தொகுப்பு

Archive for the ‘தங்க நகைச் சீட்டு’ Category

தங்க நகைச் சீட்டு – பானுமதி அருணாசலம்


தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கம் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.

 

 

ங்க முதலீட்டில் பலப்பல திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் தங்க நகைச் சீட்டுகளுக்கு இருக்கும் மவுசு அதிகம்.   

கடந்த சில ஆண்டுகளாக தங்கம் ‘ஜிவ்’வென ஏறுவதைப் பார்த்த பெண்கள், தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற பயத்தில் தங்கக் காசுகளாக வாங்கி வருகின்றனர். பெண்கள் இப்படி ஆர்வமாக வந்து வாங்குவதைப் புரிந்து கொண்ட நகைக் கடைகளும் புதுப்புது தங்க நகை சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.  

இன்றைக்கு தமிழகம் முழுக்க உள்ள தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். பழைய திட்டம், புது திட்டம், லேட்டஸ்ட் திட்டம் என தற்போது நகைச் சீட்டில் மூன்று வகையான திட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் எதில் பணத்தைப் போடுவது லாபகரமாக இருக்கும் என்பதை அறிய களத்தில் இறங்கி, விரிவாக விசாரித்தோம். எது பெஸ்ட் என்பதைச் சொல்லும் முன்பு மூன்று தங்க நகைத் திட்டங்களையும் பார்த்து விடுவோம்.  

பழைய திட்டம்!

மாதம் 1,000 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 15,000 கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 16,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக ஐந்நூறு ரூபாய்க்கு கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் நகை வாங்குபவர்களுக்கு செய்கூலி, சேதாரம், மதிப்புகூட்டு வரி போன்றவைகளில் சலுகைகள் தருவதாக நகைக் கடைகள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், இந்த திட்டம் முடியும்போது நகைகளாகவோ அல்லது காசுகளாகவோதான் வாங்க முடியும்.

புதிய திட்டம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க விலை எப்போதாவது ஒருமுறைதான் அதிகளவில் மாற்றம் காணும். ஆனால், இப்போது தினம் தினம் மாறுவதோடு, அந்த மாற்றம் பற்றிய செய்தி அடுத்த நிமிடமே டி.வி.-யிலும் இன்டெர்நெட்டிலும் வந்துவிடுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 2011-ம் ஆண்டில் மக்கள் அதிகளவில் வாங்கியது தங்க காசுகள்தான் என்று தெரிய வந்துள்ளது. தங்கம் விலை தாறுமாறாக ஏறுவதால் பின்வரும் நாட்களில் நகை வாங்க முடியாமல் போகுமோ என்கிற பயத்தில்தான் மக்கள் இப்படி காயின்களாக வாங்கி சேமித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள். இதனால் புதிதாக ஒரு சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இந்த புதிய திட்டத்தின்படி தங்கத்தின் விலை குறையும் அன்று கடைக்குச் சென்று பணத்தைக் கட்டி தங்கத்தை ‘ரிசர்வ்’ செய்து கொள்ளலாம். அதாவது, இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் கட்டலாம். மொத்தம் பதினைந்து மாதங்கள் கட்ட வேண்டும். உதாரணமாக, 2012 ஜனவரி மாதம் தொடங்கினால் 2013 மார்ச்சில் முடியும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் அந்த மாதத்திற்கான தவணையை கட்டிக் கொள்ளலாம்.

இதில் கூடுதல் வசதி என்னவெனில், ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டும் என்றில்லை. அந்த மாதத்தில் உங்களிடம் அதிக பணமிருந்தாலோ, இல்லை தங்கம் விலை குறைந்ததால் அதிகமான பணத்தை நீங்கள் கட்ட நினைத்தாலோ தாராளமாக கட்டலாம். இந்த கூடுதல் தொகை என்பது ஆயிரங்களின் பெருக்கமாகவே இருக்கும். இதற்கான தங்கம் உங்களுக்கு அன்றைய விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.

சில கடைகளில் இத்திட்டத்தின் முடிவில் தங்க நகைகள் மட்டுமே வாங்க முடியும்; காயின்களாக வாங்க முடியாது என்கின்றனர். சில கடைகளில் தங்க காயின்களும் வாங்கிக் கொள்ளலாம் என்கின்றனர். இது கடைக்கு கடை மாறுபடுகிறது. முதல் மாதம் கட்டும் தொகையில் 50% பதினைந்தாவது மாத முடிவில் இருக்கும் அன்றைய விலைக்கு நிகரான தங்கம் போனஸாக கொடுக்கப்படுகிறது. பதினைந்தாவது மாத முடிவில் நீங்கள் மொத்தம் கட்டியிருக்கும் பணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தங்கம் மற்றும் போனஸ் தங்கம் ஆகியவற்றிற்கு என மொத்தமாக நகை வாங்கிக் கொள்ளலாம். சேதாரம், செய்கூலி, வாட் உள்ளிட்டவை உண்டு.

லேட்டஸ்ட் திட்டம்!

குறிப்பிட்ட மாதங்களுக்கு என இருக்கும் இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்ச தொகையாக கட்டும் தொகையைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ கட்டிக் கொள்ளலாம். அதாவது, 2,000 ரூபாய் மாதம் கட்டும் திட்டத்தில் சேர்ந்தால், அடுத்த மாதத்தில் 5,000 ரூபாய் கட்டிக் கொள்ளலாம். அதற்கு அடுத்த மாதம் 500 ரூபாய்கூட கட்டிக் கொள்ளலாம். உங்களின் விருப்பம்போல் பணத்தின் இருப்பை பொறுத்து கட்டிக் கொள்ளலாம். திட்டம் நிறைவடையும் மாதத்தில் கூடுதலாக போனஸ் தொகையும் வழங்கப்படும்.


எது பெஸ்ட்?

மேற்சொன்ன இந்த மூன்று திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தாலும், இதில் எது பெஸ்ட் என்பதுதான் முக்கியமான விஷயம். பழைய திட்டத்தின்படி 2010, செப்டம்பர் மாதம் சீட்டு ஆரம்பித்து மாதம் 1,000 ரூபாய் கட்டிவந்தால் நவம்பர் 2011-ல் சீட்டு முடியும். ஆனால் டிசம்பர் மாதம் தான் நகை வாங்க முடியும் என்பதால் அந்த மாதத்தில் (20-ம் தேதி 2,590) ஒரு கிராம் தங்கத்தின் விலைப்படி 6.33 கிராம் வாங்கலாம்.

இதுவே புதிய திட்டத்தின்படி செப்டம்பர் 2010-ல் சீட்டு போட்டு 2011 நவம்பர் மாதத்தில் முடித்திருந்தால் அந்த மாதங்களில் தங்கத்தின் அதிகவிலையோ அல்லது குறைந்த விலையோ எப்படி நீங்கள் பணம் கட்டியிருந்தாலும் சுமார் 7 கிராம் தங்கம் வாங்கலாம். இது பழைய திட்டத்தைவிட பத்து சதவிகிதம் அதிகம். லேட்டஸ்ட் திட்டத்திலும் இதே அளவு வாங்க முடியும். இன்னும் தங்கத்தின் விலை நிலவரங்களை எஃப்.எம்., டி.வி., இன்டெர்நெட் என பல வகைகளில் உடனே தெரிந்து கொள்ள முடியும் என்பதால், விலை குறையும் நாளை பார்த்து பணத்தைக் கட்டினால் இன்னும் கூடுதலாக தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் எது பெஸ்ட் என்று சொல்லிவிட்டோம். பாரம்பரியம், நம்பிக்கை, நாணயம் கொண்ட நகைக் கடைகள் நடத்தும் திட்டங்களில் சேர்ந்து பலன் அடைய வேண்டியது நீங்கள்தான்!

 

நன்றி:- பானுமதி அருணாசலம்

நன்றி:- நாணயம் விகடன்