தொகுப்பு

Archive for the ‘நீச்சல்’ Category

நீச்சல் – GSS


எந்த விளையாட்டையுமே அதன் நுணுக்கங்களையும், அடிப்படை விதிகளையும் அறிந்துகொண்டால் திறமையாக ஆட முடியும். குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகளை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்தாலும் நன்றாக ரசிக்க முடியும். அதற்கு இந்தப் பகுதி உதவும். முதலில் நீச்சல்.

1. நீச்சல் என்பது ஒரு விளையாட்டா?

கிராமத்தில் வசிப்பவர்களுக்கு நீச்சல் ஒரு தினசரி ஆனந்த அனுபவம். ஆறுகளிலும் குளங்களிலும் அவர்கள் சிறுவயதிலிருந்தே இயல்பாக நீச்சல் அடிப்பார்கள். அதே சமயம், இன்றைய காலகட்டத்தில் நீச்சல் போட்டிகளில் பலவித மான பரிசுகளை வெல்ல வாய்ப்பு உண்டு. மற்ற எந்த விளையாட்டையும்விட நீச்சல் சாம்பியன்களை அதிகமாக கொண்ட நாடுகள் நிறைய பதக்கங்களை சர்வதேச போட்டிகளில் தட்டிவர வாய்ப்பு அதிகம்.

2. ஏன் அப்படி?

நீச்சலில் நான்கு வகை உண்டு. ஒவ்வொரு வகையிலும் வெவ்வெறு தூர அளவுக்கான போட்டிகள் (50 மீட்டர், 100 மீட்டர் என்பதுபோல்) உண்டு. ஆக, நீச்சல் என்ற ஒரு பிரிவிலேயே பல பதக்கங்களை அள்ளி வரலாம்.

3. நீச்சலில் உள்ள நான்கு வகைகள் என்ன?

பட்டாம்பூச்சி இறக்கைகளை அடித்துக்கொள்வது போல அசைவுகள் செய்தபடியே நீச்சல் அடிப்பது ’பட்டர்ஃப்ளை’ வகை நீச்சல். அதாவது, இரண்டு கைகளும் ஒரே சமயத்தில் முன்னே வரவேண்டும். ஒரே சமயத்தில் பின்னே செல்லவேண்டும். இரண்டு தோள்களும் தண்ணீரில் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும்.

மார்புப் பகுதி ஆகாயத்தைப் பார்த்திருப்பது போல வைத்துக் கொண்டு நீச்சலடிப்பது ‘பேக்ஸ்ட்ரோக்’ (backstroke). இப்படி நீச்சலடிக்கும்போது பாதம் தண்ணீருக்குள்ளேயே எப்போதும் இருக்கவேண்டும்.

‘ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ (breast stroke) என்றவகை நீச்சலில் கைகள் எப்போதும் தண்ணீர் மட்டத்துக்கு அடியிலேயே இருக்கவேண்டும். இரண்டு கால்களும் ஒரேமாதிரி அசைவுகளைத்தான் ஒரு சமயத்தில் தரவேண்டும்.

இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமக்கேற்ற வகையில் நீச்சலடிப்பது ‘ஃப்ரீஸ்டைல்’ (freestyle). இந்த வசதியின் காரணமாகவே மற்ற மூன்று பிரிவுகளை விட இந்தப் பிரிவில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்வார்கள்.

4. நீச்சல் வீரர் பாதி ஆட்டத்தில் அவுட் ஆக வாய்ப்பு உண்டா?

தேசிய மற்றும் சர்வதேச நீச்சல் பந்தயங்கள் நடைபெற வேண்டுமானால் நீச்சல் குளங்களில் எட்டு லேன்கள் இருக்கவேண்டும். அதாவது, ஒரே சமயத்தில் எட்டுப் பேர் பங்கு பெறும்படி யாக அமைக்கப்படவேண்டும். பங்கேற்பவர்கள் தங்கள் லேனுக்குள்தான் நீச்சலடிக்க வேண்டும். பக்கத்திலிருக்கும் லேனுக்குள் நுழைந்துவிட்டாலோ, பிற நீச்சல் வீரரின்மீது மோதிவிட்டாலோ அவர் அவுட்.

5. அந்தந்த ஊர்க்காரர்களுக்கு உள்ளூர் நீச்சல்குளம் நன்கு பழகியிருக்கும். இது வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் நீச்சல் வீரர்களுக்குப் பாதகம் அல்லவா?

இப்படி யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே ஒரு சர்வதேச விதி இயற்றப்பட்டது. எந்த நீச்சல் குளமும் அதன் போட்டியாளர்களுக்கு போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே பயிற்சி பெறத் திறந்துவிடப்பட வேண்டும்.

6. நீச்சல் போட்டி எப்படித் தொடங்கு கிறது?

சர்வதேசப் பந்தயங்களில் அதிகபட்சம் எட்டுப் பேர்தான் ஒரே நேரத்தில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு லேனின் எதிர்ப்புறத்திலும் ஒரு மேடை இருக்கும். ரெஃபரி எனப்படும் நடுவர் முதல் சிக்னலைக் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் தங்களது நீச்சல் பாதைக்கு நேரெதிராக உள்ள இந்த மேடைக்குக் கீழே தயாராக நிற்க வேண்டும். அப்படி நிற்கும்போது தண்ணீருக்கு எதிர்ப்புறமாகப் பார்த்து நிற்க வேண்டும்.

பிறகு நடுவர் ‘டேக் யுவர் மார்க்ஸ்’ என்பார். உடனே விளையாட்டு வீரர்கள் அந்த மேடையின்மீது ஏறி நிற்க வேண்டும். எல்லாப் போட்டியாளர்களும் தயார்நிலையில் நின்றபிறகு ரெஃபரி விசில் கொடுப்பார். அப்படி விசில் கொடுத்த வுடன் நீரில் குதித்து நீச்சல் அடிக்க வேண்டியதுதான்.

விசில் கொடுப்பதற்கு முன்பாகவே யாராவது தண்ணீரில் குதித்துவிட்டால் அவர் கரையேற வேண்டும். அவர் குதித்த பிறகு விசில் கொடுக்கப்பட்டு பிறர் நீரில் குதித்துவிட்டால் அவர்களும் கரையேற வேண்டும். பிறகு புதிதாக மற்றொரு முறை போட்டி துவங்கப்பட்டு அதற்கு அடையாளமாக மறுபடி ஒருமுறை விசில் கொடுக்கப்படும்.

இரண்டாவது முறையும் யாராவது அதே போன்ற தவறை (அதாவது விசிலுக்கு முன்பே தண்ணீரில் குதிப்பது) செய்தால் அப்படிச் செய்தவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். மற்றவர்கள் போட்டியைத் தொடர வேண்டியதுதான்.

7. நான்கு அல்லது ஐந்தாவது லேனில் கலந்துகொள்வபவர்தான் பெரும்பாலும் வெற்றி அடைகிறார். ஏதாவது நியூமராலஜிதான் இதற்கு வழிசெய்கிறதா?

அதெல்லாம் இல்லை. சர்வதேச விதிகளின்படி எந்த ஒரு இறுதிப்போட்டியிலும் எட்டுப் பேர்தான் கலந்து கொள்ளலாம்.

ஆக, அரையிறுதிப்போட்டிகளிலிருந்து எட்டுப் பேர்தான் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். இறுதிச் சுற்றில் அவர்களைக் கீழ்க்கண்ட முறையில் கலந்து கொள்ளச் செய்வார்கள்.

அரையிறுதிச் சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்கு நான்காவது மற்றும் ஐந்தாவது லேன்கள் ஒதுக்கப்படும். பிறருக்கு இதே வரிசையில் லேன்கள் ஒதுக்கப்பட, அரையிறுதியில் ஏழாவதாகவும் எட்டாவதாகவும் வந்தவர்களுக்கு இறுதிச் சுற்றில் முதல் மற்றும் எட்டாவது லேன்கள் (அதாவது இவர்கள் போட்டியிடும்போது ஒருபுறம் குளத்தின் சுவர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும்) ஒதுக்கப் படும்.

அதாவது தலைசிறந்த நீச்சர் வீரர்கள் பெரும்பாலும் இறுதிச் சுற்றில் நான்காவது மற்றும் ஐந்தாவது லேனில்தான் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே, அவர்கள் தங்கத்தைத் தட்டிச் செல்வதில் வியப்பு எதுவும் இல்லையே?

8. உலகப் பந்தயங்கள் நடைபெறும் நீச்சல் குளங்களை அதிக நீளத்துக்கு எழுப்பவேண்டியிருக்கும் இல்லையா?

ஃப்ரீ ஸ்டைல் எனப்படும் பிரிவில் மட்டும்தான் பல்வேறு அதிக துாரங்களுக்கான நீச்சல் பந்தயங்கள் உண்டு. ஆண்கள் பிரிவில் 50, 100, 200, 400, 1500 மீட்டர் பந்தயங்கள் உண்டு. பெண்கள் பிரிவென்றால் 50, 100, 200, 400, 800 மீட்டர் பிரிவுகள். இவை அல்லாத வேறெந்தப் பிரிவும் சர்வதேசப் போட்டிகளில் இடம் பெறக் கூடாது.

ஃப்ரீ ஸ்டைல் அல்லாத பிற நீச்சல் வகை பிரிவுகளில் (பட்டர்ஃப்ளை, பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் ஆகியவற்றில்) அதிகபட்சம் 200 மீட்டர்வரைதான் சர்வதேச அளவில் பந்தயம் நடத்த அனுமதி உண்டு.

நூறு, இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயமொன்றில் இலக்குக் கோடு வரையப்பட்டு பங்குபெறுபவர்கள் அதைத் தாண்டவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், பந்தயத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட தூரம் மிக அதிகம் என்றால் (800, 1600 மீட்டர்கள் என்பதுபோல்) ஒரே மைதானத்தை பல சுற்றுகள் ஓடவேண்டியிருக்கும் அல்லவா?

அதுபோலதான் நீச்சல் பந்தயங்களும். 200 மீட்டர் நீச்சல் பந்தயமென்றால் 50 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தை நான்குமுறை கடக்கவேண்டும். ஒவ்வொருமுறை திசைதிரும்பும்போதும் சுவரைக் கையால் தொடவேண்டியது அவசியம்.

9. போட்டி நடக்கும்போது பார்த்தால் இரண்டு மூன்றுபேர் ஒரே சமயத்தில் முதலில் கரையைத் தொட்டமாதிரி இருக்கிறது. வெற்றிபெற்றவர் யார் என்பதை எப்படிக் கணக்கிடு கிறார்கள்?

நீச்சல் போட்டியின் நேரத்தை வெகு துல்லியமாகக் கணக்கிடவேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு போட்டி யாளருக்கும் மூன்று டைம் கீப்பர்கள் நியமிக்கப்படுவார்கள். தங்கள் லேனில் நீச்சலடிப்பவர் குறிப்பிட்ட தூரத்தைக்கடக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார் என்பதை இந்த மூவரும் தங்களிடம் இருக்கும் ஸ்டாப் வாட்ச்களின் உதவியின் மூலம் கணிப்பார்கள்.

ஆனால் அவர்களின் நேரங்கள் மாறுபட்டால், சராசரி நேரம் கணக்கெடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. அந்த மூவரில் இருவரின் நேரக்கணக்கு ஒத்துப்போனால் அதையே முடிவாகக் கொள்வார்கள். ஒவ்வொருவரின் கடிகாரமும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டினால்? இடைப்பட்டவரின் நேரம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை சின்னத்திரையில் பார்த்தபோது இப்படி ஒவ்வொரு லேனுக்கும் மூன்று டைம்கீப்பர்களைப் பார்த்ததாகத் தெரியவில்லையே என்பவர்களுக்கு இதோ ஒரு குறிப்பு. இப்போதெல்லாம் அதுபோன்ற சர்வதேச நீச்சல் போட்டி களில் எலக்ட்ரானிக் கருவிகள் துல்லியமாக நேரத்தைக் கண்டு பிடிக்கின்றன. இறுதிக் கட்டத்தில் நீச்சல்வீரர் சுவரைத் தொட்டவுடன் தானாக அந்த நேரக்காட்டி நின்றுவிடும்.

10. எந்த வகை நீச்சல் பந்தயத்திலுமே பாதி தூரத்தில் ஒருவர் களைப்படைந்தோ அல்லது வேறுகாரணத்தினாலோ சட்டென்று ஒரு கணம் நீச்சல் குளத்தில் நீருக்குள் சென்றுவிட்டால் அவர் போட்டியில் தொடரும் வாய்ப்பை இழந்து விடுவாரா?

அப்படியல்ல. அவர்பாட்டுக்கு போட்டியைத் தொடரலாம். போட்டியின் போது குளத்தில் நடக்கக்கூடாது அவ்வளவுதான்.

11. கூடுதல் வேகத்தோடு நீச்சல் அடிக்க உதவும் வகையில் நீச்சல் வீரர் தன் உடலில் ஏதாவது கருவிகளைப் பொருத்திக்கொள்ள முடியுமா?

நீச்சல் பந்தயங்களில் கலந்து கொள்ளும்போது கையுறைகள்கூட அணியக் கூடாது. கண்களுக்குமட்டும் காகில்ஸ் அணிந்துகொள்ள அனுமதியுண்டு.

12. சக போட்டியாளரின் வெற்றி வாய்ப்பை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே ஒருவர் அவர் நீச்சல் அடிக்கும் பாதையில் குறுக்கே சென்று அவரது நீச்சல் வேகத்தை தடைசெய்துவிட்டால்?

இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால் அப்படி ஆடியவர் அந்த போட்டியில் தொடர்ந்து ஆடும் தகுதியை இழந்து விடுவார். பாதிக்கப்பட்ட நீச்சல் வீரரை அடுத்த சுற்றுக்கு அனுப்பும் அதிகாரம் நடுவருக்கு உண்டு. அது இறுதிச்சுற்றாக இருந்தால் மீண்டும் ஒருமுறை அந்தப் போட்டியை நடத்தும் அதிகாரமும் அவருக்கு உண்டு.

13. மெட்லி என்றால்?

அதுவும் நீச்சல்தான். ஆனால், அது ஒரு தனிப்பட்ட நீச்சல் பிரிவல்ல. முன்பே நாம் குறிப்பிட்ட நான்கு வகை நீச்சல் வகைப் பிரிவுகளும் இணைந்த பிரிவு அது. அதாவது கடக்க வேண்டிய துாரம் நான்காகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு வகை நீச்சல் மூலம் கடக்க வேண்டும்.

14. மெட்லி பந்தயத்தில் இந்த வரிசையில்தான் நீச்சல் அடிக்கவேண்டும் என்று விதிமுறைகள் உண்டா?

உண்டு. முதலில் பேக்ஸ்ட்ரோக், அடுத்து ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், மூன்றாவதாக பட்டர்ஃப்ளை, நான்காவது சுற்றில் ஃப்ரீஸ்டைல் என்ற வரிசையில்தான் அடுத்தடுத்த சுற்றுகளில் நீச்சல் அடிக்க வேண்டும்.

15. நீச்சலில் ‘ரிலே ரேஸ்’ என்றால் என்ன?

ஃப்ரீஸ்டைலில் 4 ஙீ 100 மற்றும்4 ஙீ 200 மீட்டர் பந்தயங்கள் உண்டு. ஒவ்வொரு அணியிலும் நான்குபேர் கலந்துகொள்ள வேண்டும். உலகப் போட்டிகளாக இருந்தால் ஒரு அணியிலுள்ள நான்குபேரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

********************************************************************

நன்றி:- சு.வி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++