தொகுப்பு

Archive for the ‘பகுத்துண்டு வாழ்வோம்!’ Category

பகுத்துண்டு வாழ்வோம்! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


திருக்குர்ஆனில், அத்யாயம் 68ல், 17 முதல் 38 வரை உள்ள வசனங்களின் மூலம் மக்களுக்குப் பாடம் புகட்டுகிறான் அல்லாஹ்.

 

யேமன் நாட்டில் ஸன்ஆ என்ற ஊருக்கு அருகில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் அல்லாஹ்விற்கு அஞ்சி தோட்ட கனிகளின் வருவாயிலிருந்து ஒரு பங்கை ஏழைகளுக்குக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே ஏழைகள் தோட்டத்திற்கு வந்து அவர்களின் பங்கைப் பெறுவர்.

 

தோட்ட உரிமையாளர் இறந்த பின் அவரின் மக்கள், தந்தையைப் போல் அயலாருக்கு அள்ளிக் கொடுத்தால் தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் போதாதென்று எண்ணி விளைச்சலை அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள தீர்மானித்தனர்.

 

அவர்களில் ஒரு சகோதரர் மட்டுமே “”தந்தை வழங்கியதைப் போல் ஏழைகளின் பங்கை வழங்க வேண்டும். பாங்காய் விளைச்சலைப் பெருக்கிய ஓங்கு புகழ் இறைவனுக்கு நிறைவாய் செய்யும் நன்றி அது. இலங்கும் இறைவன் தோட்டத்தில் விளைச்சலை துலங்கச் செய்வான்” என்றார். ஏனையோர் ஏற்கவில்லை. மூர்க்கமான முடிவை மாற்ற மறுத்தனர்.

 

காலையில் ஏழைகள் வரும் முன்னரே எழுந்து சென்று விளைச்சலை வீட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்தனர். ஆனால் தோட்டத்திற்கு சென்றவர்கள் தோட்டம் எரிந்து சாம்பலாகி கிடப்பதைப் பார்த்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டனர்.

 

முன்னரே நல்லுரை நல்கிய சகோதரர், “”ஏழைகளுக்குக் கொடுப்பதை ஏற்காததால் ஏற்பட்ட சோதனை, வேதனை இது. வீணாய் சண்டை செய்யாதீர். இறைவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் உழைத்து தோட்டத்தை உருவாக்குவோம். இறைவன் அருளால் பெரும் விளைச்சல் கிடைக்கும். அதை ஏழைகளுக்கும் கொடுப்போம்” என்றார். ஏற்கெனவே செய்த தவறுக்கு வருந்திய மற்ற சகோதரர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.

 

இனிய குர்ஆன் இயம்பும் இந்நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்கும் நாம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பினராய் வாழ்வோம். அன்புடையோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 27-July-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில