தொகுப்பு

Archive for the ‘நம்பி பணத்தை போடலாமா?’ Category

நம்பி பணத்தை போடலாமா? – (கார்பரேட் டெப்பாசிட்ஸ்)நம்மிடம் கொஞ்சம் பணம் சேர்ந்தாலும் அதை முதல் காரியமாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுவது நம் வழக்கம். பணத்துக்கு 100% பாதுகாப்பு, ஓரளவுக்கு வட்டி, தேவைப்படுகிறபோது பணத்தையும் திரும்ப எடுத்துக் கொள்ளக்கூடிய வசதி… நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் எஃப்.டி.யை மலை போல நம்பக் காரணம் இவைதான்.

ஆனால் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில்தான் நாம் பணம் போட வேண்டும் என்பதில்லை. வங்கி அல்லாத தனியார் நிறுவனங்கள் நடத்தும் ஃபிக்ஸட் டெபாசிட்களிலும் பணம் போடலாம். இதை ‘கார்ப்பரேட் டெபாசிட்’ என்பார்கள்.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் டெபாசிட்களில் பணத்தைப் போட்டால் திரும்ப வருமா என்ற சந்தேகம் வருவது இயல்புதான். நல்ல நிறுவனங் களில் பணத்தை முதலீடு செய்தால் பணத்தை இழக்கும் நிலையைத் தவிர்க்கலாம். தனியார் வங்கி டெபாசிட்கள் பாதுகாப்பற்றவை என்று நினைக்கத் தேவையில்லை. காரணம், வங்கி டெபாசிட்கள் உட்பட அனைத்து டெபாசிட்களுமே பாதுகாப் பற்ற (unsecured) முதலீடுகள்தான். வங்கி டெபாசிட் களில் நாம் போடும் பணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்தான் இன்ஷூரன்ஸ் உண்டு. அதற்கு மேல் உள்ள பணத்துக்கு இன்ஷூரன்ஸ் இல்லை. ஆனால் நம் நாட்டில், வங்கிகளுக்கு பிரச்னை வரும் பட்சத்தில், ரிசர்வ் வங்கி தலையிட்டு மற்றொரு வங்கியுடன் அதை இணைத்துவிடும். எனவே டெபாசிட்டில் நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்கும். மேலும், நாம் இந்தக் கட்டுரையில் ஆராய இருப்பது நல்ல தரமான நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை மட்டுமே. இரவோடு இரவாக பூட்டைத் தொங்கவிட்டுச் செல்லும் போலி நிறுவனங்கள் நடத்தும் டெபாசிட் திட்டங்களை அல்ல.

கவனிக்க வேண்டியது என்ன?

பொதுவாக, கார்ப்பரேட் டெபாசிட்களில், வங்கி வட்டியைவிட சற்று அதிகமான வட்டி கிடைக்கும். இருப்பினும் மிகச் சிறிய நிறுவனங்கள் அல்லது சமீபத்தில் தொடங்கப்பட்ட நிறுவனங்களே அதிக வட்டி தருகின்றன. ஆனால் அந்நிறுவனங்களில் பணத்தைப் போடுவது ரிஸ்க் அதிகம்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் டெபாசிட் செய்யும் போது கீழ்கண்ட விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம். நீங்கள் டெபாசிட் செய்ய நினைக்கும் நிறுவனம்,

1. உங்களுக்கு நன்கு பரிச்சயமானதாக இருக்க வேண்டும்.

2. குறைந்தது 20 ஆண்டுகள் இந்தத் தொழிலை நடத்தியிருக்க வேண்டும்.

3. கடந்த கால வரலாற்றில் முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிட்ட காலத்தில் வட்டியும் அசலையும் எவ்வித மான பிரச்னையும் இல்லாமல் கொடுத்திருக்க வேண்டும்.

4. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக நிகர லாபம் சம்பாதிப்பதாக இருக்க வேண்டும்.

5. டெபாசிட் பெறுவதற்குக் கட்டாயமாக ரேட்டிங் பெற்றிருக்க வேண்டும். அந்த ரேட்டிங் குறைந்தது கிகி இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

6. நிறுவனத்தின் நிகர விற்பனை குறைந்தது ரூ.500 கோடியாவது இருக்க வேண்டும்.

7. பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனமாக இருப்பது நல்லது.

8. எல்லாவற்றிற்கும் மேலாக புரமோட்டர்களின், குழுமத்தின் அல்லது நிறுவனத்தின் ஜீனை பார்த்துக் கொள்ளுங்கள்.

9. இவற்றை எல்லாம் நீங்கள் தேடிச் செல்வது கடினம்

என்றால், உங்கள் நம்பிக்கைக்குரிய நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசியுங்கள்.

எஃப்.டி., சி.டி. – இரண்டில் எது?

ஃபிக்ஸட் டெபாசிட்களில் இரண்டு விதம் உண்டு. ஒன்று, ஃபிக்ஸட் டெபாசிட், இரண்டாவது குமுலேட்டிவ் டெபாசிட் (CD & -Cumulative Deposits). எஃப்.டி.யில் ஒரு குறிப்பிட்ட கால வரையரையில் (அதாவது, மாதம், காலாண்டு, அரையாண்டு, அல்லது ஆண்டுதோறும்) நாம் வட்டியைப் பெறலாம். ஆனால் குமுலேட்டிவ் டெபாசிட்டில் அப்படிக் கிடையாது. டெபாசிட் காலம் முடியும்போது அசலும் வட்டியும் சேர்த்துக் கிடைக்கும். ஆனால், கூட்டு வட்டி (வட்டிக்கு வட்டி) கிடைக்கும். அவ்வப்போது பணம் தேவைப் படுபவர்கள் எஃப்.டி.யிலும் செல்வத்தைப் பெருக்க விரும்புபவர்கள் சி.டி.யிலும் பணத்தை முதலீடு

செய்யலாம். தவிர, இளம் வயதினர், போர்ட்ஃ போலியோ டைவர்ஸிபிகேஷனுக்காக செல்பவர்கள், பணம் தேவைப்படாதோர் ஆகியோர் சி.டி. ஆப்ஷனுக்குச் செல்லலாம். மாதாந்திர வருமானம் தேவைப்படுவோர் கள், மூத்த குடிமக்கள், ரிஸ்க்கை குறைக்க விரும்புவர்கள் எஃப்.டி. ஆப்ஷனுக்குச் செல்லலாம்.

Click to Enlarge
Click to Enlarge

நடுவில் பணம் எடுக்கலாமா?

அனைத்து நிறுவனங்களும் பொதுவாக ரிசர்வ் வங்கியின் வழிமுறையை இதில் பயன்படுத்துகின்றன. டெபாசிட் செய்த முதல் மூன்று மாதத்துக்குப் பணத்தைத் திருப்பி எடுக்க முடியாது. மூன்றிலிருந்து ஆறு மாதத்துக்குள் எந்த விதமான வட்டியும் இல்லாமல் பணத்தைத் திருப்பி எடுத்துக் கொள்ளலாம். ஆறு மாதத்துக்கு மேல், முதிர்வடையும் முன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒப்பந்தம் செய்த வட்டியைவிட சில சதவிகிதம் குறைத்துதான் கிடைக்கும். இதை டெபாசிட் போடும்போதே அறிந்து கொள்வது நல்லது.

அதிக வருமானம் பெற…

கம்பெனிகள் மூத்த குடிமக்களுக்குக் கொஞ்சம் அதிகமாக வட்டி (0.25% – 0.50%) கொடுக்கின்றன. அதை அறிந்து அந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக வட்டி விகிதம் ஏறி இறங்கிக் கொண்டு இருக்கும். ஆகவே வட்டி சதவிகிதம் அதிகமாக இருக்கும் காலங்களில், (சமீபத்தில் சில நல்ல பெரிய நிறுவனங்கள் ஆண்டுக்கு 12% வரை கொடுத்தன) குறைந்தது 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிற மாதிரி நீண்ட கால டெபாசிட்டுக்குச் செல்லலாம். வட்டி விகிதம் குறைந்துள்ள காலங்களில் ஓராண்டுக்கு மிகாத குறுகிய கால (ஓராண்டு) டெபாசிட்டுக்குச் செல்லலாம்.

வீட்டுக்கடன் வழங்கும் பல நிறுவனங்கள் அவ்வப்போது ஸ்பெஷல் டெபாசிட்களை அறிவிக்கின்றன. அவற்றின் முதிர்வுக் காலம் சற்று மாறுபட்டதாக இருக்கும். உதாரணமாக, 500 நாட்கள், 15, 30, மற்றும் 45 மாதங்கள். இவற்றுக்கு வட்டி விகிதத்தை சற்றுக் கூடுதலாகக் கொடுக்கின்றன.

வட்டி ஏற்ற இறக்கத்தைக் கவனித்துக் கொண்டிருக்க முடியாதபட்சத்தில், சி.டி. லேடரிங் (CD Laddering) என்ற முறையைப் பின்பற்றலாம். உதாரணமாக, உங்களிடம் 3 லட்ச ரூபாய் இருக்கிறது. நீங்கள் ஒரு நல்ல வங்கியையோ அல்லது ஒரு நல்ல கம்பெனியையோ கண்டுபிடித்து டெபாசிட் செய்யப் போகிறீர்கள். அந்த வங்கி/கம்பெனி ஓராண்டுக்கு 7.5%, ஈராண்டுக்கு 8.0%, மற்றும் மூன்றாண்டுக்கு 8.5% வழங்குகிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் ஓராண்டுக்கு ரூ.1 லட்சத்தையும் (சி.டி-1), ஈராண்டுக்கு மற்றொரு லட்சத்தையும் (சி.டி-2), மூன்றாண்டுக்கு மீதமுள்ள ஒரு லட்சத்தையும் (சி.டி-3) முதலீடு செய்யுங்கள். ஓராண்டு முடிந்து சி.டி-1 முதிர்வடைந்தவுடன் அதை மீண்டும் மூன்றாண்டு காலத்துக்குப் புதுப்பியுங்கள். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் முதிர்வடைய முதிர்வடைய, மூன்று ஆண்டு காலத்துக்குப் புதுப்பியுங்கள். இதற்குப் பெயர் சி.டி. லேடரிங் ஆகும். ஏணி போல் இம்முறையில் உங்கள் டெபாசிட் ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டே செல்லும்.

இந்த முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சி.டி. முதிர்வடையும். அதை நீங்கள் முதன்முதலில் குறிப்பிட்ட அதிகபட்ச காலத்துக்குப் (இந்த உதாரணத்தில் 3 வருடங்கள்) புதுப்பியுங்கள். இதனால் சந்தையில் உள்ள பெஸ்ட் வட்டி விகிதத்தை ஒவ்வொரு ஆண்டும் பெறலாம். மேலும் வட்டி ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் முதிர்வடைவதால் உங்கள் கையில் லிக்விடிட்டியும் இருக்கும். அப்போது உள்ள வட்டி விகிதத்தில் முதலீடு செய்ய பணமும் இருக்கும். மொத்தத்தில் உங்கள் வருமானமும் அதிகரிக்கும்!

எஃப்.டி. / சி.டி. -யில் புதிய திட்டங்கள்

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் தங்களது டெபாசிட்தாரர்கள் அனைவருக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு இலவச லைஃப் இன்ஷூரன்ஸ் வழங்குகிறது. ஹெச்.டி.எஃப்.சி.

நிறுவனம் எஸ்.எஸ்.பி. (SSP – Systematic Savings Plan) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆர்.டி. போல் செயல்படும். ஆனால் அந்நிறுவனமே ஆட்டோமேட்டிக்காக இ.சி.எஸ். முறையில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொண்டுவிடும். 24-லிருந்து 60 மாதங்கள் வரைக்கும் முதலீடு செய்யலாம்.

மேற்கண்ட அட்டவணையில் முதலீட்டுக்கு ஏற்றது என நாங்கள் எண்ணும் டெபாசிட்களின் விவரங்களைக் கொடுத்துள்ளோம். டெபாசிட் செய்யும்போது உங்களது முழுப்பணத்தையும் ஒரே நிறுவனத்தில் போடாதீர்கள். சில நிறுவனங்களில் பிரித்துப் போடுங்கள். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப, முதலீட்டு ஆலோசகருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். கட்டுரையாளருக்குப் பரிச்சயமான நிறுவனங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதுவே முடிவல்ல. இன்னும் பல நல்ல நிறுவனங்கள் சந்தையில் டெபாசிட் வழங்கலாம். அவற்றின் வரலாறு அறிந்து முடிவெடுங்கள்.

டெபாசிட்டில் முதலீடு செய்ய இப்போது பான் கார்டு அவசியம். பான் கார்டு இல்லாமல் முதலீடு செய்தால் மூலத்தில் 20% வரி பிடிக்க வேண்டும் என்று புதிய சட்டம் வந்துவிட்டது. பேன் கார்டு கொடுத்தால் 10% மட்டுமே வரி பிடிப்பார்கள். வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி, ஆண்டுக்கு ரூ.10,000-க்கு மேல் சென்றால் மூலத்தில் வரி பிடிப்பார்கள். ஆனால் கம்பெனி டெபாசிட்கள் எனில் ஆண்டுக்கு ரூ.5,000-க்கு மேல் சென்றால் வரியைப் பிடித்துவிடுவார்கள்.

வருமானவரி வரம்புக்குள் இருப்பவர்கள், மூலத்தில் வரிப்பிடித்தம் செய்யாமல் இருப்பதற்கு 15 பி (மூத்த குடிமக்கள் – 65 வயதுக்கு மேற்பட்டோருக்காக) மற்றும் 15 நி (மூத்த குடிமக்கள் அல்லாதோர்) படிவங்களை டெபாசிட் செய்யும் போதும், பிறகு ஆண்டுதோறும் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டால், அவர்கள் வரியைப் பிடிக்காமல் முழுத் தொகையும் கொடுத்துவிடுவார்கள். உச்ச வரிவரம்பில் இருப்பவர்கள் டெபாசிட் வருமானத்துக்கு உச்சபட்ச வரியைக் கட்டித் தான் ஆகவேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தோரிடம் இருந்து டெபாசிட் பெற பல விதமான விதிமுறைகள் இருப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களிடமிருந்து டெபாசிட் பெறுவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் பெற்றுக் கொண்டாலும் என்.ஆர்.ஓ. (Non Resident Ordinary) டெபாசிட்டை மட்டுமே பெறுகின்றன. அந்தப் பணம் வெளிநாட்டில் இருந்து வந்தது இல்லை என்ற வாக்கு மூலத்தையும் கொடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொண்ட டெபாசிட்டிற்கு வரும் வட்டிக்கு உச்சபட்ச வரியை கேப்பிட்டலிலேயே பிடித்துவிடுவார்கள். என்.ஆர்.இ. (ழNon Resident External) டெபாசிட்டைப் பெறுவதில்லை. மொத்தத்தில் என்.ஆர்.இ. டெபாசிட்டைப் பொறுத்தவரை, வங்கிதான் பெட்டர்.


நன்றி:-

நன்றி:- நா.வி

பிஸினஸ் பக்கங்கள்!
எம்.பி.ஏ. படித்தும் வேலை இல்லை!
ன்றைக்குக் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களின் எதிர்காலக் கனவு எம்.பி.ஏ. படிப்பதுதான். காரணம், எம்.பி.ஏ. படித்தால் வேலை நிச்சயம், கை நிறையச் சம்பளம், குளுகுளு ஏசியில் ஜிலுஜிலு வேலை, என்பதே இந்த கனவுக்குக் காரணம். இதனால்தான் லட்சக்கணக்கில் பீஸ் என்றாலும் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் தற்போதைய நிலையில் எம்.பி.ஏ. என்பது லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்துப் படிக்கக்கூடிய அளவுக்குத் தகுதி கொண்டதுதானா? அதைப் படிப்பதால் நம் கனவில் பாதியாவது நிறைவேறுமா?

முக்கியமான இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் இல்லை என்பதே நிஜம்! இன்றையத் தேதியில், பெரிய பிஸினஸ் நிறுவனங்கள் இரண்டாம்தரக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்துவிட்டு வரும் பட்டதாரிகளை நிராகரித்து வருகின்றன. காரணம், எம்.பி.ஏ. படித்த மாணவர்களிடம் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் முழு அளவில் இல்லை என்பதுதான். எந்த வேலையாக இருந்தாலும் அதற்குத் தேவையான அடிப்படைத் தகுதி என ஒவ்வொரு நிறுவனமும் சில திறமைகளை எதிர்பார்க்கிறது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவு, லாஜிக்கல் திங்கிங், முடிவெடுக்கும் திறன், மக்கள் தொடர்பு, மனிதவளத்தை கையாளுவது… இதனோடு இதர பொது மேலாண்மைத் திறன்கள் அவசியம் இருக்க வேண்டும். எம்.பி.ஏ. படித்தவர்கள் மேற்சொன்ன இந்தத் திறமைகளில் புடம் போட்டத் தங்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை. 50% இருந்தால்கூட போதும் என்று நினைக்கின்றன நிறுவனங்கள். ஆனால், கம்பெனி நிர்வாகத்தை புத்தகங்களில் மட்டுமே படித்து வரும் எம்.பி.ஏ. மாணவர்கள், நிஜத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வெலவெலத்துப் போகிறார்களே தவிர, தீர்வு சொல்லும் சாதுர்யம் அவர்களுக்கு இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

//
//

”எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஒரு மேனேஜர் என்கிற நினைப்பிலேயே படிக்கின்றனர். தாங்கள் சொல்லும் வேலையை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்றே அவர்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஒருவர் எம்.பி.ஏ. படித்திருந்தாலும் நிறுவனத்தில் சேர்ந்தபிறகு அங்கு கொடுக்கப்படும் வேலை எதுவாக இருந்தாலும் அதைச் செய்யத் தயங்கக்கூடாது. உலகில் எந்தப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித் திருந்தாலும் கோக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ஏசி அறையில் உட்காரச் சொல்ல மாட்டார்கள். முதலில் லாரியிலிருந்து சரக்கு இறக்கச் சொல்வார்கள். கடைநிலை ஊழியர்கள் செய்யும் வேலைகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்” என்கிறார் மும்பையில் உள்ள முக்கியக் கல்லூரியின் எம்.பி.ஏ. பேராசிரியர் ஒருவர்.

”எம்.பி.ஏ.வில் மனிதவளம், நிதி மேலாண்மை, உற்பத்தி, மார்க்கெட்டிங் எனப் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. தனக்கு விருப்பமான பாடங்களைத் தாண்டி தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இன்றைய மாணவர்களுக்கு இல்லை. தவிர, அதீத கற்பனையால் அதிகப்படியான சம்பளத்தையும் எதிர்பார்க்கிறார்கள். இதே வேலையை ஒரு சாதாரண டிகிரி முடித்த ஒருவரைக் கொண்டே செய்து விட முடியும் என்கிறபோது எதற்கு அதிகச் சம்பளம் கொடுத்து எம்.பி.ஏ. படித்தவர்களை எடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

இது குறித்து இந்தியன் சொசைட்டி ஃபார் டிரெயினிங் அண்ட் டெவலப்மென்ட்டின் மாநிலச் செயலாளர் மற்றும் கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர். மேனேஜ்மென்ட்டின் இயக்குனர் ஆர்.கார்த்திகேயனிடம் பேசினோம்.

”எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகக் காரணம், மாணவர்கள் திறமைசாலிகளாக இல்லை என்பதைவிட ஆசிரியர்கள் அவர்களைத் திறமைசாலிகளாக உருவாக்கவில்லை என்றே சொல்வேன். ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள் உலக ளவில் பெயர் பெற்று விளங்கக் காரணம், அதன் ஆசிரியர்கள்தான். அங்குள்ள ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் நடத்துவதில்லை. பல்வேறு பிஸினஸ் நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்னை களுக்கான தீர்வைச் சொல்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் தொழிற்துறை அனுபவங்களை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். தியரியில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பிராக்டிக்கலாகச் செய்து பார்க்க ஊக்குவிக்கிறார்கள். இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் மிகப் பெரிய அளவில் உயர்கிறது.

முதல்தரக் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் இந்த உயர்தரமான கல்வியானது எல்லாக் கல்லூரிகளிலும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. குறிப்பாக, இரண்டாம்தரக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு இந்த முறையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அப்படி கற்றுக் கொடுக்கிற மாதிரியான ஆசிரியர்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. குறைவான சம்பளத்துக்கு யார் வேலைக்கு வரத் தயாராக இருக்கிறார்களோ, அவர் களையே ஆசிரியர்களாக நியமனம் செய் கிறார்கள். எந்த ஒரு எம்.பி.ஏ. ஆசிரி யருக்கு தொழில் நிறுவனங்களுடனான அறிவும் தொடர்பும் இருக்கிறதோ, அவர்தான் தரமான எம்.பி.ஏ. மாணவர்களை உருவாக்க முடியும்.

அடுத்த முக்கியமான காரணம், பாடத்திட்டங்கள். இப்போதுள்ள எம்.பி.ஏ. பாடத்திட்டங்கள் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தவிர, எம்.பி.ஏ. வகுப்புகளில் இப்போது அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு நேரமில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரே நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்கிறார்கள். பெற்றோர் மற்றும் மாணவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது கல்லூரிக் கட்டடத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மட்டும் வைத்து முடிவெடுக்காமல், கல்வித்தரம் எப்படி இருக்கிறது, ஆராய்ச்சி, களப்பணி உள்ளிட்டவை எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்து முடிவு செய்வது நல்லது” என்றார் அவர்.

ஆக மொத்தத்தில் எம்.பி.ஏ. படிக்க நினைப்பதில் தவறில்லை. ஆனால் எங்கே படிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம். நம் கடமை, சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்வதே!

– என். திருக்குறள் அரசி