தொகுப்பு

Archive for the ‘MBA படித்தும் வேலை இல்லை’ Category

MBA படித்தும் வேலை இல்லை – என். திருக்குறள் அரசி

ஜூன் 24, 2010 1 மறுமொழி

இன்றைக்குக் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களின் எதிர்காலக் கனவு எம்.பி.ஏ. படிப்பதுதான். காரணம், எம்.பி.ஏ. படித்தால் வேலை நிச்சயம், கை நிறையச் சம்பளம், குளுகுளு ஏசியில் ஜிலுஜிலு வேலை, என்பதே இந்த கனவுக்குக் காரணம். இதனால்தான் லட்சக்கணக்கில் பீஸ் என்றாலும் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் தற்போதைய நிலையில் எம்.பி.ஏ. என்பது லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்துப் படிக்கக்கூடிய அளவுக்குத் தகுதி கொண்டதுதானா? அதைப் படிப்பதால் நம் கனவில் பாதியாவது நிறைவேறுமா?

முக்கியமான இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் இல்லை என்பதே நிஜம்! இன்றையத் தேதியில், பெரிய பிஸினஸ் நிறுவனங்கள் இரண்டாம்தரக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்துவிட்டு வரும் பட்டதாரிகளை நிராகரித்து வருகின்றன. காரணம், எம்.பி.ஏ. படித்த மாணவர்களிடம் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் முழு அளவில் இல்லை என்பதுதான். எந்த வேலையாக இருந்தாலும் அதற்குத் தேவையான அடிப்படைத் தகுதி என ஒவ்வொரு நிறுவனமும் சில திறமைகளை எதிர்பார்க்கிறது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவு, லாஜிக்கல் திங்கிங், முடிவெடுக்கும் திறன், மக்கள் தொடர்பு, மனிதவளத்தை கையாளுவது… இதனோடு இதர பொது மேலாண்மைத் திறன்கள் அவசியம் இருக்க வேண்டும். எம்.பி.ஏ. படித்தவர்கள் மேற்சொன்ன இந்தத் திறமைகளில் புடம் போட்டத் தங்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை. 50% இருந்தால்கூட போதும் என்று நினைக்கின்றன நிறுவனங்கள். ஆனால், கம்பெனி நிர்வாகத்தை புத்தகங்களில் மட்டுமே படித்து வரும் எம்.பி.ஏ. மாணவர்கள், நிஜத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வெலவெலத்துப் போகிறார்களே தவிர, தீர்வு சொல்லும் சாதுர்யம் அவர்களுக்கு இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

”எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஒரு மேனேஜர் என்கிற நினைப்பிலேயே படிக்கின்றனர். தாங்கள் சொல்லும் வேலையை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்றே அவர்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஒருவர் எம்.பி.ஏ. படித்திருந்தாலும் நிறுவனத்தில் சேர்ந்தபிறகு அங்கு கொடுக்கப்படும் வேலை எதுவாக இருந்தாலும் அதைச் செய்யத் தயங்கக்கூடாது. உலகில் எந்தப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித் திருந்தாலும் கோக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ஏசி அறையில் உட்காரச் சொல்ல மாட்டார்கள். முதலில் லாரியிலிருந்து சரக்கு இறக்கச் சொல்வார்கள். கடைநிலை ஊழியர்கள் செய்யும் வேலைகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்” என்கிறார் மும்பையில் உள்ள முக்கியக் கல்லூரியின் எம்.பி.ஏ. பேராசிரியர் ஒருவர்.

”எம்.பி.ஏ.வில் மனிதவளம், நிதி மேலாண்மை, உற்பத்தி, மார்க்கெட்டிங் எனப் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. தனக்கு விருப்பமான பாடங்களைத் தாண்டி தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இன்றைய மாணவர்களுக்கு இல்லை. தவிர, அதீத கற்பனையால் அதிகப்படியான சம்பளத்தையும் எதிர்பார்க்கிறார்கள். இதே வேலையை ஒரு சாதாரண டிகிரி முடித்த ஒருவரைக் கொண்டே செய்து விட முடியும் என்கிறபோது எதற்கு அதிகச் சம்பளம் கொடுத்து எம்.பி.ஏ. படித்தவர்களை எடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

இது குறித்து இந்தியன் சொசைட்டி ஃபார் டிரெயினிங் அண்ட் டெவலப்மென்ட்டின் மாநிலச் செயலாளர் மற்றும் கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர். மேனேஜ்மென்ட்டின் இயக்குனர் ஆர்.கார்த்திகேயனிடம் பேசினோம்.

”எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகக் காரணம், மாணவர்கள் திறமைசாலிகளாக இல்லை என்பதைவிட ஆசிரியர்கள் அவர்களைத் திறமைசாலிகளாக உருவாக்கவில்லை என்றே சொல்வேன். ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள் உலக ளவில் பெயர் பெற்று விளங்கக் காரணம், அதன் ஆசிரியர்கள்தான். அங்குள்ள ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் நடத்துவதில்லை. பல்வேறு பிஸினஸ் நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்னை களுக்கான தீர்வைச் சொல்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் தொழிற்துறை அனுபவங்களை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். தியரியில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பிராக்டிக்கலாகச் செய்து பார்க்க ஊக்குவிக்கிறார்கள். இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் மிகப் பெரிய அளவில் உயர்கிறது.

முதல்தரக் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் இந்த உயர்தரமான கல்வியானது எல்லாக் கல்லூரிகளிலும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. குறிப்பாக, இரண்டாம்தரக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு இந்த முறையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அப்படி கற்றுக் கொடுக்கிற மாதிரியான ஆசிரியர்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. குறைவான சம்பளத்துக்கு யார் வேலைக்கு வரத் தயாராக இருக்கிறார்களோ, அவர் களையே ஆசிரியர்களாக நியமனம் செய் கிறார்கள். எந்த ஒரு எம்.பி.ஏ. ஆசிரி யருக்கு தொழில் நிறுவனங்களுடனான அறிவும் தொடர்பும் இருக்கிறதோ, அவர்தான் தரமான எம்.பி.ஏ. மாணவர்களை உருவாக்க முடியும்.

அடுத்த முக்கியமான காரணம், பாடத்திட்டங்கள். இப்போதுள்ள எம்.பி.ஏ. பாடத்திட்டங்கள் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தவிர, எம்.பி.ஏ. வகுப்புகளில் இப்போது அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு நேரமில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரே நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்கிறார்கள். பெற்றோர் மற்றும் மாணவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது கல்லூரிக் கட்டடத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மட்டும் வைத்து முடிவெடுக்காமல், கல்வித்தரம் எப்படி இருக்கிறது, ஆராய்ச்சி, களப்பணி உள்ளிட்டவை எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்து முடிவு செய்வது நல்லது” என்றார் அவர்.

ஆக மொத்தத்தில் எம்.பி.ஏ. படிக்க நினைப்பதில் தவறில்லை. ஆனால் எங்கே படிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம். நம் கடமை, சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்வதே!

 

நன்றி:– என். திருக்குறள் அரசி

நன்றி:- நா.வி