தொகுப்பு

Archive for the ‘காட்டு மிராண்டிகள்’ Category

காட்டு மிராண்டிகள் – பி. எம். கமால் கடையநல்லூர்


நாங்கள்
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அரபகத்துப் பாலையில்
அலைந்த  மிருகங்கள் !

இறைவன் எங்களின்
இதயத்தில் முத்திரையை
இட்டுவிட்ட  காரணத்தால்
உதயமே ஆகாமல்
அஸ்தமனச்  சகதியில்
ஆழ்ந்து போனவர்கள்
உள்ளத் தாக்குதல்
ஒன்றும் இல்லாமல்
பள்ளத் தாக்குகளில்
பரவிக் கிடந்தவர்கள் !

அண்ணல் நபிகளை
அறவே வெறுத்து  விட்டு
எண்ணங்கள் சிதைந்து
எருமைகளாய் வாழ்ந்தவர்கள்
எங்களுக்கு நீங்கள்
இட்ட பெயரோ
காட்டு மிராண்டிகள்
கவைக்குதவாதவர்கள் !

நாங்கள்-
முழு நிலவைத் தரையில்
முற்றாகக் கண்டவர்கள்!
கலிமாவைச் சொல்லாத
காரணத்தால் நாங்களெல்லாம்
காபிர்களாகிக்
கருங் கல்லாய் ஆகிவிட்டோம் !

வட்டியில்தான் எங்கள்
பெட்டிகள் நிறைந்தன
சட்டிகளில் சாராயச்
சலங்கை ஒலித்தன

பெருமானார் சொன்ன
வழிமுறை எல்லாம்
பெரிதாய் நாங்கள்
கைக்கொள்ளவில்லை !

நபியைச்
சாதாரண மானவர் என்று
கருதிய காரணத்தால்
சரித்திரம் எங்களைக்
காறித் துப்புகிறது !

புறக்  கண்ணால் மட்டுமே
பூமான் நபிகளை
புரிந்து கொண்டோம்
அகக் கண்ணால் ஒருபோதும்
அளந்து பார்க்கவில்லை!

அந்தக்
கர்த்தனின் தோட்டத்து
கருணை மலருக்குள்
அல்லாஹ்வின் அமுதத் தேன்
அடங்கிக் கிடந்ததை
அறியாமல் போனோம்

இஸ்லாத்தில் எங்களை
இணைக்காத காரணத்தால்
காபிராகவே கப்ருக்குள்
அடங்கிவிட்டோம் !

ஒளி இருந்தும் காண்பதற்கு
விழி இருந்தும் நாங்கள்
இருளுக்குள் மூழ்கியே
இருந்து விட்டோம் !

அட ! ஓ ! மனிதர்களே !
இப்போதும் நீங்கள்
எங்களைப் போல் தானே
இருக்கின்றீர்கள் !

வட்டி உங்கள்
வலக்கரம் என்றால்
வரதட்சணை உங்கள்
இடக்கரம் அல்லவா ?

இன்னும் நீங்கள்
திங்கள் நபியை
எங்களைப் போலே
சாதாரண மனிதர்
என்று தானே
சொல்லித் திரிகின்றீர் !

நாங்கள்
காடுகளில் பாலைகளில்
அலைந்த
காட்டு மிராண்டிகள் !

நீங்களோ
வீடுகளில் வாழ்ந்தாலும்
வேத  மறை மறந்துவிட்ட
புத்தியே இல்லாத
புதிய காட்டுமிராண்டிகளே !

—————————————————————————————————–

பி. எம். கமால் கடையநல்லூர்

================================================================