தொகுப்பு

Archive for the ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ Category

தாயின் மணிக்கொடி பாரீர்!


லகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், அதற்கே உரிய தேசியக்கொடி உண்டு.

பண்டைக்காலக்கொடிகள்

ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி, நட்சத்திரங்களும், பட்டைகளும் உள்ள அமெரிக்கக் கொடி, பிறையும் நட்சத்திரமும் கொண்ட இஸ்லாமியர்களின் கொடி ஆகியவை பழம்பெருமை மிக்கவை.

கொடி என்பது…

தேசியக்கொடி என்பதற்கு ஆங்கிலப்பதம் National Flag ஆகும். ஃபிளாக் (Flag) என்பது ஜெர்மானிய மொழியிலிருந்து வந்த சொல். ‘காற்றில் மிதக்கக்கூடியது’ என அதற்கு அர்த்தம்.

கொடி ஏற்பட காரணம்

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், இந்திய மக்களைப் பார்த்து ‘உங்களைக்கென்று ஒரு கொடி உண்டா?’ என்று கேலி பேசினார்கள். அப்போது சத்ரபதி சிவாஜி, ‘பாக்வஜண்டா’ என்ற கொடியை அமைத்து, மக்களிடம் எழுச்சி உண்டாக்கினார். 1831\ல் ராஜா ராம்மோகன் ராய், பாரத தேசத்துக்கு என்று ஒரு கொடி வேண்டும் என்கிற எண்ணத்துக்கு விதைபோட்டார்.

1857\ல் பகதூர்ஷா, சப்பாத்தியும் தாமரை மலரும் பொறித்த கொடியைப் பயன்படுத்தினார். ஜான்சிராணி, அனுமன் சின்னம் பதித்த கொடியைப் பயன்படுத்தினார். 1883\ல் சிரீஸ் சந்திரபோஸ் என்பவர் இந்திய தேசிய சங்கம் ஒன்றை தொடங்கி மக்களைத் திரட்டி கொடியுடன் உலாவர செய்தார். இந்தியருக்கு தேசியமும், தேசியக்கொடியும் இல்லை என வெள்ளையன் கேலி செய்தபோது, தன் சேலையின் முந்தானையை வீராவேசத்துடன் காட்டினார் \ தாய்நாட்டின் மானம் காத்த வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை. அதில் இருந்த மூவண்ணமே நமது தேசியக் கொடியில் பிரதிபலிக்கிறது.

நம் தேசியக்கொடியின் வளர்ச்சி

1905-ல் சகோதரி நிவேதிதா, சதுரமான சிவப்பு வண்ணம் கொண்ட கொடியில் நான்கு பக்க விளிம்பிலும், 108 ஜோதி விளக்குகளும் நடு மையத்தில் வஜ்ஜிரமும், இடப்புறத்தில் வந்தே என்றும் வலப்புறத்தில் மாதரம் என்றும் அமைந்த ஒரு கொடியை வடிவமைத்தார்.

1906\ல் கல்கத்தா கிரின்பார்க் சதுக்கத்தில் ஒரு கொடி வடிவமைக்கப்பட்டது. மேலே சிவப்பு, அதில் எட்டு தாமரை, நடுவில் உள்ள மஞ்சள் பட்டையில் வந்தே மாதரம், கீழே பச்சைப் பட்டையில் இடப் பக்கத்தில் சூரியன், வலப் பக்கத்தில் நட்சத்திரப்பிறை ஆகியவற்றைக் கொண்டதாக ஏற்றி வைக்கப்பட்டது.

1907\ல் ஸ்ரீமதி காமாவும் நாடு கடத்தப்பட்ட புரட்சியாளர்களும் வடிவமைத்த கொடி, முதல் கொடி போலவே வண்ணங்கள் அமைந்து சிவப்புப் பட்டையில் ஒரு தாமரைப் பூவும் ஏழு நட்சத்திரங்களும் கொண்டதாக இருந்தது.

1917\ல் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், லோகமான்யதிலகரும், ஹோம்ரூல் இயக்கத்தின்போது. ஐந்து சிவப்பு பட்டைகளும், நான்கு பச்சை பட்டைகளும், மாற்றி மாற்றி சேர்த்து, அதில் ஏழு நட்சத்திரங்கள் பொறித்த பிரிட்டிஷ் கொடி மேல்புறம் வலது மூலையிலும், மற்றொரு மூலையில் வெள்ளைநிற இளம் பிறையும், ஒரு நட்சத்திரமும், பொறித்து தயாரித்தார்கள். தொமினியன் அந்தஸ்துக்காக பிரிட்டிஷ் கொடியும் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

1921\ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் பெஜவாடாவில் இந்து\ முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் வகையில் வெங்கையா என்பவரை ஒரு கொடி அமைத்து தரவேண்டிக் கேட்டு அமைத்த மூவண்ணக்கொடி காந்தியடிகளால் ஏற்கப்பட்டு, அகமதாபாத்தில் இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் ஏற்றிவைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கான வெள்ளை மேலே அதற்கு அடுத்து முஸ்லிம்களின் பச்சை கீழே, இந்து வண்ணமாகசிவப்பு வண்ணங்களும் ராட்டையும் (சர்க்கா) அமைந்த கொடியாக அது திகழ்ந்தது.

26.1.1930\ல் ஒரு கொடியை ஏற்றி,அக்கொடிக்கு ‘சுவராஜ்ஜியக்கொடி’ என்று பெயரிட்டனர். 1931\ம் ஆண்டில் கொடிகமிட்டி பரிந்துரையின்படி புதிய தேசியக்கொடி செம்மஞ்சள் நிறத்தில், மேல்பகுதியில் சர்க்காவோடு கூடிய கொடியை காங்கிரஸ் குழு அங்கீகரிக்காமல் விட்டுவிட்டது.

அதே ஆண்டில் மேலே செம்மஞ்சள் நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை, ஒரு சர்க்கா என்று அமைத்து புதிய கொடி உருவாக்கப் பட்டது. இந்தக் கொடியை காந்தியடிகள் பாராட்டினார்.இந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து 1947\ம் ஆண்டு ஜுன் 23\ந் தேதி தேசியக்கொடி உருவாக்க தனி குழு ஒன்று அமைத்தனர். முன்பிருந்த மூவண்ணக்கொடியில் சர்க்காவுக்குப் பதிலாக அதன் ஒரு பகுதியான சக்கரம் அமைக்கப்பட்டது. அச்சக்கரம் நீலநிறமான அசோக சக்கரம். 24 ஆரங்கள் கொண்டசக்கரத்துடன் கூடிய அந்தக் கொடி நமது தேசியக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா கேட்டுக்கு அருகே 15.8.1947 அன்று பண்டித நேருஜி, நமது தேசியக்கொடியை ஏற்றியது எல்லோர் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 16\ம் நாள் செங்கோட்டையில் நமது தேசியக்கொடியை ஏற்றி நமது நாட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் நேரு.

தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். கொடியின் நீளத்துக்கும், உயரத்துக்கும் (அகலம்) உள்ள விகிதம் 3:2 ஆக இருக்க வேண்டும்.

மூன்று வண்ணங்களுடன் சம இடை வெளிகொண்ட 24 ஆரங்களுடன் கடல் நீலத்தில் அசோக சக்கரம் அமைய வேண் டும். கம்பளி/ பஞ்சு காதி பட்டு மூலம் உருவாக் கப்பட வேண்டும்.

கொடியின் நிறம், சக்கரம் பற்றி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம்:

‘‘குங்குமச் சிவப்பு நிறம் ஆதாயம் கருதாத துறவைக் குறிக்கிறது. மையத்தில் உள்ள வெண்மை ஒளியாக இருந்து நமக்கு வழி காட்டும். மண்ணுக்கும் நமக்கும் உள்ள உறவை பச்சை நிறம் காட்டிக் கொண்டிருக்கிறது. வெண்மை யின் மையத்தில் உள்ள அந்த அசோக சக்கரம் தர்ம சட்டத்தின் சக்கரமாகவே இருக்கிறது.

அச்சக்கரம் இயங்குதலையும் குறிக்கிறது. இயங்காமையில் சாவு இருக்கிறது. வாழ்வு இயக்கத்தில் உள்ளது. இதற்கு மேலும் இந்தியா மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. அது கட்டாயம் இயங்கவும் முன்னோக்கி செல்லவும் வேண்டும். அச்சக்கரம் அமைதியானதொரு மாற்றத்தின் இயக்கத்தை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. அசோக சக்கரம் தர்ம சக்கரம். உருண்டு ஓடும். நம் வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. சத்தியம், தர்மம் முதலியவற்றை வாழ்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டும். இந்த நியதியை நாம் உணர வேண்டும். அதன்படி நடக்க வேண்டும்.’’

கொடியை உபயோகிக்கும் முறை

கொடி மரத்தின் உச்சியில் நன்றாக பறக்கவிட வேண்டும்.

ஞாயிறு தோன்று கிற பொழுதில் (அ) உதயத்தில் கொடியை ஏற்றவும், மறையும்போது கொடியை இறக்கவும் வேண்டும். கொடியை கெளரவமான இடத்தில் எல்லா நாட்களிலும் பறக்க விடலாம்.

அழுக்கடைந்த கிழிந்துபோன கொடி களை பயன்படுத்துதல் கூடாது. நமது கொடிக்கு மேலே எந்த கொடியும் பறக்கலாகாது. ஊர்வலம் செல்லும்போதும் சுவரில் (அ) விழா மேடையில் பல கொடி களை வைக்க நினைத் தால் நமது தேசியக்கொடி வலப்புறமாக இருக்க வேண்டும். தேசியக் கொடியில் எழுதவோ, அதைப் போர்வை போல் போர்த்தவோ, மண்ணில் தவழவிடவோ கூடாது. துக்க நாளில், உச்சிவரை கொடியை ஏற்றி பின் அரை கம்பத் தில் பறக்கவிட வேண் டும். இறக்கும்போதும் உச்சிவரை ஏற்றி இறக்க வேண்டும். கொடியை எழுந்து நின்று வணங்க வேண்டும். வணிக நோக்கங்களுக்காக கொடியைப் பயன்படுத்தக்கூடாது. கொடியை கீழ்நோக்கி சரிவாய் பிடிக்கக்கூடாது. திரைச்சீலையாக பயன்படுத்தக் கூடாது. தோரணமாகக் கட்டக்கூடாது.

இந்திய தேசியக்கொடியை அவமதித்தால்3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

———————————————————————————

நன்றி:- சு.வி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$