தொகுப்பு

Archive for the ‘எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்?’ Category

எக்ஸ்ட்ரா வருமானத்தை எப்படி சேமிக்கலாம்?

ஜூலை 12, 2010 1 மறுமொழி

இப்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய லட்சியமே கோடிகளில்தான் ஆரம்பிக்கிறது! அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை… பொருளாதாரம் முன்னேற முன்னேற, மக்களின் வருமானமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த முன்னேற்றத்தால், நடுத்தரவர்க்க மக்களிடம் சர்ப்ளஸ் (Surplus) என்று சொல்லப்படும் ‘தேவைக்கு அதிகமான தொகை’யும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இப்படி ‘எக்ஸ்ட்ரா’ வருமானம் வந்தாலும், அதை முறையாகச் சேமிக்காவிட்டால் அது வந்து என்ன லாபம்? பொதுவாக இப்படி பணம் வந்ததும் பலர் அந்தப் பணம் முழுவதையும் தங்களுக்குத் தெரிந்த தொழிலில் அல்லது முதலீட்டில் கொண்டு போய் போட்டுவிடுகிறார்கள்.

அல்லது பக்கத்து வீட்டுக்காரர் செய்கிறார், சொந்தக்காரர் செய்கிறார் அதையே நாமும் செய்துவிடுவோம் என்று செய்துவிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஸ்பெஷலானவர்கள். நம் ஒவ்வொருவருடைய தேவையும் மாறுபட்டது. அதற்கேற்றார் போலத்தான் நமது சேமிப்புகளும் முதலீடுகளும் அமைய வேண்டும்.

சிலர் இன்று பணம் போட்டால் நாளைக்கே இரட்டிப்பாகிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பணத்தைப் பெருக்குவதற்கு மேஜிக் எதுவும் இல்லை. மாறாக நீண்ட கால நோக்கும், ஒழுக்கமும், பொறுமையும், தொடர்ந்த முதலீடும் தேவை. இவைகளுடன் நாம் கீழே காணப் போகும் அஸட் அலோகேஷனும் மிக முக்கியம்.

செல்வத்தை உண்டாக்குவது… (Wealth Creation)

செல்வத்தை உண்டாக்குவதற்கு பல வழிகள் உள்ளன. நன்றாகப் படித்து, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகளில் சேர்வதன் மூலம், பார்க்கும் வேலையில் உயர்வதன் மூலம், புதிய தொழில்களை ஆரம்பிப்பதன் மூலம், இருக்கும் தொழிலை விஸ்தரிப்பு செய்வதன் மூலம் என சொல்லிக்கொண்டே போகலாம்.. இவை எல்லாவற்றையும் விட சில முதலீடுகளின் (பங்குகள், ரியல் எஸ்டேட் போன்றவற்றின்) நுணுக்கத்தை அறிந்து செயல்பட்டால், அதிக செல்வத்தை உண்டாக்கலாம்! இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால், தேடிச் செல்பவர்கள் நிச்சயம் செல்வத்தை உண்டாக்கலாம். அதற்காக நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது!

செல்வத்தைப் பாதுகாப்பது… (Wealth Protection)

பாடுபட்டுத் தேடிய செல்வத்தைப் பாதுகாப்பதும் முக்கியமான விஷயம். சாதாரண மக்களுக்கு தங்களுடைய செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ள இன்ஷூரன்ஸைவிட சிறந்த வழி வேறு இல்லை. மாதா மாதம் மிகவும் டைட் பட்ஜெட்டில் சென்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்துக்கு, திடீரென்று பெரிய மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால், அவர்களுடைய சேமிப்பை/ முதலீட்டை அது கரைத்து விடும். அதேபோல் பாடுபட்டு உழைத்து கட்டிய வீடு தீக்கிரையாகிவிட்டால்? உங்களுடைய பல வருட சம்பாத்தியம் வீணாகிவிடும். அதனால் ஆயுள் காப்பீடு, வீட்டு இன்ஷூரன்ஸ், கார் இன்ஷூரன்ஸ், விபத்து இன்ஷூரன்ஸ், தொழில் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய பணக்காரர்களுக்கு (பிழிமிs – பிவீரீலீ ழிமீtஷ்ஷீக்ஷீtலீ மிஸீபீவீஸ்வீபீuணீறீs) பணத்தைப் பாதுகாப்பதற்கு வேறு சில வழிமுறைகளும் உள்ளன.

செல்வத்தை வளர்ப்பது (Growing Your Wealth)

சம்பாதிக்கும் பணத்தில் சர்ப்ளஸை, வேறு பல முதலீடுகளில் பரவலாக முதலீடு செய்வதுதான் சிறந்தது. அது அவர்களின் செல்வத்தை வளர்க்க உதவும்.

இன்றைய காலகட்டத்தில் நடுத்தரவர்க்கத்தினர் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள் நான்கு:

1. பங்கு சார்ந்த முதலீடுகள்
2. கடன் சார்ந்த முதலீடுகள்
3. ரியல் எஸ்டேட்
4. தங்கம் / வெள்ளி

இவை தவிரவும் வேறு பல முதலீட்டு வகைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் மிக அதிகப் பணம் உடையவர்கள் மற்றும் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால் மேற்கண்ட நான்கு சொத்து வகைகளிலும் தினசரி வர்த்தகம் செய்வதாலோ அல்லது அடிக்கடி வாங்கி விற்பதாலோ செல்வத்தை வளர்க்க முடியாது! நீண்ட நாள் முதலீட்டினால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். மேலும் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். உங்களது முதல் வீட்டைத் தவிர! பங்கு சார்ந்த முதலீடுகளில் செல்லும்போது மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமாகச் செல்வது நல்லது. விவரம் தெரிந்தவர்கள், நேரம் உள்ளவர்கள் மட்டும் நேரடிப் பங்குகளில் முதலீடு செய்யலாம். எஃப் அண்டு ஓ (F&O) மூலம் செல்வந்தர்கள் ஆனவர்கள் உலகளவில் எவரும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். இது கமாடிட்டியில் (Commodity) தினசரி வர்த்தகம் செய்பவர்களுக்கும் பொருந்தும். ஆகவே சாதாரண முதலீட்டாளர்கள் எஃப் அண்டு ஓ மற்றும் கமாடிட்டியில் சென்று தங்களது கைகளைச் சுட்டுக் கொள்ள வேண்டாம்.

கடன் சார்ந்த முதலீடுகளில் பல வகை உள்ளன. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கார்ப்பரேட் டெபாசிட்டுகள் போன்றவற்றை சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் கருதலாம். உச்ச வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும், டீப் டிஸ்கவுன்ட் பாண்டுகளையும் முதலீட்டிற்குக் கருதலாம்.

நீங்கள் செய்யும் ரியல் எஸ்டேட் முதலீடு முதலில் உங்கள் சொந்த வீடாக இருக்கட்டும். அதற்குமேல் முதலீடு செய்யும்போது வீட்டு மனைகள், வீடுகள்/ பிளாட்கள், தோட்டங்கள் போன்றவையாக இருக்கட்டும்.

தங்கம் மற்றும் வெள்ளி பலருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் வைபவங்களுக்காகத் தேவைப்படும். அவ்வாறு தேவைப்படுபவர்கள் நேரடியாக அந்த உலோகத்தை வாங்கிவிடலாம். அது அவர்களுக்கு இரண்டு வகையில் பயன்படும். ஒன்று பிற்காலத் தேவைக்கு. மற்றொன்று சொத்தை பரவலாக்குவதற்கு. தேவை இல்லாதவர்கள் பங்கு மற்றும் கமாடிட்டி சந்தை மூலமாக சிறிது சிறிதாக வாங்கி, தங்களது டீமேட் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.

சேமிப்பு/ முதலீடு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அஸட் அலோகேஷன் (Asset Allocation), அதாவது எந்த வகையான சொத்தில் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பதும்! முதலீடு செய்வதற்குமுன் மூன்றிலிருந்து ஆறுமாத தேவைகளுக்கான பணத்தை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மற்றும் முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள படங்களில் முறையான ஒதுக்கீடு என்று நாம் கருதுவதைத் தந்துள்ளோம். இது ஒரு பொதுவான அலோகேஷன்தான். நாம் ஒவ்வொருவரும் ஸ்பெஷல்! ஆகவே அலோகேஷனும் நம் ஒவ்வொரு வருக்கும் சிறிது மாறுபடும். உங்கள் நிதி ஆலோசகருடன் ஆலோசித்து உங்களது ஒதுக்கீட்டை செய்யவும். மேலும் நமது வயது மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப இந்த ஒதுக்கீடும் மாறிக்கொண்டிருக்க வேண்டும்.

செல்வத்தைப் பராமரிப்பது
(Maintaining Your Wealth)

செல்வத்தை உண்டாக்கி, பாதுகாத்து, வளர்ப்பது குறித்து பார்த்தோம்… அவ்வாறு வளர்த்த செல்வத்தை, பராமரிப்பது மிகவும் அவசியம். தங்களிடம் உள்ள சொத்து வகையைப் பொறுத்து, ஒவ்வொன்றையும் பராமரிப்பதற்கு ஒரு கால அளவை வரையறுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு சொத்து வரி செலுத்துதல் ஆண்டுக்கு ஒரு முறையாக இருக்கலாம். கட்டடங்களை ரிப்பேர் செய்து பெயின்ட் அடிப்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாம். அதே போல் டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகள் சரியாக உள்ளனவா, அவற்றிற்கு டிவிடெண்ட், போனஸ் போன்றவை ஒழுங்காக வருகிறதா, இருக்கும் பங்குகளை அவ்வாறே வைத்துக் கொள்ளலாமா அல்லது விற்க/ வாங்க வேண்டுமா என்பதையெல்லாம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கவனிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு நன்கு பெர்ஃபார்ம் செய்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்பதை ஆண்டுக்கு ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மேலும் வங்கிக் கணக்குகள், டெபாசிட்கள், இன்ஷூரன்ஸ், மற்றும் செல்வம் சார்ந்த அனைத்தையும் முறையாகக் கவனித்து வருவதன் மூலம்தான் நாம் நமது செல்வத்தை நன்றாகப் பராமரிக்க முடியும்.

இப்படி நன்கு பராமரித்த செல்வத்தை, உங்களுக்குப் பிறகு, யாருக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நீங்களே உயில் எழுதி வைத்து விடுவது சிறந்தது.

நன்றி:- நா.வி