தொகுப்பு

Archive for the ‘கடவுளின் பெயரால்’ Category

கடவுளின் பெயரால் – பி. எம். கமால்


முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !

அதனால்
காவித் தொட்டில்களில்
காமம் ஆடுகிறது !
பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!

நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !

வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?

கங்கையில் குளிக்கின்ற
சாமியார்கள் இன்று
மங்கைகளில் குளித்து
மானம் இழக்கின்றார் !

கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!

பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்

ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !

இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !

பள்ளியை இடித்த
பண்டாரங்களே !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !

நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !
ஒரே இறைவனின்
ஒப்பற்ற பெயரால்
எல்லா மதங்களிலும்
ஏமாற்று நடக்கிறது !

தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !

கடவுளின்  பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே  !

ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !

ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !

நன்றி:- பி. எம். கமால்

********************************