தொகுப்பு

Archive for the ‘தாய் கவிதையின் தொடர்ச்சி’ Category

தாய் கவிதையின் தொடர்ச்சி – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


கருவறையில் காத்த தாயே..!!!
கல்லறையில் உறங்கச் சென்றாயே -நான்
வரும்வரையில் படுத்திரு ; எனக்கும்
தருவர் குழி உனக்கு அடுத்தே
என்முகம் காணாமல் புதைத்த அன்று;
உன் அகம் எப்படி பதைத்தது என்று
கனவில் வந்து கதறினாயே; உன்னருகில்
அணைத்ததும் உதறினாயே..!!!
“இறந்தவரை கனவில் அணைத்தால்
இருப்பவர்க்காகாது ‘ என்பதைக் கூட
என்பால் நீ வைத்த
அன்பால் தானே இறந்தும் அப்படி
அக்கறைக் காட்டினாய்
“செத்தும் கொடுத்த” உன் அன்புக்கு
பித்தனாகி விட்ட என்னால்
என்ன வேண்டும் தாயே …………

தொடர்ச்சி…
மேலே உள்ளது போட்டியாளர்கள் சொன்ன வரி வரம்புகளின் எல்லைக்கு உட்பட்டதால் சுருக்கமாக அனுப்பினேன். இப்பொழுது போட்டி முடிந்து விட்டதால் என் எண்ணங்களுக்கு தடை போட விரும்பவில்லை. அதனால் மீண்டும் தொடர்ந்து ‘அம்மா’ பற்றிய கவிதை எழுதி முடித்துள்ளேன். இதனைத்தான் என் கவிதை நூல் வெளிவரும் போது முதல் பக்கத்தில் போட்டு என் அன்னைக்கு சமர்ப்பணம் ஆக்குவேன்.

ஊனாகி எலும்பாகி தசையாகி
உலகினில் உதித்தடவே
உன்னறைவிட்டு குதித்து வந்து
உலா வரும் நானே ‘நான்’ இல்லை
நான் என்பதும் உன்னிடம் பெற்ற கடனே
கருவறையில் இரத்தம் தந்தாயே;
முலைக் காம்பில் அமிழ்து தந்தாயே;
நான் உறங்க நீ உறங்க மாட்டாயே;
பசித்திருந்து
தனித்திருந்து
விழித்திருந்து
ப த வி யாம் தாய்மைக்கு
இலக்கணம் சொன்னாய் செயலாலே
எனது சிறுநீரும்
உனக்கு பன்னீர் ஆனது எப்படி?
பள்ளிச் செல்லும் பொழுதும்
பயணம் செல்லும் பொழுதும்
அள்ளி அணைத்து முத்தமிட்டாய்
அந்த நொடிகள் மறவேனே ….
விமானத்தில் ஏறிவிட்டால்
வீடு வந்து சேரும் வரைக்கும்
அழுவாய்; தொழுவாய்; நோன்பிருப்பாய்;
அந்த காட்சிகள் மறவேனே..
அமெரிக்க பயணத்துக்கு என்னை
அனுப்பி விட்டு நான் மீண்டும்
தாய் மண்ணை மிதிபபதற்குள்
தாயே மண்ணுக்குள் நீ மட்டும் சென்றாயே ..?!!
நீ அடிக்கல் நாட்டிய என் மாளிகைக்கு
நீ வாராது சென்ற தாயே
என் கால்கள் அம்மாளிகைக்குள் நுழையும்போது
என் மனம் கூறும்:
“இம்மாளிகையின் ஒவ்வொரு கல்லும்;
என்னம்மாவின் பெயர் சொல்லும்”
வறுமையின் கோட்டிலே நின்ற போழ்து
வல்ல இறைவனிடம் வேண்டி நின்றாயே..
வளமையின் வீட்டிற்குள் வந்த போழ்து
வாராது போனாயே ……..!!!!!!!!!
ஒவ்வொரு மூச்சிலும் நினைவிலும்
ஒன்றை மட்டுமே வைத்துள்ளேன் தாயே..
“ஒவ்வொரு படியாக நான் முன்னேறும்போது
உனது ஆசிர்வாதமும் ப்ரார்த்தனையுமே
உந்தி தள்ளி என்னை சிகரத்தில் வைத்துள்ளது”
இருந்தாலும் ஆயிரம் அன்பு;
இறந்தாலும் ஆயிரம் அன்பு;
அம்மா அம்மா தான்; மற்றவை எல்லாம்
சும்மா சும்மா தான்……!!!!!!!
அப்பா என்னை கடிந்து கொள்ளும் வேளையில்
நீ கூறுவாய்:
“அவன் மனதை நான் அறிவேன்; அவன் என்ன சொன்னாலும்
அவன் சொல்லில் நியாம் உண்டு’ என்பாய்
இன்றும் உணர்கின்றேன் அம்மா:
‘உன்னை தவிர உலகில்
என்னை புரிந்தவர் யாருமே இல்லை.”
ஆயிரம் உறவுகளில் பெருமைகள் இல்லை;
தாயின் அன்புக்கு எல்லையே இல்லை; இல்லை……

உன் மடிதான்
நான் படித்த பள்ளி;
உன் மடிதான்
நான் தூங்கிய ஓய்வறை;
நான் வீடு வரும்வரை
உனக்காக உள்ள சிறிய வடைத்துண்டை கூட
எனக்காக முந்தானையில் முடிந்து வைத்து
மடிமீது தலை சாய வைத்து
பொடி பொடியாய் ஊட்டிவிட்டாயே
இன்றைக்கு அந்த சுகம் தேடுகின்றேன் தாயே

உனது தொழுகையும்; வழிபாடுகளும்
உன்னை சுவனத்தில் சேர்த்து விட்டதை
அடிக்கடி கனவில் வந்து சொன்னாய்:
பச்சை பட்டுடுத்தி; முத்து பவளம் ஆபரணம் சூட்டி
மெச்சி உன்னை மேலோன் சுவனத்தில் உலா வைத்த
கோ
லத்தை கண்டேனே அந்த கனாவிலே…

உன்னைப் பற்றி எழுதினால் ஏடு தாங்காது;
உன்னைப் பற்றி நினைத்தால் கண்கள் தூங்காது.
எனவே
இத்துடன் முடிக்கின்றேன்

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் ஆக்கங்களில் சில…..

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

தமிழாய் தமிழுக்காய்

விதைகள்

ஊனம்

தாய்