தொகுப்பு

Archive for the ‘நான் தொலைத்த பால்யம்’ Category

நான் தொலைத்த பால்யம் – திருமதி. லக்ஷ்மி காட்டல்

ஏப்ரல் 28, 2010 1 மறுமொழி

பாட்டி சொன்ன கதைகளில்லை
அம்மா ஊட்டிய கவளமில்லை,
அத்தை பாடிய தாலாட்டில்லை
தாத்தா தோளில் சவாரியில்லை,
மாமா தந்த செல்லமில்லை,
அப்பா மடியில் தூங்கவில்லை……..!

ஐந்து மணி அலாரத்தில்
அம்மாவின் அவசரத்தில்,
அரைகுறையாய் விடியும்
பொழுதுகள் ரசிக்கவில்லை…!

ஆயா அள்ளித் தருகிற
அவசர சாப்பாடும்
அம்மா தருகிற அரைகுறை
முத்தமும் ருசிக்கவில்லை !

பொதி சுமக்கும் கழுதையாய்
முதுகில் புத்தக மூட்டை,
தத்தும் நடை மாறா
என் பிஞ்சு பாதங்கள்,
தடுமாற எட்டெடுத்து வைத்தேன்
பள்ளி எனும் போர்க்களத்தில்,
ஏ பி சி டி ஆயுதங்கள்
எண்களின் போர்முறைகள்
எதுவும் என் தலையில் ஏறவில்லை !

காலையில் பார்த்த குருவியும்
சாலையில் பார்த்த நாய்குட்டியுமே
என் இதயம் முழுக்க……..!
மாலை முழுதும் விளையாட
மனம் கொள்ளா ஆசை,
அம்மா கைப் பிரம்பு
ஆசைக்கு அணைகட்ட
வீட்டுப் பாடம் எழுத
என் பஞ்சு கைகளுக்கு வலுவில்லை
அம்மா மடியும் அப்பா தோளும்
அவசரத் தேவை!

கூண்டுக் கிளியாய் நானுமிங்கே,
என்றோ நான் வளர்கையில்
வருத்தப் போகும் கணங்களாய்
அவசர உலகில் நான் தொலைத்த பால்யம்!


நன்றி:- முகநூல் (Facebook)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&