தொகுப்பு

Archive for the ‘உன் திருப்தியில்’ Category

உன் திருப்தியில் – யாசர் அரஃபாத்


அனுப்பி வைத்துவிட்டீர்கள்
அரபு நாட்டிற்கு;
எந்திர உலகத்தில்
உன்னைப் போல் எவருமில்லை
உருகி உருகிப் பார்ப்பதற்கு!!

அம்மை நோய் வந்த நாள்;
அன்று நான் நொந்த நாள்;
எல்லோரும் அருகில் இருந்தும்
எவரும் இல்லாமல் நான்!

மச்சான்! மாப்பிளே!
என்று உறவாடியவர்களின் முகத்தில்
இன்று எத்தனை சுருக்கம் – அவர்கள்
மனமெல்லாம் இறுக்கம்!

உடல் உஷ்ணம் அம்மை வந்தது
மன உஷ்ணம் அம்மா ஞாபகம் வந்தது!

ஒரு பருக்கை இருந்தாலும்
உடைத்து கொடுப்பாயே;
படுத்தப் பின்னும்
பாதி இரவில் போர்த்தி விடுவாயே!

பாசம் மட்டும்
பஞ்சுமெத்தையாய் நான்
படுக்க இனி எப்போது காலம்;
உன் கரம் பிடித்து
கதறி அழு வேண்டும் நாளும்!!

என்னைக்
கடித்த கொசுவை நீ
விரட்டி விரட்டி அடித்தக் கதை மறக்காது;
என் முகம் சுழித்தாலும்
உன் முகம் மலர மறுக்காது!!

வற்றாத சுரபி உன் பாசக் கிணறு;
வள்ளல் நபி வழிக் காட்டுதல்
தாயை மறப்பது தவறு!

மும்முறைக் கேட்டப் போதும்
முதல் உரிமை அன்னைக்குதான்;
உன் திருப்தியில் நான் சுவனம் செல்வேன்
அன்றைக்குத்தான் (இன்ஷா அல்லாஹ்)

நன்றி:–யாசர் அரஃபாத்