தொகுப்பு

Archive for the ‘ஒளி கொண்டு வந்த உளி’ Category

ஒளி கொண்டு வந்த உளி – பி. எம். கமால் கடையநல்லூர்


காற்றுக்கு வியர்த்தது
கரைந்து போய்இருந்தது
வரம் வேண்டித் தாவரங்கள்
கிளைக்கரம் ஏந்தி
ஒற்றை வேர்களில்
உபவாசம் இருந்தன

பாலைவனம் சூரியனின்
படுக்கையறை ஆனது
வாழ்கையின் உரமான
பெண்கள்

பூமிக்கு உரமாக
புதைக்கப்பட்டனர்
கற்கள் பயன்படுத்தப்பட்டன
கொல்லவும் வணங்கவும்

அது-

இறந்த காலம்

அன்று
ஏழை சிரிக்கவில்லை
அதனால்
இறைவனை ஒருவரும்
காண முடியவில்லை !

பணக்காரனிடத்தில்
கத்தி இருந்தது
பக்தி இல்லை

நீதியோ செத்து
நாறிக்கிடந்தது
சிலைகளின் கால்களில்

சிதறிக்கிடந்தன
மனிதத் தலைகள் !
உயிரோடு

இப்படியெல்லாம்
சீரழிந்து கொண்டிருந்த
செங்கடல் பாலையில்

இறைவனின் ஒளியின்
துளியொன்று கையில்
உளிகொண்டு வந்தது

பாசியும் தூசியும்
பாவத்தின் துருக்களும்
பற்றிப் பிடித்திருந்த
மனித மனங்களை
செதுக்குவதற்கும்
புதுக்குவதற்கும்

அந்த
ஒளி வந்த பிறகுதான்
ஆன்மாவின் இருட்டு
மூலைகளிலெல்லாம்
வெளிச்சத்தின் விலாசம்
எழுதப்பட்டன !

இப்போது
அது
இறந்த காலமல்ல !

உலகம்
மீண்டும் ஒருமுறை

உயிருடன் மீண்ட
நிகழ் காலமது !

இறந்த காலத்தில்
இருந்தவர்கள்

தங்களின்
நிகழ் காலத்தில் நம்மை
எதிர் காலமாகப் பார்த்தார்கள்

ஆனால் நாமோ
பிடிவாதமாக
இறந்த காலத்திற்குள்
நுழைவதற்காக
முண்டியடித்துக்
கொண்டிருக்கிறோம்

ஒளி கொண்டுவந்த
உளிகொண்டு நம்மை
எப்போது
செதுக்குவோம் ?

—————————————————————————————————————–

பி. எம். கமால் கடையநல்லூர்

================================================================