுதவிர, தங்களிடமுள்ள பழைய நாணயங்கள், ஸ்டாம்ப்களை விற்க வருபவர்களிடமும் வாங்கிக் கொள்கிறார். உள்நாடு, வெளிநாடு என்று கிட்டத்தட்ட ஐம்பது பேர் இவருடைய நிரந்தர வாடிக்கையாளர்கள். இதில் எப்படியும் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் மாத வருமானம் வருகிறதாம்.

சின்னத்திரை பிரபலம் மோகன்ராம் அரிய தபால்தலைகளைச் சேகரித்து வருகிறார். ‘‘நடிகை மர்லின் மன்றோ தபால்தலையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தகவலறிந்து, சினிமாத்துறை கலைஞர்கள் தொடர்பான தபால்தலைகளின் மீது தீராத காதல்! அங்கே ஆரம்பித்து, எட்டு வருடமாக தீவிர ஸ்டாம்ப் சேகரிப்பில் இறங்கி இருக்கிறேன். உலக சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையிலான தபால்தலைகள் ஆயிரத்துக்கும்மேல் என்னிடம் இருக்கின்றன.

என் கலெக்ஷனில் இருப்பவை எல்லாமே முத்திரை குத்தப்படாத புதிய ஸ்டாம்ப் கள்தான்! முத்திரை குத்தப்பட்டது எனில், கவரோடு இருந்தால்தான் மதிப்பு. நடிகர் சுனில்தத், என் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில் சுனில்தத்தின் மனைவி நர்கீஸ் படம் போட்ட ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு இருந்தது. என்ன சுவாரஸ்யம் பாருங்கள்…’’ என்று சிலாகித்தார். இவர் ‘உலக சினிமா’ பற்றிய அஞ்சல்தலை கண்காட்சி வைத்து, அதற்கு விருதும் வாங்கியிருக்கிறார்.

‘‘ஸ்டாம்ப்தானே என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். சின்னதாகச் சேர்த்துவைத்தால், பிற்காலத் தில் நல்ல மதிப்பு கிடைக்கும்’’ என்பது இவரது வாதம். இதற்காக, மோகன்ராம் தன் மாத பட்ஜெட்டில் ரூபாய் 500 வரை ஒதுக்கிறார்.

‘‘போஸ்ட் ஆபீஸ்களில் தபால்தலை வாங்கும்போது, தவறாக அச்சிடப்பட்ட ஸ்டாம்ப் ஏதாவது கிடைத்தால், அவசரப்பட்டு வேகத்தோடு அதைத் திருப்பிக் கொடுத்துவிடாதீர்கள். அது, ஜாக்பாட்! ஸ்டாம்ப் சேகரிப்போர் மத்தியில் ஆயிரக் கணக்கில்… ஏன் லட்சக்கணக்கில்கூட விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தபால்தலைகள் சேகரித்து வரும் விக்டர்.

‘‘என்னிடம் இரண்டு லட்சம் ஸ்டாம்ப்கள் இருக்கின்றன. சுமார் 70 நாடுகளில் எனக்கு பேனா நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய தபால்தலைகளை அனுப்பி, பதிலுக்கு அவர்கள் நாட்டின் தபால்தலைகளை வாங்கிச் சேகரிப்பேன். அப்படி விளையாட்டாகச் சேர்க்க ஆரம்பித்து, இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். அன்றைக்கு குறைந்த முதலீட்டில் சேர்த்த ஸ்டாம்புகளை விற்பதன் மூலம், இன்று எனக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் வருகிறது’’ என்கிறார் விக்டர்.

ஸ்டாம்ப் சேகரிப்பவர்களுக்கு வழிகாட்டுகிறது, சென்னையில் உள்ள தென்னிந்திய தபால்தலை சேகரிப்போர் சங்கம். இதுபோன்ற அமைப்புகள் பல முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன.

பழங்கால நாணயங்கள் சேகரிப்பவர்களும் நல்ல லாபம் பார்ப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ‘மெட்ராஸ் காயின்ஸ் சொசைட்டி’யின் முன்னாள் பொருளாளரும் தற்போதைய கமிட்டி உறுப்பினரு மான சங்கரன்ராமன், நீண்ட ஆண்டுகளாக இதுபோன்று நாணயங்களைச் சேகரித்து வருகிறார். அவரைச் சந்தித்தோம்,

‘‘பல்லவர் கால நாணயங்களைத் தேடிப்பிடித்து சேகரித்து வருகிறேன். இந்த பழங்கால நாணயங்களைச் சுற்றி, உலக அளவில் அமோக வர்த்தகம் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இவற்றை வாங்கி விற்கும் டீலர்களே 50-க்கும் மேல் இருக்கிறார்கள். சேகரிப்பவர்கள் எண்ணிக்கையோ பல ஆயிரம். எங்கள் சொசைட்டியில் மட்டும் 400 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அரிய நாணயங்களைச் சேர்ப்பது ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது’’ என்றவர்,

‘‘1803-ல் சென்னை மாகாணத்தில் ‘அஞ்சு பணம்’ நாணயங்கள் 100 மட்டுமே அச்சிடப்பட்டன. இதன் இப்போதைய சர்வதேச சந்தை மதிப்பு 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல். 1,300 வருடங்களுக்கு முந்தைய பல்லவர்கால காசு ஐந்து ஆண்டுக்கு முன் 200 ரூபாய்க்கு போனது. இன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை’’ என்றார் சங்கரன்ராமன்.

சென்னை, ஸ்பென்ஸர் பிளாஸாவில் ‘கலெக்டர்ஸ் பேரடைஸ்’ என்ற பெயரில் பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்துவரும் அஜித் ஜெயின், ‘‘பழங்கால சுவர்க் கடிகாரங்கள், வாட்ச்கள், பேனாக்கள் போன்றவை நன்றாக இயங்கும் கண்டிஷனில் வைத்திருந்தால், அதற்கு நல்ல மரியாதை இருக்கிறது.

ஒருவேளை இயங்காத நிலையில் இருந்தாலும், அதைச் சீர்செய்து புதுப்பிக்கத்தனியே வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்போடுதான் இந்த வியாபாரம் நடக்கிறது. செலவு மற்றும் சீர் செய்யும் காலத்துக்கு ஏற்பவும், கடிகாரங்களில் உள்ள சிறப்பு அம்சங்களுக்கு ஏற்பவும் விலை நிர்ணயம் செய்வோம்’’ என்றார்.

ஓலைச்சுவடி, போஸ்ட் கார்ட், தீப்பெட்டி அட்டை, பழைய கிராமபோன், கிரெடிட் கார்ட், திருமண அழைப்பிதழ், விதவிதமான கண்ணாடிப் பொருட்கள், பதக்கம், பேனா, ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், பத்திரம்(ஸ்டாம்ப் பேப்பர்), முத்திரை மோதிரம், தவளை, கரடி போன்ற ஒரே வகையான விளையாட்டு பொம்மைகள், புத்தகம், கேமரா, சிகரெட் லைட்டர், கம்மல், மூக்குத்தி, வளையல், சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம், டெலிபோன், டேபிள் வெயிட், காலணி, சிப்பி, சென்ட் பாட்டில்… இப்படி நீள்கிறது சேகரிப்புப் பொருட்களின் பட்டியல்.

தங்கள் ரசனைக்கு ஏற்ப அறை முழுக்க ஏதாவது ஒரு பொருளைச் சேகரித்து அழகு பார்ப்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்று வெளிநபர்களுக்கு வேலையற்ற வேலையாகவும் தெரியும் இந்த ஜாலி ஹாபி, எதிர்காலத்தில் விழி விரிய வைக்கும் சேமிப்பாக மாறிவிடும்.

எந்தப் பொருளையும் அதற்கு எதிர்காலத்தில் என்ன மதிப்பு இருக்கும் என்பதைக் கணித்துச் சேர்ப்பது நல்லது. அதேநேரத்தில், பொழுதுபோக்காக, சந்தோஷத்துக்காக சேர்ப்பவர் எனில் இது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த ஹாபிகள் மூலம் மனதுக்குள் குதூகலம் வரும் அதேநேரம், காசும் கிடைக்கிறது என்பது குஷியான விஷயம்தானே!

ரிலீஸ் லாபம்!

ரு தலைவரின் நினைவாக புதிதாக வெளியிடப் படும் ஸ்டாம்போ, நாணயமோ மீண்டும் அச்சிடப் படுவதில்லை. அதனால், வெளியிடப்படும்போதே, வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் மதிப்பு எப்போதும் ஏறுமுகம்தான். உதாரணத்துக்கு… இந்திரா காந்தி, காமராஜர் உருவம் பதித்த நாணயங் களைக் குறிப்பிடலாம். இந்திராகாந்தி உருவம் கொண்ட 5, 10, 20, 100 ரூபாய் நாணய செட்டின் மதிப்பு இப்போது கிட்டத்தட்ட 3,500 ரூபாய் வரை இருக்கிறதாம். இதேபோன்று ‘காமராஜர் காயின் செட்’டின் மதிப்பு 1,000 ரூபாய்.

ஸ்டாம்புக்கும் முன்பதிவு!

பூடான் நாடு விதவிதமான அழகிய ஸ்டாம்ப்களை வெளியிட்டு, அதிக அந்நியச் செலாவணியைச் சம்பாதித்து வருகிறது. ஸ்டாம்ப் வெளியிடும்முன் ‘இதுபோன்ற ஸ்டாம்ப்களை வெளியிடப் போகிறோம். ஸ்டாம்ப் டீலர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்’ என்று பரவலாக விளம்பரம் செய்கிறது. இதன்மூலம், அந்தநாடு அதிக ஸ்டாம்ப்களை வெளியிட்டு, லாபம் பார்க்கிறது. இந்த ஸ்டாம்ப்களை வாங்குவதற்காக இந்தியாவையைச் சேர்ந்த முன்னணி டீலர்கள், பூடானுக்கு விமானத்தில் பறக்கிறார்கள் என்பது புருவம் உயர்த்த வைக்கும் ஒரு தகவல்!

‘சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘பாபா’ ரஜினிகாந்த் பட விளம்பரத்தோடு வந்த 25 பைசா போஸ்ட் கார்டின் இன்றைய மதிப்பு, 5 ரூபாய். ‘1948-ல் வெளியான பத்து ரூபாய் காந்தி தபால்தலையின் இன்றைய மதிப்பு 1,500 ரூபாய்க்கு மேல்’ என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள்!

எப்படி சேமிக்கலாம்?

பால்தலைகள் புதிகாக வெளியிடப்படும்போது அவற்றை வாங்கிச் சேர்க்கலாம். முக்கிய நகரங்களிலுள்ள தலைமை தபால் அலுவலகங்களில் தபால்தலை சேகரிப்புக்கு என்று தனிப்பிரிவு இருக்கிறது. இங்கு முன்பணம் கட்டி உறுப்பினராக சேரும்பட்சத்தில், புதிதாக வெளியிடப்படும் தபால்தலைகள் வீடு தேடி வந்துவிடும். வங்கிகள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்து, முத்திரை குத்தப்பட்ட அந்நிய நாட்டு ஸ்டாம்ப்களை வாங்கிச் சேகரிக்கலாம். சக சேகரிப்பாளர்களிடம் விலைக்குக் கிடைக்கும் ஸ்டாம்ப்களை வாங்கலாம்.

நாணயங்களைப் பொறுத்தவரை தாமிரபரணி, வைகை, அமராவதி, பெண்ணையாறு, காவிரி போன்ற ஆற்றுப் படுகைகளில் பழங்கால நாணயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைத் தோண்டி எடுக்கும் ஆட்களிடம் கேட்டுப் பெறலாம்.

திருப்பதி கோயில் உண்டியலில் விழும் பழங்கால தாமிர நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் ஏலம் விடப் படுகின்றன. அண்மையில்கூட, 7 டன் எடையுள்ள நாணயங் கள் ஏலம் விடப்பட்டன. இதை டீலர்கள் வாங்கி, மதிப்பு கூடிய நாணயங்களைத் தனியே பிரித்து, நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கிறார்கள். இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட கோயில் உண்டியல்களில் விழும் வெளிநாட்டு நாணயங்களை யும் வாங்கி டீலர்கள் விற்று வருகிறார்கள்.

பொதுவாக, இவ்விதமாகச் சேகரிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து சேகரிப்புகளை பரிமாறிக் கொள்வதோடு… விற்பனையும் செய்து கொள்கி றார்கள்

நன்றி:- சி.சரவணன்

நன்றி:- நா.வி