தொகுப்பு

Archive for the ‘ஒட்டகமே ! ஒட்டகமே !!’ Category

ஒட்டகமே ! ஒட்டகமே ! – பி. எம். கமால், கடையநல்லூர்


ஒட்டகமே ! ஒட்டகமே !
எங்களின் உயிர் சுமந்த
பெட்டகமே ! புத்தகமே !

அகிலத்தின் பேரொளியை
ஆண்டவனின் ஒளித்துளியை
அலுங்காமல் குலுங்காமல்
அரபகத்துப் பாலைகளில்
அதிசயமாய் நீ சுமந்தாய் !
நீ-

“வஹி’ வரும் போதெல்லாம்
வலி தாங்க முடியாமல்
வழியில் படுத்தெழுந்த
வகையறிந்து அதிசயித்தேன் !

எங்கள்
அண்ணல் நபிகளையா
அங்கே நீ சுமந்தாய் ?
இந்த
அண்ட சராசரத்தை
அல்லவா நீ சுமந்தாய் !

பயகம்பர் நபிக்கு
பால் தந்த ஒட்டகமே !
எங்கள் நபிக்கு
உன் பால் தந்து
உபசரித் ‘தாய்’ நீ !

அவரோ
அகிலத்தை
அன்பால் நேசித்து
அருளே நிறைகின்ற
பண்பால் உயரவைத்து
பசிபோக்கிப் பாதுகாத்தார் !

பால் தந்த ஒட்டகமே !
பண்பாட்டு நாயகர்
பயணித்த ஒட்டகமே !
நீங்கள்
உங்கள் குலத்திடையே
உயர் திணை ஆனீர்கள் !
எங்கள் மனப் பரப்பில்
இன்னும் நடக் கின்றீர்கள் !

ஒட்டகமே ! பட்டினியின்
புத்தகமே !
நீ
சுமந்து நடந்தது
எங்களின் பல்கலைப்
பாடப் புத்தகத்தையல்லவா ?

நீ
முதுகினில் தானே
முத்து நபி சுமந்தாய் ?
நாங்களோ
இறுதி நாள் வரையில்
இதயத்தில் அல்லவா
எப்போதும் சுமந்திடுவோம் ?

ஒட்டகமே !
எங்கள் நபி நாயகத்தை
கண்கள் இமை
சுமப்பதுபோல்
கடுவெளியில் நீ சுமந்தாய் !

சுவனத்துப் பூ மலரை
கவனத்துடன் சுமந்ததினால்
பாலை வனக் கப்பல் நீ
பரிணாமம் பெற்றுயர்ந்து
புராக்கை விடவும்
புனிதம் அடைந்து விட்டாய் !

ஒளி சுமந்த ஒட்டகமே !
நீ வழி நடந்த போதெல்லாம்
சூரியச் சூட்டில்
சுழன்றடித்த காற்று எல்லாம்
தென்றலாய் தானே
தெரிந்திருக்கும் உனக்கு ?

அன்று நீ
கஸ்தூரி வாடையில்
கரைந்திருப்பாய் !
கண்கள் எல்லாம்
காட்சிகளில் நிறைந்திருப்பாய் !
மலக்குகள் உனைக்கண்டு
மனம் புழுங்கி இருப்பார்கள்

ஒட்டகமே !
செல்வ நபி நாதரிடம்
சேர்ந்ததின் பின்  தானே
பகுத்தறிவு உனக்குப்
பக்குவப்பட்டது ?
அதனால்  தான்
மதீனத்து மண்ணில்
மன்னரின் இடத்தை
படுத்துக் கிடந்து நீ
பக்குவமாய் சொன்னாய் !
நீ

படுத்த இடத்தில தானே
பள்ளி எழுந்தது ?
ஒட்டகமே! ஒட்டகமே!
ஒளி சுமந்த பெட்டகமே !
நீ

நானாக
இருந்திருக்கக் கூடாதா ?

……………………………………………………

நன்றி:- பீ. எம். கமால்  கடையநல்லூர்

****************************************************************************************