தொகுப்பு

Archive for the ‘உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்’ Category

உங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்! சி.சரவணன்


குழந்தைகள் சேமித்த காசை உண்டியலில் அப்படியே விட்டு வைக்கும் காலம் எல்லாம் போயே போச்சு! சேமித்த பணத்தைப் பெருக்குவதற்கான பல வழிகள் இன்றைக்கு வந்துவிட்டன. குழந்தைகள் தாங்கள் சேர்த்த பணத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் முதலீடு செய்யலாம் என்று நெஸ்டோ குரூப் ஆஃப் கம்பெனீஸ்-ன் குரூப் ஹெட் வி. ஹரிகரனிடம் கேட்டோம்…

”பிறந்த குழந்தையின் பேரில்கூட இப்போதெல்லாம் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். உங்கள் மகன் அல்லது மகள் பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி, அவர்களுக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை சொல்லிக் கொடுங்கள். பிற்காலத்தில் கல்விக் கடன் வாங்குவதற்கும் இந்த வங்கிக் கணக்கு கை கொடுக்கலாம். அதே நேரத்தில், இந்த சேமிப்புக் கணக்குகளில் ஆண்டுக்கு 3.5% வட்டிதான் கிடைக்கும். அதனால் இதனைவிட அதிக வட்டி கிடைக்கும் வேறு பாதுகாப்பான முதலீடுகளிலும் பணத்தைப் போடலாம்” என்றவர் அந்தத் திட்டங்கள் குறித்தும் விளக்கிச் சொன்னார்.


”ஒவ்வொரு மாதமும் சேமிக்கும் பணத்தை ஆர்.டி. என்ற தொடர் வைப்புத் திட்டத்தில் போட்டு வரலாம். ஐந்தாண்டுத் திட்டமான இதில், 7.5% கூட்டு வட்டி கிடைக்கும். இதில், மாதம் 10 ரூபாய்கூட சேமிக்கும் வசதி இருக்கிறது. இந்த முதலீட்டை தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகளில் தொடங்க முடியும். ஏற்கெனவே சேர்ந்திருக்கும் பணத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கிற மாதிரி முதிர்வுக் காலத்தை தேர்வு செய்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம்.

மேற்சொன்ன இரு முறைகளிலும் நாம் போட்டு வைக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்னவோ குறைவுதான். இந்த வருமானத்தையும் தாண்டி இன்னும் கொஞ்சம் கூடுதல் வருமானம் பெற நினைக்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யலாம். ஃபண்ட் முதலீட்டுக்கு பான் எண்ணும், பங்கு முதலீட்டுக்கு டீமேட் கணக்கும் தேவைப்படும்.

ஃபண்ட் முதலீடு என்கிற போது ‘சில்ரன்ஸ் ஃபண்ட்’ என்பது போன்ற பெயர்களில் இருக்கிற திட்டங்களைவிட, பேலன்ஸ்ட் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடியதாக இருக்கும். குழந்தைகள் பெயரில் பங்கில் முதலீடு செய்யும் போது அவற்றுக்கு 18 வயதாகும் வரை பங்குகளை விற்றுப் பணமாக்க முடியாது என்பதால் நீண்ட காலத்தில் நன்றாகச் செயல்படக்கூடிய பங்குகளை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது அவசியம்…” என்றவர் பெண் குழந்தைகள்  சேமிப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

”இன்றைக்குச் சிறப்பான முதலீட்டுத் திட்டமாக கோல்ட் இ.டி.எஃப். ஃபண்ட் இருக்கிறது. தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அது அவர் களின் எதிர்காலத்துக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம்” என்றவர், சில டிப்ஸ் களையும் சொன்னார்.

”பிள்ளைகள் உண்டியலில் சேமிக்கும் பணத்தை முதலீடு செய்யும் போது அவர்களுக்கு முதலீட்டுக்கான அனைத்து விதிமுறைகள் மற்றும் நடைமுறை களை பெற்றோர் விளக்கிச் சொல்லிக் கொடுப்பது அவசியம். கூடிய வரையில் படிவங்களை நிரப்புவது, கவுன்டரில் பணம் கட்டுவது போன்ற அடிப்படை விஷயங்களை குழந்தைகளையே செய்யச் சொல்லுங்கள். முதலீட்டு முறையைத் தேர்வு செய்யும்போது பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப தேர்வு செய்வது அவசியம். 5-7 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கு மட்டும் (ஆர்.டி.) ஏற்றதாக இருக்கும். 8-12 வயதானவர்களுக்கு ஃபண்ட் முதலீட்டைச் சொல்லி கொடுக்கலாம். அதற்கு மேற்பட்டவர்களுக்கு பங்கு மற்றும் கோல்ட் இ.டி.எஃப். முதலீட்டைச் சொல்லி தாருங்கள்…!” என்றார் உற்சாகமாக.

நம் குழந்தைகள் வளர்கிற அதே நேரத்தில் அவர்கள் சேமிக்கும் பணமும் வளர வழி வகைகளைச் செய்து கொடுப்பது பெரியவர்களின் கடமை.

மைனர் டீமேட் கணக்கு ஆரம்பிப்பது எப்படி?

* பிறந்த குழந்தைக்குகூட டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அல்லது நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மட்டுமே மைனர் பெயரில் டீமேட் அக்கவுன்ட் தொடங்க முடியும். அவர்கள் டீமேட் அக்கவுன்ட் தொடங்குவதற்கான பான் கார்ட், அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்கள், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை அவசியம் தேவை. கே.ஒய்.சி. படிவத்தையும் நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

* பெற்றோர் அல்லது மற்றவர்களுடன் இணைந்து ஜாயின்ட்-ஆக மைனர் டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்க முடியாது. மைனரின் பெயரில் மட்டுமே டீமேட் அக்கவுன்ட் தொடங்க முடியும்.

* மைனரின் பெயரில் தொடங்கப்பட்ட டீமேட் அக்கவுன்ட், அந்த மைனர் 18 வயதாகி மேஜரான பின்புதான் செயல்படுத்த முடியும். அதுவரை செயலிழந்த அக்கவுன்டாகவே இருக்கும். அதாவது, பங்குகளை வாங்கிச் சேர்க்க முடியுமே தவிர விற்க முடியாது.

* மேஜரான பிறகு புதிய டீமேட் அக்கவுன்ட் ஆரம்பித்தால், மைனர் அக்கவுன்டில் இருந்த பங்குகள் அனைத்தும் புதிய டீமேட்டுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகே விற்க முடியும்.

-பானுமதி அருணாசலம்

குழந்தைகளுக்கான வங்கிச் சேமிப்பு கணக்கு:
முக்கிய அம்சங்கள்

ஒரு வயது குழந்தை முதல் 18 வயது சிறார் வரை யார் வேண்டுமாலும் சேரலாம். இந்த வயது வரம்பு வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.

2 பாஸ் போர்ட் அளவு புகைப்படம் (குழந்தைகள் மற்றும் பெற்றோர்), பிறந்த தேதிக்கான ஆதாரம்.

பொதுவாக தனியார் துறை வங்கிகளில் 7வயதுக்கு மேலும், பொதுத் துறை வங்கிகளில் 12 வயதுக்கு மேலும் ஏ.டி.எம். கார்டுகள் குழந்தைகள் பெயரில் வழங்கப்படும்.

குறைந்தபட்ச மாத முதலீட்டுத் தொகை 50 தொடங்கி 1,000 வரை

கணக்கு பரிமாற்ற விவரம் பெற்றோருக்கு தபால் அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

எஸ்.பி.ஐ.,

பி.என்.பி., ஐ.ஓ.பி, ஹெச்.டி.எஃப்.சி., இந்தியன் வங்கி, விஜயா வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் சிறார் சேமிப்பு கணக்குகள் இருக்கின்றன. பொதுவாக, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே உங்கள் குழந்தைக்கும் கணக்கு ஆரம்பிப்பது எளிது.

எட்டு வயதில் நாற்பதாயிரம்!

சென்னை சேலையூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீவிஷ்ணு. இவன் இதுவரை சேமித்திருக்கும் பணம் 40,000. 97 வயதான மேற்கு மாம்பலத் தைச் சேர்ந்த இவனது தாத்தா ராமச்சந்திரன் தான் உண்டியலை யும் கொடுத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீவிஷ்ணுவின் தந்தை கஸ்தூரிராஜனைச் சந்தித்தோம்: ”உண்டியல் நிரம்பியதும் ஸ்ரீவிஷ்ணுவை விட்டு எண்ணச் சொல்வோம். சில்லறையை நாங்கள் வாங்கிக் கொண்டு, அதற்கு பதில் 100, 500 என்று ரூபாய் நோட்டைக் கொடுத்துவிடுவோம். அப்படி கிட்டத்தட்ட 15,000 ரூபாய் வரை சேர்ந்துவிட்டது. இதையடுத்து அவனையும் வங்கிக்கு அழைத்துச் சென்று அவன் பெயரிலும் கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தேன். அது இன்றைக்கு வளர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படி சேமிக்க ஆரம்பித்ததிலிருந்து அவன் அநாவசியமாக எந்தப் பொருளையும் கேட்டு அடம் பிடிப்பதில்லை. அதற்குப் பதில் பணமாக வாங்கி வங்கியில் போட்டுவிடுகிறான்” என்றார் மகிழ்ச்சி பொங்க!

படம்: கே.கார்த்திகேயன்

எந்த வயதில் எது?

5-7 வயது:  வங்கி சேமிப்புக் கணக்கு மட்டும் (ஆர்.டி.)

8-12 வயது: ஃபண்ட் முதலீடுகள்

12-வயதுக்கு மேல்: பங்கு மற்றும் கோல்ட் இ.டி.எஃப். முதலீடுகள்.

சூப்பர் டிப்ஸ்

மியூச்சுவல் ஃபண்டில் மைனர் பெயரில் முதலீடு இருக்கும் பட்சத்தில் வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது. அதனால் பெற்றோர்கள் பேரில் முதலீடு இருப்பது அவசரத் தேவைக்கு உதவும்.

நன்றி: சி.சரவணன்

நன்றி:- நா.வி