தொகுப்பு

Archive for the ‘மாத சேமிப்பு… மெகா லாபம்’ Category

மாத சேமிப்பு… மெகா லாபம்! – நாகப்பன் புகழேந்தி

ஏப்ரல் 11, 2010 1 மறுமொழி

சிறு துளி பெரு வெள்ளம். அந்த அடிப்படையில் அமைந்ததுதான் திட்டமிட்ட சேமிப்பு முறை என்கிற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் எனப்படும் எஸ்.ஐ.பி. (Systamatic Investment Plan). இது நடைமுறையில் உள்ள பரஸ்பர நிதிகளில் ஏதாவது ஒன்றில், திட்டமிட்டு முதலீடு செய்ய உதவும் வழி முறை. ரெகுலராகக சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டமிது.

முன்பெல்லாம், மாதா மாதம் சேமிக்கும் வகையில் அமைந்த ரெக்கரிங் டெபாசிட் தான், நடுத்தர வர்க்கத்தினரிடம் பாப்புலர். வட்டி விகிதம் குறைந்துவிட்டதால் ரெக்கரிங் டெபாசிட்கள் கவர்ச்சி இழந்துவிட்ட நிலையில், இப்போது திட்டமிட்ட சேமிப்பு முறைதான் சிறந்த வழி. மாதாமாதம், கொஞ்சம் கொஞ்சமாகச் சேமிக்கும்போது, ஒரு கட்டத்தில் நம்மை அறியாமலேயே பெரிய தொகை சேர்ந்துவிடும்.

முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த நிதி, அனைத்தும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதி, இரண்டும் கலந்த கதம்பம் என பலவித பரஸ்பர நிதித் திட்டங்கள் உள்ளன. இவற்றில் உங்கள் வயதிற்கும் வருவாய்க்கும் ஏற்ற திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் இள வயதினராகவோ, ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயார் என்றாலோ, முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைத் தேர்வு செய்யலாம். ஓய்வுபெற்றவராகவோ, அதிக வருவாயை விட முதலீட்டின் பாதுகாப்பிற்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவராகவோ இருப்பின், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டும் கலந்த நிதியான பேலன்ஸ்டு ஃபண்ட் என்பது கபில்தேவ் போல ஆல்ரவுண்டர்!

அடுத்தகட்டமாக அதில் 5,000 ரூபாய் முதலீடு செய்து கணக்கைத் துவங்கலாம். பொதுவாக இந்தத் திட்டங்களில் ஆரம்ப முதலீடு ஐயாயிரம் ரூபாய். பின்னர் மாதம் ஐந்நூறு ரூபாய் கூட போடலாம். கணக்கைத் துவக்கும்போதே, ‘அந்த முதலீட்டின் மீது வரும் வருவாயை, அதே திட்டத்தில் மறுமுதலீடு செய்ய விருப்பமா, அல்லது லாபத்தைப் பிரித்து டிவிடெண்டாக வழங்க வேண்டுமா, அப்படி டிவிடெண்டாக வேண்டும் என்றால் வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டுமா, அல்லது செக், வாரண்டாக அனுப்ப வேண்டுமா?’ என்பது போன்ற கேள்விகளோடு, ‘திட்டமிட்ட முதலீட்டு முறையில் சேர விருப்பமா?’ என்பதையும் கேட்பார்கள். அதை டிக் செய்தால் போதும். திட்டத்தில் சேர்ந்தாச்சு!

எஸ்.ஐ.பி எப்படி வேலை செய்கிறது? மாதா மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒருமுறையோ குறிப்பிட்ட தொகையை இதில் முதலீடு செய்யலாம். நிதி நிறுவனங்களைப் பொறுத்து இக்கால கட்டம் மாறுபடுகிறது. அதற்கான காசோலையை முன்கூட்டியே அந்நிறுவனத்திடம் நாம் கொடுத்துவிட வேண்டும். அல்லது ஈ.சி.எஸ் (ECS – Electronic Clearing Service) மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து அத்தொகையை எடுத்துக் கொள்ளும் அனுமதியை வழங்கி விட்டால், நம் சேமிப்புக் கணக்கில் இருந்து நேரடியாகவே அப்பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இத்திட்டத்தின் முக்கிய அனுகூலம் என்ன? பங்குச் சந்தையைப் பற்றியோ, அதன் அதீத ஏற்ற இறக்கங்களைப் பற்றியோ அதிகம் தெரிந்திராதவர்கள்கூட தைரியமாக முதலீடு செய்யலாம். ஆங்கிலத்தில் ‘தியரி ஆஃப் ஆவரேஜிங்’ என்றும் ‘ருபி காஸ்ட் ஆவரேஜிங்’ (Rupee Cost Averaging) என்றும் சொல்வார்கள். நாம் முதலீடு செய்யும் பரஸ்பர முதலீட்டுத் திட்டத்தின் யூனிட் களின் நிகர சொத்து மதிப்பு (Net Asset Value), பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்குத் தக்க அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். மற்ற முதலீடுகளும் அப்படித்தான். யூனிட்களின் மதிப்பு கூடலாம், அல்லது குறையலாம்.

உதாரணமாக, மாதாமாதம் 500 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். முதல் மாதம், யூனிட்களின் நிகர சொத்து மதிப்பு இருபது ரூபாயாக இருக்கிறது என வைத்துக் கொண்டால், நாம் கட்டும் 500 ரூபாய்க்கு, 25 யூனிட்கள் கிடைக்கும்.

இரண்டாம் மாதம், யூனிட்களின் விலை சற்றே அதிகரித்து 25 ரூபாயாக இருப்பின், அந்த மாதம் நாம் கட்டும் ஐந்நூறு ரூபாய்க்கு 20 யூனிட்களே கிடைக்கும்.

மூன்றாம் மாதம், யூனிட்களின் விலை முன்பை விட குறைந்து 15 ரூபாயாக இருக்கும் பட்சத்தில், அந்த மாதம் முதலீடு செய்யும் 500 ரூபாய்க்கு 33 யூனிட்கள் வாங்கலாம்!

நான்காம் மாதம் மீண்டும் யூனிட்களின் விலை அதிகரித்து 30 ரூபாயாக ஏறிவிட்ட நிலையில், 500 ரூபாய்க்கு 16 யூனிட்களே அலாட் செய்யப்படும்.இப்படியே ஒவ்வொரு மாதமும் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு, யூனிட்களின் விலையைப் பொறுத்து கூடுதலாகவோ, குறைவாகவோ யூனிட்கள் வழங்கப்படும். இந்த யூனிட்கள் யாவும் நம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.

இதில் ஒன்றைக் கவனித்தீர்களா? மாதாமாதம் நாம் முதலீடு செய்யும் தொகை அதே 500 ரூபாய்தான். ஆனால் வாங்கும் யூனிட்களின் எண்ணிக்கை மட்டும் மாறுகிறது. அதுவும் யூனிட்களின் விலை அதிகமாக இருக்கும்போது குறைவான எண்ணிக்கையிலும், விலை மலிவாக இருக்கும்போது அதிக எண்ணிக்கையிலும் யூனிட்களை வாங்குகிறோம். இதனால் வரும் பலனைப் பார்த்தால் பிரமித்துப் போவீர்கள்! குறிப்பிட்ட காலகட்டத்திற்குப்பின், யூனிட்களின் சந்தை விலையை விடவும், யூனிட்களின் நிகர சொத்து மதிப்பை விடவும், நமது கொள்முதல் விலை குறைவாகவே இருக்கும். இதுதான் ‘ருபி காஸ்ட் ஆவரேஜிங்’! அமெரிக்காவில் இதை ‘டாலர் காஸ்ட் ஆவரேஜிங்’ என சொல்வார்கள்.

இந்த உதாரணத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல யூனிட்களின் விலையில் கடுமையான ஏற்ற இறக்கம் இருப்பதில்லை என்றாலும் சுலபமாகப் புரிய வைப்பதற்காக அதிக விலை வித்தியாசங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எப்போது முதலீடு செய்வது என்பது எல்லோருக்குமே குழப்பமான ஒன்று! டைமிங் தி மார்கெட்(Timing the Market ) என்பார்கள். குறைவான விலையில் வாங்கி உச்ச விலையில் விற்பது என்பது அனைவருக்கும் சாத்தியமான விஷயம் அல்ல. மிகக் குறைவான விலைக்கு வாங்கி உச்சபட்ச விலைக்கு விற்பது என்பது, பங்குச் சந்தையில் தினசரி குப்பைகொட்டிக் கொண்டு இருக்கும் பெரும் முதலீட்டாளர்களாலேயே முடியாத விஷயம். அனுபவமிக்க நிபுணர்களுக்கும், பங்குத் தரகர்களுக்குமே சவாலான விஷயம். ஆனால், அந்தக் கவலையைப் போக்குகிறது எஸ்.ஐ.பி.

யூனிட்களின் விலை அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்களையே வாங்குவதால், விலை குறையும்போது நஷ்டமும் குறைவாக இருக்கும். அதேசமயம், விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்களை வாங்குவதால், விலை ஏறும்போது லாபமும் கணிசமாக இருக்கும். அதாவது, நஷ்டம் வரும்போது குறைவாகவும், லாபம் கிடைக்கும்போது அதிகமாகவும் இருக்கும்.

இத்திட்டத்தில் மற்றொரு பலனும் உண்டு. வருடக் கடைசி வரை காத்திருந்து முதலீடு செய்யாமல் அவ்வப்போது திட்டமிட்டு முதலீடு செய்வதால், முதலில் செய்யும் முதலீடுகளுக்கு கூட்டு வட்டிபோல வருடக் கடைசியில் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் செய்யும் முதலீடு உடனடியாகவே வருவாய் ஈட்டத் தொடங்கி விடும். இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகளில் மட்டும்தான் என்றில்லை. அரசின் கொள்கையைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும்போது, சந்தையில் புழக்கத்தில் இருக்கும் அரசு கடன் பத்திரங்களின் விலையும் மாறும்.

வட்டி விகிதங்கள் கூடினால், ஏற்கெனவே இருக்கும் கடன் பத்திரங்களின் விலைகள் மாறும். வட்டி விகிதம் குறைவதாக அறிவிக்கப் பட்டாலோ, அதிக வட்டி வழங்கும் பழைய கடன் பத்திரங்களின் விலையில் அது எதிரொலிக்கும். இந்த ஏற்ற இறக்கங்கள் அந்தந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் யூனிட்களிலும் பிரதிபலிக்கும்.

இப்போது நான்கு அல்லது ஐந்து பரஸ்பர நிதித் திட்டங்களை இணைத்து சூப்பர் எஸ்.ஐ.பி எனும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாதாமாதம் நம் கொடுக்கும் தொகையை, ஒரே ஒரு திட்டத்தில் மட்டும் என்றில்லாமல், பங்குச் சந்தை சார்ந்த நிதியில், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதியில், கலவை நிதியில் எனப் பிரித்து முதலீடு செய்கிறார்கள். இதன் தாக்கங்கள் எப்படியிருக்கும் எனப் போகப் போகத்தான் தெரியும். அந்தந்த பரஸ்பர நிதித் திட்டங்களுக்கு உண்டான வரிவிலக்கு அனைத்தும் இந்த எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டுக்கும் இந்த யூனிட்கள் ஈட்டும் வருவாய் மீதும் உண்டு.

பரஸ்பர நிதித் திட்டங்களில் செய்யும் முதலீட்டிற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. எனவே நல்ல பாரம்பரியமிக்க நிறுவனங்களின் திட்டங்களையே தேர்ந்தெடுங்கள்.

சாதாரணமாக பெரும்பாலான பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்யும்போது 2.5 % வரை நுழைவுக் கட்டணம் உண்டு. ஆனால் இதுவரை எஸ்.ஐ.பி திட்டத்தின் மூலமாக முதலீடு செய்யும்போது ‘என்ட்ரி லோடு’(Entry Load) எனப்படும் இந்த நுழைவு கட்டணம் கிடையாது. இப்போது சில நிறுவனங்கள் இதிலும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஆனால் எக்ஸிட் லோடு (Exit Load) இருக்கும். இதுவும் 2.5% வரை போகலாம் என்பதால் தீர விசாரித்து முடிவெடுங்கள்.

கடந்த பத்தாண்டுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட பரஸ்பர நிதித்திட்டங்களை ஆய்வு செய்ததில், ஒன்று தெளிவாகியுள்ளது. சாதாரணமாக பரஸ்பர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 13 சதவிகிதத்திற்குக் குறையாமல் வருவாய் வந்துள்ளது. அதே திட்டங்களில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 20 சதவிகிதத்திற்குமேல் வருவாய் வந்துள்ளதாகக் கூறுகிறது இந்த ஆய்வு. ஒரு திட்டமிட்ட வகையில் தொடர்ந்து சேமித்ததால், மற்றவர்களைவிட கூடுதலாக இவர்களுக்கு வருவாய் கிடைத்துள்ளது!

மொத்தத்தில் நமக்கு டிசிப்லினை கற்றுத்தந்து, சேமிப்பையும் ஒரு ஒழுங்குமுறையோடு செய்ய சொல்லித்தருவது எஸ்.ஐ.பி. எனலாம்! சிறுகச் சேர்த்து பெருக வாழ்வோம்!

நன்றி:-நாகப்பன் புகழேந்தி
நன்றி:- நா.வி(16-12-05)

=======================================================