தொகுப்பு

Archive for the ‘சுற்றுசூழல்’ Category

சுற்றுசூழல் – பீ. எம். கமால் கடையநல்லூர்


ஆயிரத்து நானூறு

ஆண்டுகட்கு முன்னால்

அகிலத்தின் சுற்றுசூழல்

அம்மணமாய்க் கிடந்தது !

அறங்கள் என்னும்

மரங்களை இழந்து

அரபகத்து பாலைவனம்

அநாதையாய்க்  கிடந்தது !

சூட்டின் கேட்டில்

சுருண்டுபோய்க் கிடந்தது

பாலை மட்டுமா ?

பாவி மனிதனின்

பண்பாடும்  கூட !

சீழ்நாறிக் கொண்டிருந்த

சிலை களிலெல்லாம்

பாவத் தூசுகள்

பரவிக் கிடந்ததால்

ஏகத்துவ வைரத்தை

உப்புகற்கள் உரசிப் பார்த்தன !

மனிதர்களுக்கு

பல தெய்வங்கள்

குலதெய்வங்கள் ஆனதால்

காற்றும்  கூடக்

கற்பழிந்திருந்தது !

சுற்றுசூழல்

மாறுபட்டிருந்ததால்

ஆன்ம வெளி யங்கே

அழுக்காகிக் கிடந்தது !

சுற்றுச் சூழலைக்

கற்றுக்கொள்ளவும்

கடவுளை மனதில்

பெற்றுக் கொள்ளவும்

கல்வி அப்போது

காணாமல் போயிருந்தது

அந்நேரத்தில்

பொன்னொளி ஒன்று

புறப்பட்டு வந்தது !

அறங்கள் என்னும்

மரங்களை நட்டு

மகிமைப் படுத்த

மன்னர் நபிகள்

மண்ணில் உதித்தார்

வள்ளல் நபியின்

வாய்மொழி அமுத

வார்த்தை மரங்கள்

நடப்பட்டதால் தானே

மனிதனின் மனச்

சுற்றுச் சூழல்

சுகாதாரம் பெற்றது !

அது-

வெறும்.

மரங்கள் மட்டுமல்ல-

மண்ணுக்கு கிடைத்த

மகத்தான வரங்கள் !

தென்னை மரங்களுக்கு

அன்னை மரமான

பேரீச்சை மரங்களும்

பேசிய காலமது !

‘ஆல’ மரங்களும்

‘அரச” மரங்களும்

பேரீச்சை மரத்திடம்

பிச்சை கேட்டன !

பெருமானாரின்

தண்ணொளி பட்டுத்

தழைத்தன அறங்கள் !

வள்ளல்   நபியின்

வருகையதனால்

பாலை மட்டுமா

பரிசுத்தம் ஆனது ?

அகிலமே அன்று

அசுத்தம் நீங்கியது !

விண்ணில் விழுந்த

ஒசான் ஓட்டையை

ஒக்கிட வந்த

ஒப்பற்ற நபிகள்

அதனால் தானோ

ஒரு விரல் நீட்டி

ஒண் மதியைப் பிளந்தார்கள் ?

சுற்றுச் சூழல் தினம்

ஜூன் ஐந்து தேதி அல்ல !

உத்தம நபிகள்

உதித்த நன்னாளே

சுத்தம் பிறந்த நாள்

சுற்றமும் மகிழ்ந்த நாள் !

சுத்தம் எனபது

ஈமானில் பாதியென்று

எந்த மதமும்

எடுத்துச் சொன்னதில்லை !

சுற்றுச் சூழலைச்

சுத்தம் செய்வதற்கு

சொன்னது நபிகள்

நாயகம் மட்டுமே

மார்க்க  மா மேதைகளே

இதோ நமது

மார்க்கச் சுற்றுசூழல்

மாசாகிக்  கொண்டிருக்கிறது !

பாலி தீன்களால் மட்டுமல்ல –

போலிதீன் களாலும்

பொலிவிழந்து கிடக்கிறது !

பெருமானாரைப்

பின்பற்றி நடந்த

அருமைததோழரை

ஆருயிர் நேசரை

சிறுமைப்படுத்தும்

கிரிமினல் சிலரால்

சத்திய வழியின்

சுற்றுச்சூழலில்

குப்பைகள் இங்கே

கொட்டப்படுகிறது !

தீன் நெறியில்

வீண் நெறியைத்

திணிக்கின்ற பேர்களை

சுத்தபடுத்துதற்கு

சோதரரே ! தயவுசெய்து

கையில் துடைப்பக்

கட்டையுடன் வாருங்கள் !

இஸ்லாத்தின் சோலைகளில்

இடுகின்ற குப்பைகளை

எடுத்து எறிவதற்கு

எல்லோரும் வாருங்கள் !

அல்ஹம்துலில்லாஹ்

நன்றி:- பீ. எம். கமால்  கடையநல்லூர்

***************************