தொகுப்பு

Archive for the ‘மாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா?’ Category

மாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா? – அ.ஐஸ்வர்யா


CAT, GRE, GMAT, GATE மாதச் சம்பளம் 5,00,000 ரூபாய் நீங்கள் தயாரா?

முதுகலைப் பட்டம் படிக்கிறீர்கள். படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்ததும் முதல் மாதச் சம்பளம் எவ்வளவு எதிர்பார்ப்பீர்கள்? 5,000, 20,000 அல்லது 50,000 ரூபாய்கள். கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்… ஐந்துலட்சம் ரூபாய் என்றால் ஓ.கே-வா?

நீங்கள் திறமையானவராக இருந்தால் அதற்கு மேலும் கொட்டிக் கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

CAT (Common Admission Test), GRE (Graduate Record Examination), GMAT (Graduate Management Admission Test), GATE (Graduate Aptitude Test in Engineering)… இந்த நுழைவுத் தேர்வுகள்தான் வளமான வாய்ப்புகளுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் முள்வேலி. இந்த வேலியைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சமே லட்சங்களில்தான் சம்பளம் துவங்கும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்து வேலை செய்பவர்கள்கூட, வேலையை உதறிவிட்டு இந்த நுழைவுத் தேர்வினை எதிர்கொண்டு தங்கள் எதிர்காலத்தை அப்டேட் செய்துகொள்கிறார்கள். M.B.A., M.S., M.Tech போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை வழங்குபவைதான் அந்த நுழைவுத் தேர்வுகள். கலை அல்லது இன்ஜீனியரிங் போன்ற ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி என்பதுதான் இந்தப் படிப்புகளுக்கான அடிப்படைத் தகுதிகள். இந்தியாவில் IIM, XLRI, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு, மசாச்சூசட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) போன்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது அவசியம். இவை அனைத்தும் உலகத் தரக் கல்வி நிறுவனங்கள். இங்கு படித்துத் தேர்ச்சியடையும் அனைவருக்கும் உலகின் ‘டாப் 100’ நிறுவனங்களில் வாய்ப்புகள் நிச்சயம் காத்திருக்கும்.

”ஒரு துளி பிழைக்கும் இடம் கொடுக்காத இந்தத் தேர்வுகளில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் எவரும் சாதிக்கலாம்!” என்று நம்பிக்கை வார்த்தை சொல்கிறார் ரகுநாத். CAT, GRE, GMAT தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்திய அளவில் முத்திரை பதித்திருக்கும் ‘TIME’ (Triumphant Institute of Management Education) பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் இவர்.

”இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் சிகிஜி தேர்வு மிகவும் கடினமானது என்ற பிம்பம் இருந்தாலும், இளைஞர்களின் ‘மோஸ்ட் வான்டட்’ தேர்வும் அதுதான். காரணம், அந்தத் தேர்வு முடிவினைத்தான் கிட்டத்தட்ட 100 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் கணக்கில்கொள்கின்றன.

வெர்பல்(verbal) எனப்படும் ஆங்கில அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் (quantitative aptitude) எனப்படும் கணிதத் திறன் சார்ந்த கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங் (logical reasoning) எனப்படும் யோசிக்கும் திறன் சார்ந்த கேள்விகள்தான் அனைத்து மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுத் திட்டங்களிலும் இடம்பெறும்.

CAT தேர்வினில் 60 முதல் 70 கேள்விகள் வரை கேட்கப்படும். இந்தத் தேர்வினை time stressed test என்று கூறலாம். சென்ற ஆண்டு முதல் இந்தத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், அது மீண்டும் பேப்பர் – பென்சில் தேர்வாக மாற்றப்படலாம் என்பதால், இரண்டுவிதமான தேர்வுகளுக்குமே மாணவர்கள் தயாராக இருப்பது நல்லது. சரியான பதில் ஒன்றுக்கு 7.5 மதிப்பெண்கள். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் தலா 2.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். பொதுவாக, நமது மாணவர்கள் ஆப்டிட்யூட் பகுதியில் பெரும்பாலும் கெட்டி. ஆனால், வெர்பல் பகுதியில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். ஆனால், எந்தப் பயமும் பதற்ற மும் இல்லாமல் இவற்றைச் சமாளிக்கலாம்.

M.S படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு GRE. இந்தத் தேர்வை நடத்துவது அமெரிக்காவைச் சேர்ந்த ETS -Educational Testing Service என்ற அமைப்பு. இதை எழுத விரும்புபவர்கள் அதன் வெப்சைட்டில் (www.ets.org/gre) பதிவு செய்ய வேண்டும். 180 டாலர்கள் கட்டணம். தேர்வை வருடத்தின் எந்த நாளிலும் எழுதலாம். வெர்பல் பகுதிக்கு 800 மதிப்பெண்களும், குவான்ட்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் பகுதிக்கு 800 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இந்திய மாணவர் 700-க்கும் குறைவாக ஆப்டிட்யூட் பகுதியில் மதிப் பெண்கள் வாங்கினால், அவரை ஒரு திறமைசாலியாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கருதுவது இல்லை. ஆனால், இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. நம் நாட்டின் பள்ளிக்கூடக் கணிதப் பாடத் திட்டங் களைப் போலத்தான் இருக்கும் கேள்விகள். வெர்பல், ஆப்டிட்யூட் பகுதிகளுக்குச் செல்லும் முன், அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வு வைப்பார்கள். அதில் இரண்டு தலைப்புகள் கொடுத்து அதைப்பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். இந்த இரண்டு கட்டுரைகளும் ஏதேனும் சிக்கலான சூழ்நிலைக்குத் தீர்வு சொல்வதாக அமையும். உதாரணமாக, கூவம் நதியைச் சுத்திகரித்து சிங்காரச் சென்னையைச் சாத்தியப்படுத்துவது எப்படி?’ என்பது மாதிரியான கேள்விகள். வெர்பல், குவான்டிடேட்டிவ் பகுதிகளின் முடிவுகள் தேர்வு முடிந்த உடனே தெரிந்துவிடும். அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வின் முடிவு ஆறு வாரங்களுக்குப் பிறகே நமக்கு அனுப்பிவைக்கப் படும்.

கொஞ்சம் கவனத்தோடு எழுத வேண்டிய தேர்வு GRE. ஏனென்றால், ஒரு முறை விடை அளித்த பிறகு, அந்தக் கேள்விக்கான பதிலை மாற்ற முடியாது. தெரியவில்லை என்பதற்காக, எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் விட்டுவிடவும் முடியாது. GRE தேர்வுடன் சேர்த்து TOEFL எனும் மற்றொரு தேர்வையும் எழுதினால்தான் வெளிநாடு களில் M.S. படிக்க முடியும். ஆங்கிலம் அல்லாத வேறு ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் ஆங்கிலத் திறமையை நிரூபிக்கும் தேர்வுதான் TOEFL. வாசிப்பது, எழுதுவது, கவனிப்பது, பேசுவது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்கள் ஆங்கிலத் திறனைச் சோதிப்பார்கள். இதில் மொத்த மதிப்பெண்களான 120-ல் ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட சர்வசாதாரணமாக ஸ்கோர் செய்யலாம். நல்ல தயாரிப்பு இருந்தால் முழு மதிப்பெண்களையும் பெறலாம்.

பொதுவாகவே, CAT, GRE தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு, GMAT தேர்வு சுலபமானதாகவே இருக்கிறது. இந்தத் தேர்வு வெளிநாட்டுப் பல்கலைக்கழக M.B.A., படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு. இதன் வெர்பல் பகுதி மற்ற நுழைவுத் தேர்வுகளுடன் ஒப்பிடும் போது சற்றே கடினமானது. GMAT தேர்வு முடிவுகள் மட்டுமே வெளிநாட்டு M.B.A., படிப்புகளுக்குப் போதுமானது இல்லை. குறைந்தது இரண்டு, மூன்று வருடங்களாவது வேலை அனுபவம் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களையே ஏற்பார்கள். ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஃப்ரெஷர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த GMAT தேர்வுக்கும் TOEFL தேர்வு கட்டாயம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் IELTS எனும் தேர்வையும் ஆங்கிலத் திறனுக்கான தகுதியாக நிர்ணயித்திருக்கின்றன. ஏதேதோ சொல்கிறார்களே என்று தயங்க வேண்டாம். எல்லா படிப்புகளுக்கு மான அடிப்படைகள்தான் இவற்றுக்கும். தினசரி பயிற்சியும் முயற்சியும் இவற்றுக்கான கூடுதல் தேவைகள்!” என்று முடிக்கிறார் ரகுநாத்.

சென்ற ஆண்டு GRE தேர்வில் 1,540 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் வித்யா வெங்கட், அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர்ந்திருக்கிறார். ”GRE தேர்வில் வெர்பல் பிரிவு கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் படிக்கும்போதே அதற்காக நிறைய நேரம் செலவிடுவது நல்லது. பொதுவாக, வெர்பல் தொடர்பான கேள்விகள் Barro’’s புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படும். அதனால், அந்தப் புத்தகத்தை அட்டை டு அட்டை புரட்டிப் பார்ப்பது நல்லது. தேர்வில் முதல் 15 கேள்விகளுக்கு அவசரப்படாமல் பதில் கூற வேண்டும். முதல் 15 கேள்விகளில் நாம் எப்படிப் பதில் சொல்கிறோமோ அதை வைத்துதான், அடுத்தடுத்த கேள்விகளின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படும். எனவே, நிதானமாக யோசித்துப் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்படும். அதனால் GRE தேர்வைப் பொறுத்தவரை, கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் நல்லது. பல பல்கலைக்கழகங்களும் GRE ஸ்கோரைவிட நம் இன்ஜினீயரிங் புராஜெக்ட்டுகள், மதிப்பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். எனவே, ஆரம்பம் முதல் அம்சமாக வைத்துக்கொள்ளுங்கள்!” என்கிறார் வித்யா.

GATE தேர்வில் அகில இந்திய அளவில் 18-வது இடம் பிடித்த ஜாஃபர், சென்னை I.I.T-யில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜீனியரிங் படிக்கிறார். இன்ஜினீயரிங் மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுதான் GATE. அதை எதிர்கொள்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஜாஃபர். ”ஒருமுறை எழுதிய GATE தேர்வின் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குச் செல்லும். சமயங்களில் ஒரு வருடத்துக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் எனத் திடீர் குண்டைத் தூக்கிப் போடுவார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். இன்ஜினீயரிங் படிப்பை ஓரளவுக்கு ஒழுங்காகப் படித்திருந்தாலே, GATE தேர்வை எளிமையாக எதிர்கொள்ளலாம். போன வருடம் வரை பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்டனர். இந்த வருடத்தில் இருந்து ஆப்டிட்யூட் கேள்விகளும் இடம்பெறலாம் எனச் சொல்கிறார்கள்.

I.AS., I.P.S. மாதிரியான ஒரு படிப்புதான் I.E.S (Indian Engineering Service). அது படித்தவர்களைத்தான் இந்தியாவின் உயர் தொழில்நுட்பப் பிரிவுகளில் தலைமைப் பொறுப்புகளில் நியமிப்பார்கள். GATE தேர்வுக்குத் தயாரானவர்களுக்கு I.E.S தேர்வுகள் ரொம்பவே சுலபமாகத்தான் இருக்கும். அதே மாதிரி, பெல், ஐ.ஓ.சி.எல்., எல்.அண்ட்.டி மாதிரியான நிறுவனங்கள் GATE தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவர்களை எழுத்துத் தேர்வே இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். வரும் நாட்களில் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு GATE தேர்வின் மதிப்பெண்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். டெக்னிக்கல் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் GATE ஸ்கோர் கேட்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை!” என்கிறார் ஜாஃபர்.

இந்த வருட CAT தேர்வில் 99.81% மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அஷோக், ஏற்கெனவே எட்டு வருட வேலை அனுபவம் உள்ளவர். அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய I.I.M களில் இருந்து ஒரே நேரத்தில் அழைப்பு வந்திருக்கிறது இவருக்கு. பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறார் இவர். ”மற்றவர் களோடு ஒப்பிடும்போது நமது திறன் எந்த இடத்தில் இருக்கிறது. எத்தனை போட்டியாளர்களை நாம் கடக்க வேண்டும் போன்ற விஷயங்களை அகில இந்திய அளவிலான மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்வதன் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன். படிப்பு விஷயங்களில் ரொம்பவே ‘டச்’ விட்டுப் போயிருந்ததால், அடிப்படை விஷயங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப்போனால், வகுப்பில் சேர்ந்த புதிதில் பேனா பிடித்து எழுதவே வரவில்லை!” என்று சிரிக்கும் அஷோக்கின் அகில இந்திய ரேங்க் 480. இந்த ஆண்டு கேட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் படிப்புகளுக்கான செலவுகள் லட்சங்களில் எகிறும் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆனால், விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால், இந்த உலகத்தையே வடிவமைக்கும் பொறுப்பு நாளை உங்கள் கைகளில். அதற்கு உண்டான தகுதிகளை இன்றே வளர்த்துக்கொள்ளுங்கள் இளைஞர்களே!

படங்கள்: ஆ.முத்துக்குமார், து.மாரியப்பன்

———————————————————————————-

நன்றி:-அ.ஐஸ்வர்யா

நன்றி:-ஆ.வி

===================================================================