தொகுப்பு

Archive for the ‘சிந்தனை மேடை-01’ Category

சிந்தனை மேடை-01 நேற்று தெல்கி… இன்று கேத்தன் சேசாய்


நம்மைச் சுற்றி நடக்கிற சில விஷயங்களைப் பார்த்தால் விநோதமாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாயிடமிருந்து கைப்பற்றிய பணத்தின் அளவைப் பார்த்தால் மருத்துவம் என்கிற பெயரில் இங்கே ஒரு பெரிய மாஃபியா கும்பல் பல மோசடிகளை செய்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்த கேத்தன் தேசாய்க்கு இன்று அகமதாபாத்தில் பெரும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டின் முன்பு எப்போதும் ஒரு பழைய ஸ்கூட்டர் நிற்குமாம். ‘நான் கடந்து வந்த பாதையை மறக்க விரும்பவில்லை’ என்பாராம் கேத்தான் தேசாய் அந்த ஸ்கூட்டரைப் பார்த்து! இப்போது அவர் கையும் களவுமாகப் பிடிபட்டு, சி.பி.ஐ. அவர் வீட்டை சோதனை செய்தபோதுதான் 1,800 கோடி ரூபாய் பணம் ‘ஹாட் கேஷாக’ சிக்கி இருக்கிறது. பலரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிற மாதிரி 1,500 கிலோ தங்கமும் கிடைத்திருக்கிறது. ஒரு சாதாரண ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு அந்த மலை முழுங்கி மகாதேவன் எத்தனை அமைதியாக இருந்திருக்கிறார் என்று இப்போதுதான் தெரிகிறது.

எப்படி அவரால் இத்தனை கோடி ரூபாயை சுருட்ட முடிந்தது? காரணம், நம் ஆட்சி அமைப்பில் இருக்கும் ஓட்டைகள்தான். கல்வித் துறையை என்றைக்கு தனியாருக்குத் திறந்துவிட்டோமோ, அன்றைக்கே அது பிஸினஸ் மயமாகிவிட்டது. இன்றைய தேதியில் கல்வி நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக மருத்துவக் கல்வி நிறுவனங்கள் காசு ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்டன. ”மருத்துவம் படிக்க ஒரு சீட் வேண்டும்” என்று எந்த மருத்துவக் கல்லூரியையாவது அணுகிப் பாருங்கள். 10 முதல் 25 லட்ச ரூபாய் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்பதை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்கிறார்கள். எல்லோருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கொடுக்கவேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால் அரசே தன்னுடைய சமூகப் பொறுப்புகளை கைகழுவி தனியாருக்கு தாரைவார்த்து நெறிமுறையற்ற ஒரு புதிய வியாபாரத்தை நடத்த உடந்தையாக இருப்பதுபோல் உள்ளது.

பல லட்சங்களை கட்டாய நன்கொடையாகக் கொடுத்து மருத்துவம் படிக்கும் ஒரு மாணவன், படித்து முடித்தபிறகு எப்படி குறைந்த பணத்தை மக்களிடமிருந்து வாங்கிக் கொண்டு வைத்தியம் செய்வான்? எங்கோ கொடுத்த பணத்தை யாரிடமிருந்தோ வசூல் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவன், வேறு வழியில்லாமல் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகிறான். மருத்துவத்துக்கு அதிகப்படியாக செலவழித்த பணத்தை மக்கள் வேறு வழியில் சம்பாதிக்க நினைக்க, ஆக மொத்தத்தில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது.

இந்தத் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பாலூட்டி வளர்த்த கள்ளப்பூனைதான் இந்த கேத்தன் தேசாய். ”இந்த கோர்ஸ் ஆரம்பிக்கிறீங்களா? இவ்வளவு கோடி கொடுங்க. இவ்வளவு சீட்டை அதிகப்படுத்துறீங்களா? இத்தனை கோடி கொடுங்க” என்று கல்வியை கடைச்சரக்கு மாதிரி வியாபாரம் செய்திருக்கிறார். இவரது நடவடிக்கை சரியில்லை என்பதால்தான் டெல்லி உயர்நீதிமன்றம் இவரை பதவி விலக உத்தரவிட்டது. 2001-ல் பதவி விலகியவர் 2007-ல் மீண்டும் அதே பதவிக்கு வந்தார். எப்படி? பல தகிடுதத்தங்களை செய்துதான்.

இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு பெரிய பதவியில் இரண்டு முறை வகித்ததற்குக் காரணம் இந்தியா முழுக்க உள்ள மருத்துவர்கள்தான். மருத்துவ கவுன்சில் தலைவராக யார் வரவேண்டும் என்கிற தேர்தலில் பல மருத்துவர்கள் ஓட்டே போடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சமூகப் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை பல மருத்துவர்கள் உணர்ந்த மாதிரித் தெரியவில்லை. கிடைக்கிற சில ஓட்டுக்களை வைத்து மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியை எளிதாகப் பிடித்தார் கேத்தன் தேசாய். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோடி கோடியாகக் குவித்தார்.

ஆனால் ஒரு தனிமனிதன் மட்டுமே இவ்வளவு பெரிய மோசடியைச் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவருக்குப் பின் பல ‘பெரிய’ மனிதர்கள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியே வராமல் இருட்டடிப்பு செய்யப்படுவது ஏன்? இந்தியாவை உலுக்குகிற மாதிரியான இந்த மோசடி சந்திக்கு வந்தும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதை பேசாமல் விட்டது ஏன்? தலைவர்கள் போன்கால்கள் ஒட்டு கேட்ட விஷயம் முக்கியமான பிரச்னைதான். ஆனால் இதுவும் ஒன்றும் சாதாரண விஷயமல்லவே!

சில ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திரங்களை அச்சடித்து வெளியிட்டதாக தெல்கி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. ஆனால் இன்று அவர் என்னவானார்? அவர் மீதான விசாரணை எந்த நிலைமையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதே போல கேத்தன் தேசாயையும் இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் மறந்துவிடுவார்கள். மீண்டும் இன்னொரு கொள்ளைக்காரன் அகப்படுவான். அவனைப் பற்றியும் நான்கு நாளைக்கு பேசிவிட்டு மறந்துவிடுவோம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி கொள்ளைக்காரர்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருப்பார்களோ!

நன்றி:- நா.வி