தொகுப்பு

Archive for the ‘பொறியியல் கல்வியின் வீழ்ச்சி’ Category

பொறியியல் கல்வியின் வீழ்ச்சி


பொறியியல் கல்வியின் வீழ்ச்சி

பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்கள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் வரும் மாணவர்கள் இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான 55 சதவிகித தகுதி மதிப்பெண்கள், இப்போது 50-தாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50-ல் இருந்து 45 ஆகவும், மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு 45-ல் இருந்து 40 ஆகவும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு அது 35 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாகக்கிடந்தன. அதையட்டி, மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளின் உரிமையாளர்கள், அரசை வலியுறுத்தினர். அதை ஏற்றுத்தான் இப்போது அரசாங்கம் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மாணவர்களைவிடவும், பொறியியல் கல்லூரிகள் இந்த அறிவிப்பால் அதிகமாகப் பயனடையும் என்பதுதான் உண்மை!

இந்தியாவில் அதிகமான பொறியியல் கல்லூரிகளைக்கொண்ட மாநிலம் தமிழகம்தான். சுயநிதி பொறியியல் கல்லூரிகளைத் திறக்கலாம் என்று சொல்லப் பட்டதில் இருந்து ஆண்டுதோறும் 50, 100 என புதிய புதிய பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு பொறியியல் கல்லூரிகள் ஆறு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மூன்று, அண்ணா பல்கலைக் கழகத்தோடு இணைந்த 16, தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 431, என ஆக மொத்தம் 456 கல்லூரிகள் இருக்கின்றன. பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை 356. பணம் உள்ளவர்கள் முதலீடு செய்வதற்கான லாபகரமான தொழிலாகப் பொறியியல் கல்வி மாறிவிட்டது. இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்களில் பெரும்பாலோர் கல்வியோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள். இவர்களுக்கு லாபம் ஒன்றுதான் குறிக்கோள்.

இப்போது, மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாண வர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் போவ தற்கு மதிப்பெண் மட்டுமே காரணம் அல்ல. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. கட்டணம் என்பதுதான் மிக முக்கியமான காரணம்.

பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள தொகையைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் சொல்லப்படும்போது, அதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படும். இது ஒரு வசதியான பதில். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மனஉறுதி இருந்தால், நிச்சயமாக அதிகக் கட்டணம் வசூலிப்பதை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியும். கடந்த ஆண்டுகூட சில கல்லூரிகளில் அரசாங்கம் ரெய்டு நடத்தியது. ஆனால், அதன் விளைவுகள் என்ன என்பது யாருக்குமே தெரியாது!

பல பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவது இல்லை. என்றபோதிலும் மாணவர்கள் சேரவில்லை. கவுன்சிலிங் மூலம் ஒரு மாணவர்கூட சேராமல்போன கல்லூரிகள் பல இருக்கின்றன. அதற்குக் காரணம், தகுதி மதிப்பெண் அதிகமாக இருக்கிறது என்பதல்ல. கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதையும் தாண்டி, அந்தக் கல்லூரிகள் சேர்ந்து படிப்பதற்கு தகுதி அற்றவையாக இருக்கின்றன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான மதிப்பெண்களை அவர்களே தீர்மானித்துக் கொள் கிறார்கள். அப்படி இருக்கும்போது, இங்கு மட்டும் மதிப்பெண்களை குறைத்தால் என்ன தவறு என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் நடக்கும் பல கல்வி நிலையங்கள், எந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றன என்பதுபற்றி மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையே வெளிப்படையாகக் கூறியுள்ளது. ‘பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்திலேயே அரசாங்கத்தின் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றையும் பட்டியலிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பல பல்கலைக்கழகங்கள் அந்தப் பட்டியலில் இருந்தன. ஆனால் அது என்ன ஆனது? அந்த வழக்கின் நிலை என்ன?

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்தி அரசாங்கத்தின் மேற்பார்வைக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதுதான் இன்று பலருக்கும் இருக்கும் கருத்து. ஆனால், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் சீரழிவை உதாரணமாகக் காட்டி, எல்லாக் கல்வி நிறுவனங்களையும் அவற்றின் நிலைமைக்குக் கொண்டுபோவோம் என்று சொல்வது எந்த விதத்தில் சரி? அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை மதிப்பெண்களை முறைப்படுத்துவதற்கு பதிலாக, அதே அளவுக்கு மற்ற கல்லூரிகளிலும் மதிப்பெண்களைக் குறைத்திருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நம் மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கிற அதே நேரத்தில், பொறியியல் கல்வியின் தரம் வெகுவேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு இது தொடர்பாக சில ஆய்வுகள் நமது பொறியியல் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகள், பொறியியல் கல்வியின் தரம் மிக மோசமாக இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு வெளிப்படுத்தின.

2005-ம் ஆண்டு நாஸ்கோம் மற்றும் மெக்கின்சி ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்தியாவின் பொறியியல் கல்லூரிகளைப்பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அதில், பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களில் 25 சதவிகித மாணவர்களே வேலை பெறுவதற்குத் தகுதியானவர்களாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டது. அதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அரசாங்கம் செயல்பட்டிருந்தால், இப்போது நிலைமை ஓரளவுக்காவது மாறியிருக்கும். ஆனால், மத்திய அரசோ, மாநில அரசுகளோ, அதைப் பற்றி எந்த விதத்திலும் கவலைப்படவில்லை. மாறாக, பொறியியல் கல்வி மேலும் மேலும் சீரழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு ‘பர்ப்பிள்லீஃப்’ என்ற நிறுவனம், இந்திய அளவில் உள்ள 150 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களைப் பரிசோதித்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பொறியியல் கல்லூரிகளும் அடக்கம். 1,000 மாணவர்கள் சோதிக்கப்பட்டார்கள். இந்த ஆய்வின் முடிவில், பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுள் வெறும் ஆறு சதவிகிதத்தினர் மட்டும்தான் வேலை பெறத் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற உண்மையை அது வெளிப்படுத்தியது. 2005-ம் ஆண்டு 25 சதவிகிதமாக இருந்தது, 2009-ல் ஆறு சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதைத் தடுப்பது எப்படி என அரசாங் கங்கள் கொஞ்சம்கூட அக்கறை காட்டா மல் இருக்கின்றன என்பதுதான் வேதனை.

பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதற்குக் காரணம் தகுதி மதிப்பெண்கள் அல்ல. மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது, அதன் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன? அதில் தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என் பதை எல்லாம் பார்த்துத்தான் தேர்ந்து எடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 கல்லூரிகளில் இடம்பிடிக்கக் கடுமையான போட்டி நிலவுகிறது. அங்கு 10 லட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்துக்கூட மாணவர்கள் சேர்வதற்கு போட்டி போடுகின்றனர். காரணம், அந்தக் கல்லூரிகள் தரமான பொறியியல் கல்வியை வழங்குகின்றன. இதனால்தான், கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதற்கு இந்தக் கல்லூரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. இவற்றில் இறுதி ஆண்டு படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலோர் படிக்கும்போதே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்தக் கல்லூரிகளுக்கு போட்டி நிலவுகிறது.

தங்கள் ஊருக்கு அருகில் இருந்தாலும் தகுதியற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு முன்வருவதில்லை. தொலைவைப்பற்றி, கட்டணத்தைப்பற்றி கவலைப்படாமல் நல்ல கல்வி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.

பொறியியல் கல்லுரிகளில் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்னை, தகுதியான ஆசிரியர்கள் இல்லா ததுதான். இப்போது, ஒரே நிர்வாகத்தினர் பல பொறியியல் கல்லூரிகளை நடத்துகின்றனர்.அவர்கள் ஒரே ஆசிரியர்களைத் தாங்கள் நடத்தும்பல்வேறு கல்லூரிகளிலும் காட்டி, அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலையும், ஆய்வு செய்ய வருகிற அதிகாரிகளையும் ஏமாற்றுகிறார்கள். தற்போதுள்ள பொறியியல் கல்லூரி களில், பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருக்க வேண்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருப்பது இல்லை. பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களில் திறமையானவர்கள் எல்லாம் பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள் என்பதால், எந்த வேலையும் கிடைக்காத மாணவர்கள்தான் பெரும்பாலும் ஆசிரியப் பணிக்கு வருகிறார்கள். அது மட்டுமின்றி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைப்போலவே ஐந்தாயிரம், ஆறாயிரம் என்றுதான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. அந்த சம்பளத்துக்கு நல்ல ஆசிரியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இப்படியான ஆசிரியர்களிடம் பொறியியல் கல்வியைப் படிக்கும் மாணவர்களின் கதி எப்படி இருக்கும்? விதிகளில் சொல் லப்பட்டு இருப்பதுபோன்ற கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் இருப்பது இல்லை. சோதனைக்கூடங்கள், போதுமான அளவில் இல்லை. வகுப்பறைகளும்கூட சரியாக இருப்பது இல்லை. இவற்றைப் பார்த்துதான் மாணவர்கள் அந்தக் கல்லூரிகளுக்கு வர மறுக்கிறார்கள்.

நம்முடைய பொறியியல் கல்வியின் பாடமுறையும்கூட போதுமானதாக இல்லை என்பது கல்வி இயலாளர்களின் கருத்து. பொறியியல் கல்வி மிகவும் குறுகியப் பார்வைகொண்ட பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதாகத்தான் உள்ளது. மாணவர்கள் இடையே ஆய்வு மனோ பாவத்தைத் தூண்டுவதாக இல்லை. இது பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி மையங் களுக்கும்கூட பொருந்தக்கூடியதுதான். உலக அளவில் மிகச் சிறந்த 500 கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் பட்டியலிட்டுள்ளனர். அதில், 57 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை. இந்தியாவோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாத மிகச் சிறிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த 21 கல்வி நிறுவனங்கள், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் வெறும் நான்கு மட்டும்தான் அந்தப் பட்டியலில் உள்ளன. அந்த அளவுக்கு நமது உயர் கல்வி தரமற்றதாக இருக்கிறது.

ப்ளஸ் டூ தேர்வில் தாராளமாகவே மதிப்பெண் போடு கிறார்கள். அதனால்தான், தேர்ச்சி சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அப்படி இருக்கும்போது, தொழிற்கல்விக்கு தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தேவையற்ற ஒன்று. இது, தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்கு மட்டும்தான் பயன்படும். இப்படியான காரியங்களைச் செய்வதைவிடுத்து, பொறியியல் கல்வியின் தரத்தைச் சீர்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் காசைக் கொட்டிக் கொடுத்து பொறியியல் பயிலும் மாணவர்கள் நல்ல வேலைக்குப் போக முடியும். இல்லாவிட்டால், மற்ற பட்டதாரிகளைப்போலவே பொறியியல் பட்டதாரிகளும் வேலை இல்லாமல் தெருவில் திரியும் நிலைதான் ஏற்படும்!

நன்றி:-

நன்றி:- ஜூ.வி