தொகுப்பு

Archive for the ‘ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்’ Category

பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்! – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்


மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா
மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய்

இறைவா உன்னருள் வேண்டும்
இனிதாய் நலம் வேண்டும்
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

பாவமென்னும் கடலில் வீழ்ந்து
பல தீங்குகள் எம்மை சூழ்ந்து
கலங்கும் நிலை ஆய்ந்து
கனிவாய் உன்னருள் ஈந்து
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

பொருள் தேடிடும் போதையில் திரிந்தேன்
அருள் தேடிடும் பாதையை மறந்தேன்
இருளைத் துணைக்கொண்டேன்
இழிவின் வழி சென்றேன்
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

மண்ணும் பொன் பொருள் யாவும் என்னை – உன்னை
மறந்திடச் செய்தது உண்மை
உணர்ந்தேன் உள்ளம் தெளிந்தேன்
உயிராய் உனைத் தொழுதேன்
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

அருளாளனே அன்புடையோனே
அடியார்களின் பிழைப் பொறுப்போனே
கருணை தயாநிதியே
காக்கும் அருட்சுடரே
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

*************

நன்றி:- ஏ.ஆர்.தாஹா  காயல்பட்டணம்

நன்றி:- இஸ்லாமிய தமிழ் தஃவா குழு

_____________________________________

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்


தொழுதால் தீரும்
தொல்லைகள் யாவும்

தினம் ஐவேளை
தொழுதிட வேணும்
மறந்தால் நாசம்
மறுமையில் மோசம்

மஹ்ஷர் வெளியில்
மருகிட நேரும்
படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்
பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்

கருவில் உருவாகி நாமிருந்தபோது
கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்
அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்
பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே

மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று
மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று
மண்ணின் மாயைகள் நமைச்சூழு முன்னே
மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை

மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு
மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு
முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி
முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி

இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்
இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்
குப்ரின் தீங்கான செயலின்றி வாழ
கப்ரின் வேதனையில் வீழாது மீள

சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி
கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி
மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்
மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில்
உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்

உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.

*******************************************************

நன்றி:- ஏ.ஆர்.தாஹா  காயல்பட்டணம்

நன்றி:- இஸ்லாமிய தமிழ் தஃவா குழு

_____________________________________