தொகுப்பு

Archive for the ‘பகுதி-09 கிராமத்து கைமணம்’ Category

பகுதி-09 கிராமத்து கைமணம் பச்சை மொச்சை-பரங்கிக் குழம்பு பிரண்டை துவையல் வெந்தய இட்லி துருவல் சேனை புளிப்பொரியல்


பச்சை மொச்சை – பரங்கிக் குழம்பு

மொச்சைப்பயறு பச்சையா ஒரு கப் எடுத்துக்குங்க. ஒரு கீத்து பரங்கிக்காயை சின்ன துண்டுகளா நறுக்கிக் குங்க. மூணு கட்டு வெந்தயக் கீரையை அலசிக் கழுவிட்டு, இலைகளாக ஆய்ஞ்சுக்குங்க. ஒரு கப் சின்ன வெங்காயத்தையும் அரை கப் பூண்டையும் தோல் உரிச்சு, பொடியா நறுக்கிக்குங்க. நாலு தக்காளியை நறுக்கி எடுத்துக் குங்க. எலுமிச்சை அளவு புளியை, ரெண்டு கப் தண்ணில கரைச்சு, வடி கட்டி வச்சுக்குங்க. ஆறு சின்ன வெங்காயம், அரை டீஸ்பூன் சீரகம், ஒன்றரை டீஸ்பூன் பொட்டுக் கடலை, கறிவேப்பிலை சேர்த்து, விழுதா அரைச்சு வைங்க.

வாணலியை அடுப்பில் வச்சு, தாளிக்கத் தேவையான எண்ணெய் ஊத்தி, அது காய்ஞ்சதும், கடுகு, சீரகம், வெந்தயம் மூணையும் தலா அரை டீஸ்பூன் போட்டுப் பொரியவிடுங்க. அப்புறம், நறுக்கி வச்சிருக்கற வெங்காயம், பூண்டு போட்டு, ஆய்ஞ்சு வச்சிருக்கற கீரையை யும் சேர்த்து வதக்குங்க. அதோட தக்காளி, மொச்சை, பரங்கிக் காய்த் துண்டுகளைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையறவரைக்கும் நல்லா வதக்குங்க. அதுல கரைச்சு வச்சிருக்கற புளித்தண்ணி, ரெண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரைச்சு வச்சிருக்கற விழுது… எல்லாத் தையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விடுங்க. காய் வெந்ததும், இறக்குங்க. பொங்கலுக்கு சூப்பர் காம்பினேஷன் இந்தக் குழம்பு!

வாய்ப்பிருந்தா மண்சட்டியில இந்தக் குழம்பை செஞ்சு பாருங்க. பிரமாதமான வாசத்தோட, அபார ருசியும் சேர்ந்துக்கும்!

பிரண்டை துவையல்

கிராமத்துப் பக்கம் வேலிகள்ல படர்ந்து கிடக்கும் பிரண்டை, இப்போ நகரங்கள்லயும் மார்க்கெட்ல கிடைக்குது. நல்ல பிஞ்சா பார்த்து வாங்கிக்குங்க. விரல் நீளத்துக்கு ஆறு துண்டுகளை எடுத்து பொடியா நறுக்கிக்குங்க. எட்டு சின்ன வெங்காயத்தையும் ரெண்டு தக்காளியையும் அதேமாதிரி பொடியா நறுக்கி வச்சுக்குங்க. நாலு பூண்டு பல்லை உரிச்சு வச்சுக்குங்க.

அடுப்புல வாணலியை வச்சு, ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவச்சு, பிரண்டையை நல்லா வதக்கி, எடுத்துடுங்க. அதே எண்ணெய்ல அரை டீஸ்பூன் கடுகு போட்டு பொரியவிடுங்க. அதோட, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்து, அது சிவந்ததும், ஆறுலேர்ந்து எட்டு (உங்க ருசிக்கேற்ப) காய்ஞ்ச மிளகாயைப் போட்டு, வறுத்துக்குங்க. அதோடு, நறுக்கி வச்சிருக்கற வெங்காயத்தை யும் பூண்டையும் சேர்த்து, ஏற்கெனவே வதக்கிய பிரண் டையையும் போட்டு அஞ்சு நிமிஷம் வதக்கி, நறுக்கிய தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை, மல்லி, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, தேவையான உப்பு சேர்த்து, மேலும் அஞ்சு நிமிஷம் வதக்கி, இறக்கி, ஆறினதும், துவையலா அரைச்சு எடுங்க.

குறிப்பு: வயிறு மந்தம், வாயுத் தொல்லைக்கெல்லாம் கைகண்ட மருந்து இந்தத் துவையல். ஆனா ஒண்ணு, பிரண்டை முத்தலா இருந்தாலோ, சரியா வதக்காம இருந்தாலோ, நாக்கு அரிக்கும், ஜாக்கிரதை!

வெந்தய இட்லி

ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தையும் ஆறு ஆமணக்கு விதையையும் (நாட்டுமருந்துக் கடைகள்ல கிடைக்கும்) ஒண்ணா ஊற வைங்க. ரெண்டு கப் புழுங் கல் அரிசியைக் கழுவி, தனியா ஊறவைங்க. ஒரு மணி நேரம் ஊறினப்புறம், முதல்ல வெந்தயத்தையும் ஆமணக்கு விதை யையும் நல்லா பஞ்சு போல அரைச்சுக் கிட்டு, ஊறின அரிசியையும் அதோட சேர்த்து, கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்குங்க. தேவையான உப்பு சேர்த்து, நல்லாக் கரைச்சு வைங்க. எட்டுலருந்து பத்து மணி நேரம் புளிக்கவிடுங்க. புளிச்ச துக்கு அப்புறம் இட்லிகளா ஊத்தி வேகவிட வேண்டியதுதான். இந்த வெந்தய இட்லி, உடம்புக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. அதிக உஷ்ணத்தால அவதிப்படறவங்களுக்கு ஏத்த கிராமத்து உணவு.

துருவல் சேனை புளிப்பொரியல்

‘‘கால் கிலோ சேனைக்கிழங்கை மண் போகக் கழுவி, தோலைச் சீவிக்கொள்ளுங்கள். கேரட் துருவி யால், சேனைக்கிழங்கைத் துருவிக்கொள்ளுங்கள். எலுமிச்சையளவு புளியைக் கரைத்து, தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்துவையுங்கள். இரண்டு டீஸ்பூன் மல்லி, நான்கு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித் துக்கொள்ளுங்கள். பின், வாணலியில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கிழங்கு துருவலைப் போட்டு வதக்குங்கள். பின், அதில் புளிநீரைச் சேர்த்து, நன்கு வேகும் வரை வதக்குங்கள். கிழங்கு வெந்ததும், பொடித்து வைத்துள்ள மல்லிப் பொடி, ஒரு டீஸ்பூன் வெல்லப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறிஇறக்குங் கள். செம டேஸ்ட்டாய் இருக்கும் இந்தப் பொரியல்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த தாரா.

‘‘வழக்கமா வாழைக்காய், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கில்தான் இந்த மாதிரிப் பொரியல் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சேனையில் செய்யும் இந்தப் பொரியல் கூட சுவையாகத்தான் இருக்கிறது’’ என்கிறார் இக் குறிப்பைத் தேர்வுசெய்த ரேவதி சண்முகம்.

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை