தொகுப்பு

Archive for the ‘ஓட்டம் ஓட்டப்பந்தயம்’ Category

ஓட்டம் ஓட்டப்பந்தயம் – GSS


எந்த விளையாட்டையுமே அதன் நுணுக்கங்களையும், அடிப்படை விதிகளையும் அறிந்து கொண்டால் திறமையாக ஆட முடியும். குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகளை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்தாலும் நன்றாக ரசிக்க முடியும். அதற்கு இந்தப் பகுதி உதவும். இந்த இதழில் ஓட்டம்.

1. ஓட்டப்பந்தயம் என்பதுதான் தடகளமா?

ஓட்டப்பந்தயம் மட்டுமே தடகளம் இல்லை. தடகளத்தில் வேறுபல விளையாட்டுப் பிரிவுகளும் உண்டு. ஆங்கிலத்தில் ‘ட்ராக் அண்ட் ஃபீல்ட்’ என்று சொல்வார்கள் இல்லையா, அதுதான் தமிழில் தடகளமாகி விட்டது.

2. தடகளம் என்றால் என்ன?

பல்வேறு தூரங்களை ஒரே சமயத்தில் போட்டியிட்டு வேகமாகக் கடக்கும் பந்தயங்கள் – ஓட்டப்பந்தயம், மராத்தான் பந்தயம், நடைப்போட்டி.. இவையெல்லாம் ‘தடம்’. உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டெறிதல், ஈட்டியெறிதல், ஷாட்புட் இவையெல்லாம் களம்.

3. இந்த இரண்டுமே கலந்த விளையாட்டுகளும் உண்டா?

உண்டு. பென்டத்லான், டெக்காத்லான் போன்ற பந்தயங்களில் தடம், களம் இரண்டும் உண்டு.

4. உலக அளவில் நடைபெறும் ஓட்டப்பந்தயங்களில் எந்தவித உடை வேண்டுமானாலும் அணியலாமா?

சுத்தமான, அருவருப்பு இல்லாத விதத்தில்தான் உடைகள் இருக்க வேண்டும். நனைந்தால்கூட உடலை வெளிப்படுத்தாத அளவுக்கு தடிமனான உடையாக இருக்க வேண்டும்.

5. ஷூக்கள் அணிந்துகொண்டுதான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும், இல்லையா?

அப்படி அவசியம் இல்லை. வெறும் காலோடும் கலந்து கொள்ளலாம். ஒரு காலில் மட்டும் காலணி அணிந்திருந்தாலும் தடை இல்லை. ஆனால், ஷூக்களின் நோக்கம் பாதத்துக்கு பாதுகாப்பு அளிக்கத்தான். மாறாக ஷூவில் ஓடும் வேகத்தை அதிகரிக்க உதவும் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டிருக்கக் கூடாது. ஷூக்களில் அதிகபட்சம் பதினோரு ஸ்பைக்குகள் (குமிழ்கள்) மட்டுமே பொருத்தப்பட்டிருக்கலாம்.

6. ஓட்டப்பந்தயத்தின் போது, உடன் ஓடுபவரின் வழியை மறித்து அவரை முழு வேகத்தில் ஓட விடாது செய்துவிட்டால்?

அப்படி மறித்தவர் அந்தப் பந்தயத்திலிருந்து நீக்கப்படுவார். ஆனால், மற்றவர்களைப் பொறுத்தவரை பந்தயம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். நடந்தது ஆரம்பநிலை சுற்று என்றால், போட்டி தொடர்ந்து நடக்க, வழிமறிக்கப்பட்டதினால் வெற்றிவாய்ப்பை இழந்தவரை நீதிபதி தானாக அடுத்த சுற்றுக்கு அனுப்பலாம்.

7. ஆரம்பத்தில் எந்த ‘லேனி’ல் நிற்கிறாரோ அதே லேனில்தான் ஓட்டப் பந்தய வீரர் கடைசி வரை ஓடவேண்டுமா?

ஆமாம். லேன் மாறினால் தகுதி இழப்பார்கள்!

8. பக்கத்தில் வருபவர் இடிப்பதுபோல் வந்து அதன் காரணமாக ஓடும் வேகத்தில் அடுத்த லேனுக்குள் செல்லும்படி நேர்ந்துவிட்டால்?

இதன் காரணமாக அவருக்கு எந்த அதிகப்படி நன்மையும் போட்டியில் கிடைக்கவில்லைஎன்று நடுவர் எண்ணினால் அவர் போட்டியைத் தொடரலாம். இல்லை என்றால் அவர் பந்தயத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.

9. மராத்தான் ஓட்டப்பந்தயங்களில் நடுவே கொஞ்ச நேரம் பந்தயப் பதையிலிருந்து விலகிப்போய் ஓய்வெடுத்துக் கொள்ளலாமா?

பொதுவாக பந்தயப் பாதையிலிருந்து விலகியவர்கள் மீண்டும் அதே பந்தயத்தில் தொடர முடியாது. ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. இருபது கிலோ மீட்டரைவிட அதிக தூரம் கொண்ட தடகளப்போட்டி என்றால் நடுவரின் அனுமதியோடு பந்தயப் பாதையிலிருந்து சிறிது நேரம் விலகி ஓய்வு எடுக்கலாம். ஆனால், இதன்மூலம் கடக்கவேண்டிய தூரம் குறைந்து விடக்கூடாது.

10. ஓட்டப்பந்தயங்களில் ‘ஹீட்ஸ் (Heats)’ என்கிறார்களே அது என்ன?

வேறு ஒன்றும் இல்லை… ஆரம்ப (தகுதி) சுற்றுப் போட்டிகளைத்தான் ‘ஹீட்ஸ்’ என்பார்கள்

11. ஓட்டப்பந்தய வீரர் வேகமாக ஓடும்போது தன்னை மறந்து வேறு ஒரு லேனுக்கு மாறி சென்றுவிட்டால் அவர் போட்டியில் வெல்லும் தகுதியை இழந்துவிடுவாரா?

நூறு மீட்டர், இருநூறு மீட்டர் போட்டிகளில் லேன்கள் நேரானவையாகத்தான் இருக்கும். இவற்றில் தற்செயலாக பக்கத்து லேனுக்கு மாறி விட்டால் அவர் தகுதி இழந்துவிடமாட்டார்.

அதிகத்தொலைவு உள்ள ஓட்டப் பந்தயங்களில் லேன்கள் வட்டவடிவில் இருக்கும். தனக்குரிய லேனில் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர், அதைவிட வெளிப்புறமாக உள்ள லேனுக்கு இடம் மாறிச் சென்றுவிட்டால் தகுதி இழக்க மாட்டார்.

இடம் மாறி ஓடும்போது அது மற்ற போட்டியாளருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

மேலே குறிப்பிட்டதைத் தவிர வேறு எந்தவகையில் லேன் மாற்றம் நடைபெற்றாலும், அவர் வெற்றிவாய்ப்பை இழக்கவேண்டியதுதான்.

12. சில ஓட்டப் பந்தயங்களில் ஒரே இடத்திலிருந்து எல்லோரும் போட்டியைத் தொடங்காமல் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்படுகிறார்களே, அது ஏன்?

வெவ்வேறு வட்டங்களில் அடுத்தடுத்து நிற்கவைக்கப்பட்டு அவரவர் வளையத்துக்குள் ஓடவேண்டும் எனும்போது, மிகவும் உட்புறமாக உள்ள வட்டத்தில் நிற்பவர் எல்லைக்கோட்டை அடைய குறைந்த தூரம் ஓடினாலே போதும் (ஏனென்றால், பந்தயமுடிவுக்கோடு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்) என்றாகிவிடும். எனவே, வெளி வட்டங்களில் போட்டியைத் தொடங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நிற்கும்படி ஏற்பாடு செய்வார்கள். அதாவது இந்த ஏற்பாட்டில் அனைவருமே ஒரே அளவு தூரம் ஓடும்படி இருக்கும்.

13. ஒருவரே அடுத்தடுத்து ஒரேநாளில்100, 200, 400 மீட்டர் பந்தயங்களில் கலந்துகொள்வதென்றால் மிகவும் கஷ்டப்படுவாரே?

அதற்காகத்தான் ஒரு ஓட்டப் பந்தயம் முடிவதற்கும் மற்றொரு ஓட்டப் பந்தயம் தொடங்குவதற்குமிடையே ஓரளவாவது கால அவகாசம் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

200 மீட்டர்வரை உள்ள பந்தயங்கள் என்றால் 45 நிமிட இடைவெளி அளிக்கப்படவேண்டும். 200-லிருந்து 1000 மீட்டர்வரை என்றால் 90 நிமிட இடைவெளி. ஆயிரம் மீட்டரைவிட அதிகத் தொலைவு உள்ள ஓட்டப் பந்தயம் நிர்ணயிக்கப்பட்ட நாளில் வேறெந்த ஓட்டப்பந்தயத்தையும் அறிவிக்கக் கூடாது.

14. சில பந்தயங்களில் இரண்டு பேர் ஒரே நேரத்தில் இறுதிக்கோட்டை எட்டுவதுபோலத் தோன்றுகிறது. என்றாலும் அவர்களில் ஒருவரைத்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கிறார்கள். இதை எப்படி முடிவு செய்கிறார்கள்?

உலக அளவிலான ஓட்டப் பந்தயங்களில் ‘போட்டோஃபினிஷ் ஜட்ஜ்’ என்றே ஒருவர் இருப்பார். இவர் தானாக இயங்கும் நேரக்கருவியின் உதவியுடன் யார் முதலில் வந்தது என்பதைத் தீர்மானிப்பார். விடியோ டேப்பைக் கொண்டும் இந்த தீர்மானத்துக்கு வருவார்.

15. ‘முன்பெல்லாம் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களில் அமெச்சூர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்’ என்கிறார்களே, அப்படியென்றால் என்னஅர்த்தம்?

சிலர் விளையாட்டையே தொழிலாகக்கொண்டு அது தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ளப் பணம் வசூலிப்பார்கள். இவர்கள் ப்ரொஃபஷனல்கள் எனப்படுவார்கள். தொழில் முறையாக இல்லாமல் பொழுதுபோக்காக விளையாடுபவர்கள் அமெச்சூர்கள். சமீப காலமாக ப்ரொஃபஷனல் களையும் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க அனுமதிக் கிறார்கள்.

16. உலக அளவில் நடத்தப்படும் ஓட்டப் பந்தயங்களில் ஆண்களுக்கான போட்டிகளும் பெண்களுக்கான போட்டிகளும் ஒரே மாதிரியானவையாக இருக்குமா?

100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் இரு பிரிவினருக்கும் பெரும்பாலும் இருக்கும். அதற்கு மேல் அந்தந்த அமைப்புகள் இந்த தூரத்தை முடிவு செய்யும்.

இன்னொரு விஷயம் தெரியுமா? உலக அளவில் நடைபெறும் எந்த தடகளப் போட்டியாக இருந்தாலும், பெண்களுக்கான ஓட்டபந்தயங்களில் கலந்துகொள்பவர்கள் அவர்கள் ஆணா, பெண்ணா என்பதை நிரூபிக்கும் மருத்துவச் சோதனையில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

முன்பு சில ஆண்கள் | பெண்கள் பிரிவில், மாற்று உடையில் பங்கேற்று பதக்கங்களும் பெற்றிருக்கிறார்கள். இதைத் தவிர்க்கவே இந்தச் சோதனை.

17. பாதி ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் விழுந்துவிட்டால் அவர் தொடர்ந்து ஓட அனுமதிக்கப்படுவாரா?

தாராளமாக. 1972-ல் மூனிச்சில் நடைபெற்ற 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லாசே விரேன் என்பவர் பாதியில் விழுந்துவிட்டார். அப்படியும்எழுந்து தொடர்ந்து ஓடி தங்கப்பதக்கத்தைப் பெற்றதோடு நேரத்தில் புதிய உலக சாதனையும் நிகழ்த்தினார்.

18. விசில் ஊதப்படுவதற்கு முன்பே ஒருவர் ஓடத்தொடங்கி விட்டால் அவர் அந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்துவிடுவாரா?

தகுதி இழக்க மாட்டார். ஒருமுறை எச்சரிக்கப்படுவார். மீண்டும் அதே தவறை அவர் செய்தால் மட்டுமே போட்டியிலிருந்து விலக்கப்படுவார். ஒரு விஷயம் தெரியுமா? பண்டைய ஒலிம்பிக்ஸில் இந்தத் தவறைச் செய்தவர்களை சவுக்கால் அடித்தார்களாம்!

********************************************************************

நன்றி:- சு.வி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++