தொகுப்பு

Archive for the ‘சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!’ Category

சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து
இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்
களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து
விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்
துவக்கிடுப் புள்ளியும் முன்னால்

நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும்
நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும்
ஊசலும் விலகவும் வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன
ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து
தாங்கிடும் நண்பரும் வேண்டும்

திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித்
திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை
வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால்
நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும்
படைத்தவ னருளவும் வேண்டும்

விளம், மா, விளம், மா, விளம், விளம், மா வாய்பாட்டில் அமையும் எழுசீர் விருத்தம்

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்