தொகுப்பு

Archive for the ‘பி. எம். கமால் கடையநல்லூர்’ Category

ஒட்டகமே ! ஒட்டகமே ! – பி. எம். கமால், கடையநல்லூர்


ஒட்டகமே ! ஒட்டகமே !
எங்களின் உயிர் சுமந்த
பெட்டகமே ! புத்தகமே !

அகிலத்தின் பேரொளியை
ஆண்டவனின் ஒளித்துளியை
அலுங்காமல் குலுங்காமல்
அரபகத்துப் பாலைகளில்
அதிசயமாய் நீ சுமந்தாய் !
நீ-

“வஹி’ வரும் போதெல்லாம்
வலி தாங்க முடியாமல்
வழியில் படுத்தெழுந்த
வகையறிந்து அதிசயித்தேன் !

எங்கள்
அண்ணல் நபிகளையா
அங்கே நீ சுமந்தாய் ?
இந்த
அண்ட சராசரத்தை
அல்லவா நீ சுமந்தாய் !

பயகம்பர் நபிக்கு
பால் தந்த ஒட்டகமே !
எங்கள் நபிக்கு
உன் பால் தந்து
உபசரித் ‘தாய்’ நீ !

அவரோ
அகிலத்தை
அன்பால் நேசித்து
அருளே நிறைகின்ற
பண்பால் உயரவைத்து
பசிபோக்கிப் பாதுகாத்தார் !

பால் தந்த ஒட்டகமே !
பண்பாட்டு நாயகர்
பயணித்த ஒட்டகமே !
நீங்கள்
உங்கள் குலத்திடையே
உயர் திணை ஆனீர்கள் !
எங்கள் மனப் பரப்பில்
இன்னும் நடக் கின்றீர்கள் !

ஒட்டகமே ! பட்டினியின்
புத்தகமே !
நீ
சுமந்து நடந்தது
எங்களின் பல்கலைப்
பாடப் புத்தகத்தையல்லவா ?

நீ
முதுகினில் தானே
முத்து நபி சுமந்தாய் ?
நாங்களோ
இறுதி நாள் வரையில்
இதயத்தில் அல்லவா
எப்போதும் சுமந்திடுவோம் ?

ஒட்டகமே !
எங்கள் நபி நாயகத்தை
கண்கள் இமை
சுமப்பதுபோல்
கடுவெளியில் நீ சுமந்தாய் !

சுவனத்துப் பூ மலரை
கவனத்துடன் சுமந்ததினால்
பாலை வனக் கப்பல் நீ
பரிணாமம் பெற்றுயர்ந்து
புராக்கை விடவும்
புனிதம் அடைந்து விட்டாய் !

ஒளி சுமந்த ஒட்டகமே !
நீ வழி நடந்த போதெல்லாம்
சூரியச் சூட்டில்
சுழன்றடித்த காற்று எல்லாம்
தென்றலாய் தானே
தெரிந்திருக்கும் உனக்கு ?

அன்று நீ
கஸ்தூரி வாடையில்
கரைந்திருப்பாய் !
கண்கள் எல்லாம்
காட்சிகளில் நிறைந்திருப்பாய் !
மலக்குகள் உனைக்கண்டு
மனம் புழுங்கி இருப்பார்கள்

ஒட்டகமே !
செல்வ நபி நாதரிடம்
சேர்ந்ததின் பின்  தானே
பகுத்தறிவு உனக்குப்
பக்குவப்பட்டது ?
அதனால்  தான்
மதீனத்து மண்ணில்
மன்னரின் இடத்தை
படுத்துக் கிடந்து நீ
பக்குவமாய் சொன்னாய் !
நீ

படுத்த இடத்தில தானே
பள்ளி எழுந்தது ?
ஒட்டகமே! ஒட்டகமே!
ஒளி சுமந்த பெட்டகமே !
நீ

நானாக
இருந்திருக்கக் கூடாதா ?

……………………………………………………

நன்றி:- பீ. எம். கமால்  கடையநல்லூர்

****************************************************************************************

ஒளி கொண்டு வந்த உளி – பி. எம். கமால் கடையநல்லூர்


காற்றுக்கு வியர்த்தது
கரைந்து போய்இருந்தது
வரம் வேண்டித் தாவரங்கள்
கிளைக்கரம் ஏந்தி
ஒற்றை வேர்களில்
உபவாசம் இருந்தன

பாலைவனம் சூரியனின்
படுக்கையறை ஆனது
வாழ்கையின் உரமான
பெண்கள்

பூமிக்கு உரமாக
புதைக்கப்பட்டனர்
கற்கள் பயன்படுத்தப்பட்டன
கொல்லவும் வணங்கவும்

அது-

இறந்த காலம்

அன்று
ஏழை சிரிக்கவில்லை
அதனால்
இறைவனை ஒருவரும்
காண முடியவில்லை !

பணக்காரனிடத்தில்
கத்தி இருந்தது
பக்தி இல்லை

நீதியோ செத்து
நாறிக்கிடந்தது
சிலைகளின் கால்களில்

சிதறிக்கிடந்தன
மனிதத் தலைகள் !
உயிரோடு

இப்படியெல்லாம்
சீரழிந்து கொண்டிருந்த
செங்கடல் பாலையில்

இறைவனின் ஒளியின்
துளியொன்று கையில்
உளிகொண்டு வந்தது

பாசியும் தூசியும்
பாவத்தின் துருக்களும்
பற்றிப் பிடித்திருந்த
மனித மனங்களை
செதுக்குவதற்கும்
புதுக்குவதற்கும்

அந்த
ஒளி வந்த பிறகுதான்
ஆன்மாவின் இருட்டு
மூலைகளிலெல்லாம்
வெளிச்சத்தின் விலாசம்
எழுதப்பட்டன !

இப்போது
அது
இறந்த காலமல்ல !

உலகம்
மீண்டும் ஒருமுறை

உயிருடன் மீண்ட
நிகழ் காலமது !

இறந்த காலத்தில்
இருந்தவர்கள்

தங்களின்
நிகழ் காலத்தில் நம்மை
எதிர் காலமாகப் பார்த்தார்கள்

ஆனால் நாமோ
பிடிவாதமாக
இறந்த காலத்திற்குள்
நுழைவதற்காக
முண்டியடித்துக்
கொண்டிருக்கிறோம்

ஒளி கொண்டுவந்த
உளிகொண்டு நம்மை
எப்போது
செதுக்குவோம் ?

—————————————————————————————————————–

பி. எம். கமால் கடையநல்லூர்

================================================================

காட்டு மிராண்டிகள் – பி. எம். கமால் கடையநல்லூர்


நாங்கள்
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அரபகத்துப் பாலையில்
அலைந்த  மிருகங்கள் !

இறைவன் எங்களின்
இதயத்தில் முத்திரையை
இட்டுவிட்ட  காரணத்தால்
உதயமே ஆகாமல்
அஸ்தமனச்  சகதியில்
ஆழ்ந்து போனவர்கள்
உள்ளத் தாக்குதல்
ஒன்றும் இல்லாமல்
பள்ளத் தாக்குகளில்
பரவிக் கிடந்தவர்கள் !

அண்ணல் நபிகளை
அறவே வெறுத்து  விட்டு
எண்ணங்கள் சிதைந்து
எருமைகளாய் வாழ்ந்தவர்கள்
எங்களுக்கு நீங்கள்
இட்ட பெயரோ
காட்டு மிராண்டிகள்
கவைக்குதவாதவர்கள் !

நாங்கள்-
முழு நிலவைத் தரையில்
முற்றாகக் கண்டவர்கள்!
கலிமாவைச் சொல்லாத
காரணத்தால் நாங்களெல்லாம்
காபிர்களாகிக்
கருங் கல்லாய் ஆகிவிட்டோம் !

வட்டியில்தான் எங்கள்
பெட்டிகள் நிறைந்தன
சட்டிகளில் சாராயச்
சலங்கை ஒலித்தன

பெருமானார் சொன்ன
வழிமுறை எல்லாம்
பெரிதாய் நாங்கள்
கைக்கொள்ளவில்லை !

நபியைச்
சாதாரண மானவர் என்று
கருதிய காரணத்தால்
சரித்திரம் எங்களைக்
காறித் துப்புகிறது !

புறக்  கண்ணால் மட்டுமே
பூமான் நபிகளை
புரிந்து கொண்டோம்
அகக் கண்ணால் ஒருபோதும்
அளந்து பார்க்கவில்லை!

அந்தக்
கர்த்தனின் தோட்டத்து
கருணை மலருக்குள்
அல்லாஹ்வின் அமுதத் தேன்
அடங்கிக் கிடந்ததை
அறியாமல் போனோம்

இஸ்லாத்தில் எங்களை
இணைக்காத காரணத்தால்
காபிராகவே கப்ருக்குள்
அடங்கிவிட்டோம் !

ஒளி இருந்தும் காண்பதற்கு
விழி இருந்தும் நாங்கள்
இருளுக்குள் மூழ்கியே
இருந்து விட்டோம் !

அட ! ஓ ! மனிதர்களே !
இப்போதும் நீங்கள்
எங்களைப் போல் தானே
இருக்கின்றீர்கள் !

வட்டி உங்கள்
வலக்கரம் என்றால்
வரதட்சணை உங்கள்
இடக்கரம் அல்லவா ?

இன்னும் நீங்கள்
திங்கள் நபியை
எங்களைப் போலே
சாதாரண மனிதர்
என்று தானே
சொல்லித் திரிகின்றீர் !

நாங்கள்
காடுகளில் பாலைகளில்
அலைந்த
காட்டு மிராண்டிகள் !

நீங்களோ
வீடுகளில் வாழ்ந்தாலும்
வேத  மறை மறந்துவிட்ட
புத்தியே இல்லாத
புதிய காட்டுமிராண்டிகளே !

—————————————————————————————————–

பி. எம். கமால் கடையநல்லூர்

================================================================

சுற்றுசூழல் – பீ. எம். கமால் கடையநல்லூர்


ஆயிரத்து நானூறு

ஆண்டுகட்கு முன்னால்

அகிலத்தின் சுற்றுசூழல்

அம்மணமாய்க் கிடந்தது !

அறங்கள் என்னும்

மரங்களை இழந்து

அரபகத்து பாலைவனம்

அநாதையாய்க்  கிடந்தது !

சூட்டின் கேட்டில்

சுருண்டுபோய்க் கிடந்தது

பாலை மட்டுமா ?

பாவி மனிதனின்

பண்பாடும்  கூட !

சீழ்நாறிக் கொண்டிருந்த

சிலை களிலெல்லாம்

பாவத் தூசுகள்

பரவிக் கிடந்ததால்

ஏகத்துவ வைரத்தை

உப்புகற்கள் உரசிப் பார்த்தன !

மனிதர்களுக்கு

பல தெய்வங்கள்

குலதெய்வங்கள் ஆனதால்

காற்றும்  கூடக்

கற்பழிந்திருந்தது !

சுற்றுசூழல்

மாறுபட்டிருந்ததால்

ஆன்ம வெளி யங்கே

அழுக்காகிக் கிடந்தது !

சுற்றுச் சூழலைக்

கற்றுக்கொள்ளவும்

கடவுளை மனதில்

பெற்றுக் கொள்ளவும்

கல்வி அப்போது

காணாமல் போயிருந்தது

அந்நேரத்தில்

பொன்னொளி ஒன்று

புறப்பட்டு வந்தது !

அறங்கள் என்னும்

மரங்களை நட்டு

மகிமைப் படுத்த

மன்னர் நபிகள்

மண்ணில் உதித்தார்

வள்ளல் நபியின்

வாய்மொழி அமுத

வார்த்தை மரங்கள்

நடப்பட்டதால் தானே

மனிதனின் மனச்

சுற்றுச் சூழல்

சுகாதாரம் பெற்றது !

அது-

வெறும்.

மரங்கள் மட்டுமல்ல-

மண்ணுக்கு கிடைத்த

மகத்தான வரங்கள் !

தென்னை மரங்களுக்கு

அன்னை மரமான

பேரீச்சை மரங்களும்

பேசிய காலமது !

‘ஆல’ மரங்களும்

‘அரச” மரங்களும்

பேரீச்சை மரத்திடம்

பிச்சை கேட்டன !

பெருமானாரின்

தண்ணொளி பட்டுத்

தழைத்தன அறங்கள் !

வள்ளல்   நபியின்

வருகையதனால்

பாலை மட்டுமா

பரிசுத்தம் ஆனது ?

அகிலமே அன்று

அசுத்தம் நீங்கியது !

விண்ணில் விழுந்த

ஒசான் ஓட்டையை

ஒக்கிட வந்த

ஒப்பற்ற நபிகள்

அதனால் தானோ

ஒரு விரல் நீட்டி

ஒண் மதியைப் பிளந்தார்கள் ?

சுற்றுச் சூழல் தினம்

ஜூன் ஐந்து தேதி அல்ல !

உத்தம நபிகள்

உதித்த நன்னாளே

சுத்தம் பிறந்த நாள்

சுற்றமும் மகிழ்ந்த நாள் !

சுத்தம் எனபது

ஈமானில் பாதியென்று

எந்த மதமும்

எடுத்துச் சொன்னதில்லை !

சுற்றுச் சூழலைச்

சுத்தம் செய்வதற்கு

சொன்னது நபிகள்

நாயகம் மட்டுமே

மார்க்க  மா மேதைகளே

இதோ நமது

மார்க்கச் சுற்றுசூழல்

மாசாகிக்  கொண்டிருக்கிறது !

பாலி தீன்களால் மட்டுமல்ல –

போலிதீன் களாலும்

பொலிவிழந்து கிடக்கிறது !

பெருமானாரைப்

பின்பற்றி நடந்த

அருமைததோழரை

ஆருயிர் நேசரை

சிறுமைப்படுத்தும்

கிரிமினல் சிலரால்

சத்திய வழியின்

சுற்றுச்சூழலில்

குப்பைகள் இங்கே

கொட்டப்படுகிறது !

தீன் நெறியில்

வீண் நெறியைத்

திணிக்கின்ற பேர்களை

சுத்தபடுத்துதற்கு

சோதரரே ! தயவுசெய்து

கையில் துடைப்பக்

கட்டையுடன் வாருங்கள் !

இஸ்லாத்தின் சோலைகளில்

இடுகின்ற குப்பைகளை

எடுத்து எறிவதற்கு

எல்லோரும் வாருங்கள் !

அல்ஹம்துலில்லாஹ்

நன்றி:- பீ. எம். கமால்  கடையநல்லூர்

***************************

மெழுகுவர்த்தி – பீ.எம். கமால், கடையநல்லூர்


இருளைத் தின்னும்
ஒற்றை நாவு !

அணையப்போகும்
தீபத்திற்கு
மெழுகுக் குச்சியின்
கண்ணீர் அஞ்சலி!

மெழுகுக் கணவனின்
வரதட்சணைக் கொடுமை
வாட்டியதால்
திரியின் தற்கொலைத்
தீவிரத்தாக்குதல் !

காதலித்த மெழுகு
கைவிட்ட காரணத்தால்
திரி குளிக்கும்
தீக்குளிப்பு !

வானம் பார்த்து
எரியும் சுடர்
ஞானம் தேடும்
உயிரின் தவம் !

இந்த
ஒற்றை இறகுப் பறவை
உட்கார்ந்து பறக்கிறதோ ?

இருட்டுக் குருடனை
வழி நடத்திச்
செல்லுகின்ற
சுடர்க்கோல்!

திரியே ! நீ
எதைத்தேடி
ஒற்றைக்காலில்
ஊர்கோலம் போகிறாய் ?

உன்னைத்தேடியா ?
உன் மறுபக்க
இருளைத் தேடியா ?

சுந்தர நிலவும்
சூரிய ஒளியும்
கண்டு நாணும்
கண்மணி நபியைக்
காணத்தான் நீயும்
கடுந்தவம் செய்கிறாயோ ?

நன்றி:-பீ.எம். கமால், கடையநல்லூர்

=======================

மலையாக நிலையாக்கு! – பீ. எம். கமால், கடையநல்லூர்


இறைவா !

நீ
கொடையாளன் என்பதற்கு
அடையாளம்
ஒன்றா இரண்டா ?

நீ
கேளாமல் தருபவன்
தட்டாமல் திறப்பவன் !
நான் கேட்டா
நீ என்னைத் தந்தாய் ?

நீ  தந்த அருட் கொடைகளில்   எல்லாம்
தலையாய கொடை என்னை
தாஹா நபியின்
உம்மத்தாய் ஆக்கி
உயர்வடையச் செய்ததன்றோ?

நீ என்னை
பிறப்பால் உயர வைத்தாய்
பெயரெடுக்கக் கல்வி தந்தாய் !
உறுப்புக்கள் நன்றி சொல்ல
உயர் தொழுகையும் தந்தாய் !

ஆன்மாவில் தேனாய்
அமர்ந்து நீ மணம் தந்தாய் !
எத்தனை கோடி
இன்பங்கள் நீ தந்தாய் !

நீ
கேளாமல் தருபவன்
தட்டாமல் திறப்பவன் !
வள்ளலைத் தந்த
வள்ளலே ! நீ

அள்ளக்குறையாத அருட் சுரபியாக
தெள்ளத் தெளிவான
திருமறையும்  தந்தாய் !

நாங்களோ-
பிச்சைப்   பாத் திரத்தைப்
பிறரிடம் ஏந்துகிறோம் !
அச்சத்துடனேயே !
ஆயுளைக் கழிககிறோம் !

நூலாம்படையான
எங்கள் ஈமானை
மலையாக நிலையாக்கி
மன்னிப்பையும் அருள்வாய் !
ஆமீன் !

நன்றி:- பீ. எம். கமால்,  கடையநல்லூர்

*********************************

கடவுளின் பெயரால் – பி. எம். கமால்


முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !

அதனால்
காவித் தொட்டில்களில்
காமம் ஆடுகிறது !
பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!

நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !

வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?

கங்கையில் குளிக்கின்ற
சாமியார்கள் இன்று
மங்கைகளில் குளித்து
மானம் இழக்கின்றார் !

கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!

பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்

ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !

இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !

பள்ளியை இடித்த
பண்டாரங்களே !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !

நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !
ஒரே இறைவனின்
ஒப்பற்ற பெயரால்
எல்லா மதங்களிலும்
ஏமாற்று நடக்கிறது !

தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !

கடவுளின்  பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே  !

ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !

ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !

நன்றி:- பி. எம். கமால்

********************************