தொகுப்பு

Archive for the ‘பகுதி-05 கிராமத்து கைமணம்!’ Category

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்


குறிப்பிட்ட சில பொருட்களையே அடிக்கடி சமையல்ல சேர்த்தாலும், சலிப்பு வந்துடாதபடிக்கு அதை வேற வேற பதார்த்தமா மாத்தி வித்தியாசம் காட்டறது கிராமத்து சமையலோட சிறப்பம்சம். மரவள்ளிக் கிழங்கு, தட்டைப் பயிறு, கருப்பட்டினு வழக்கமான கிராமத்து ஐட்டங்களுக்கு புது சுவை தர்றதுதான் இந்த குறிப்புகள்…

மரவள்ளிக் கிழங்கு புட்டு

வழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்!

அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பிசறுங்க.

அவ்வளவுதான் வேலை. புட்டு தயார்! இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம்.

கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

——————————————————————————————————————

தட்டைப் பயிறு அடை
தட்டைப் பயிறு அடையும் கடலைப் புண்ணாக்கு சட்னியும்

ஒரு கப் அளவுக்கு தட்டைப் பயிறை எடுத்து கல், மண் போகச் சுத்தப்படுத்தி, தண்ணீர்ல ஊற வைங்க. குறைஞ்சது ஆறு மணி நேரமாவது ஊறணும். அப்புறமா தண்ணிய வடிகட்டிட்டுப் பயிறை மட்டும் எடுத்து அதோட, காய்ஞ்ச மிளகாய் ரெண்டு, அரை டீஸ்பூன் சீரகம் இல்லேனா சோம்பு, தேவையான உப்பு சேர்த்து கரகரப்பா அரைச்செடுங்க.

பத்து சின்ன வெங்காயம், ரெண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை கொஞ்சம்… இதை எல்லாத்தையும் பொடியா நறுக்கி, அரை கப் தேங்காய்த் துருவலையும் சேர்த்து மாவோட கலக்குங்க.

தோசைக்கல்லை காயவெச்சு, எண்ணெய் தடவி அதுல மாவை கனமா, சின்னச்சின்ன அடைகளா ஊத்துங்க. சுத்தியும் எண்ணெய் ஊத்தி வேக வைங்க. வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவெச்சு எடுங்க.

பூண்டு, பெருங்காயத் தூளை மாவுல கலந்துக்கறது நல்லது. ஏன்னா தட்டைப் பயிறு வாயு கோளாறை உண்டாக்கும். பூண்டு, பெருங்காயத்தை சேர்க்கறதால அந்தத் தொல்லை குறையும்.

இந்த தட்டை பயிறு அடையை வேர்க் கடலை புண்ணாக்கு சட்னியோட சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.

வேர்க்கடலை புண்ணாக்கு சட்னியை செய்யறது எப்படினும் பார்ப்போம்…

ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதுல ஆறு மிளகாய் வற்றல், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் பெருங்காயத் தூள் இதையெல்லாம் ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணாப் போட்டு வறுத்தெடுங்க. அப்புறமா அதுல அரைக் கப் வேர்க் கடலைப் புண்ணாக்கு, ரெண்டு பல் பூண்டு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் இதையெல்லாம் வறுத்து, கடைசியா கொஞ்சம் கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவையான உப்பு, சின்ன நெல்லிக் காய் அளவுக்கு புளி இதையெல்லாம் சேர்த்து வதக்கி இறக்குங்க. ஆறினதும் நைஸா அரைச்செடுத்தா… அதுதான் வேர்க்கடலை புண்ணாக்கு சட்னி!

____________________________________________________________

கருப்பட்டி பணியாரம்

ஒரு கப் பச்சரிசியை தண்ணில அரை மணி நேரம் ஊற வெச்சு, வடிகட்டி பொடிச்சுக் குங்க. ஒரு கப் கருப் பட்டியை பொடிச்சு, கால் கப் தண்ணீர் ஊத்தி, காய்ச்சுங்க. கருப்பட்டி கரைஞ்சதும் இறக்கி, வடிகட்டி, மறுபடியும் காய்ச்சுங்க. அஞ்சு நிமிஷம் கொதிச்சதும் இறக்கி ஆற வைங்க.

இந்த கருப்பட்டிக் கரைசலை பச்சரிசி மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கலக்குங்க. தோசை மாவு பதத்துக்கு வந்துடும்.

பணியாரத்தை பொரிச்செடுக்கிற அளவுக்கு எண்ணெயை வடை சட்டில ஊத்தி, அதுல ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் யையும் ஊத்தி மிதமான தீயில காயவைங்க. காய்ஞ்சதும் அதுல மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமா ஊத்துங்க. மாவு வெந்து, மேல வந்ததும் திருப்பிப் போட்டு வேகவெச்செடுங்க.

இந்த பணியாரத்தை ரெண்டு நாள் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம். கருப்பட்டி மணம் கமகமக்க, அவ்வளவு ருசியா இருக்கும் இந்த பணியாரம்.

___________________________________________________________________

உளுந்து பலகாரம்

உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் கலந்து வைத்து, பொரித்த உளுந்து உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் அதில் ஊற வைத்து, பிறகு சாப்பிட்டுப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்!

……………………………………………………………………

சந்திப்பு: கீர்த்தனா

படங்கள்: பொன். காசிராஜன்

——————————————————————————-

நன்றி:-ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

#############################################