தொகுப்பு

Archive for the ‘பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை’ Category

பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை!


எல்லோரும் நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான செயல்களில் இறங்கி வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே. உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமைய செய்ய வேண்டியவை எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்பது பற்றி விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

முடிவு எடுப்பதில்தான் எதிர்கால வாழ்க்கை அடங்கி இருக்கிறது. எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவின்படி செயல்படுவது எப்படி? அதன் இடைக் காலச் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது? முடிவை வெற்றியாக மாற்ற செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

உங்கள் முடிவு சிறந்ததா?

முதலில் நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ப, எதிர் காலத்தில் எத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று உத்தேசித்து அறிந்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்ற கருத்து வரிகளுக்கு ஏற்ப உங்களை முதலில் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு – வேலை உங்களுக்கு மனமகிழ்ச்சியை தருமா? அந்த வேலை அல்லது படிப்பு உங்களுக்கும், சமூகத்திற்கும் தேவையான ஒன்றுதானா? மதிப்பு மிக்க பணியா? உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பணிதானா? அதே துறையில் மேலும் பதவி உயர்வுகள் பெற்று வளரும் வாய்ப்புள்ளதா? என்பன போன்ற அடிப்படை விஷயங்களை ஆராய்ந்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள வினாக்களுக்கு உங்கள் பதில் ஏற்புடையதாக அமையும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவு சரியானது என்று கொள்ளலாம். அதன்பிறகு அடுத்தகட்ட செயல்களத் தில் இறங்குங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட காரணங்கள் எதிர்மறையாக அமைந்தால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இலக்கை நிர்ணயம் செய்யும் முன்:

இலக்கை நிர்ணயம் செய்யும்போது விருப்பத்துடன் தேர்வு செய்திருந்தால் மகிழ்ச்சியாக செயல்பட்டு வெற்றியை அடையலாம். இங்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒரு மாணவன் பள்ளியில் படிக்கும்போதே கார் ரேஸை மிகவும் விரும்புவான். அவனுக்கு காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. ஆனால் காரை எவ்வாறு வடிவமைப்பது என்பதில் ஆர்வம் காட்டினான்.

அவனது வழிகாட்டி ஆலோசகர், கணிதம், அறிவியல் அடங்கிய பாடங்களை பள்ளிப் பருவத்தில் படிக்கச் சொன்னார். பின்னர் பொறியியல் பட்டப்படிப்பை எந்திரப் பொறி யியல்- மோட்டார் வாகனப் பொறி யியல் படிப்பு படிக்க ஆலோசனை வழங்கினார். அது தவிர தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்பு குறித்த சிறப்பு படிப்பு இருப்பதாகவும் கூறினார்.

கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பயிற்சி பெறவும், கணினியில் வடிவமைக்க தேவையான மென்பொருள்கள், அவற்றை கையாளும் விதம் ஆகியவற்றையும் அனுபவ ரீதியாக பெறும்படி ஆலோசனை வழங்கினார். இதன் அடிப்படையில் செயல் படத் தொடங்கிய அந்த மாணவன் வெற்றி பெற்றான்.

தன்னைத் தானே உற்சாகப்படுத்துதல்…

உங்களிடம் உள்ள முழுமையான திறமையை நீங்கள் நினைத்தால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வேறு யாராலும் உங்களை இயங்கச் செய்ய முடியாது. வழிகாட்டிகளாக அல்லது தூண்டுகோலாக மட்டுமே அவர்கள் செயல்பட முடியும்.

பலர் சிறப்பாக திட்டமிடுவார்கள், இலக்குகளையும் நிர்ணயிப்பார்கள். ஆனால் விடாமுயற்சியும், முனைப்பும் குறையும்போது நடைமுறைப்படுத்தும் ஆற்றலற்று இருப்பார்கள்.

நீங்களே உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும்போதுதான் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பொறுப்பு ஏற்படும். உங்களை நீங்கள் வாழும் சூழல் கட்டுப்படுத்தாமல், உங்களது சூழலை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. உங்களது ஒவ்வொரு செயலும் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கான முயற்சியே என்பதை உணரும்போது உங்களது பயணம் இலக்கைவிட்டு விலகாமல் இருக்கும்.

இன்று செய்ய வேண்டும் என்று எண்ணியதை எக் காரணம் கொண்டும் தள்ளிப் போடக்கூடாது. முதலில் செயல் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இலக்கு சார்ந்த தகவல்களை சேகரியுங்கள். இலக்கை அடைய பல்வேறு வழிகள் இருக்கலாம். அதில் சரியான வழியை தேர்வு செய்து அதை நடைமுறைப்படுத்துங்கள்.

இலக்கை தீர்மானிக்க தேவையான உத்திகள்

* இலக்குகள் பயனளிப்பவையாக இருந்தால்தான் நீங்களே அதை விரும்பி அடைய முயற்சி மேற்கொள்வீர்கள். எனவே விருப்பமுடையதாகவும், நல்ல பயன் தருவதையுமே இலக்காக கொள்ளுங்கள்.

* உங்களுடைய இலக்குகள் நடைமுறையில் உங்களால் அடையக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். கணிதப்பாடம் எப்படிப் படித்தாலும் புரியவில்லையென்றால் உங்களுக்கு நன்கு புரிகின்ற மற்ற பாடப்பிரிவின் அடிப்படையில் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

* நீங்கள் எதை முக்கியமாக அடைய வேண்டுமென்று கருதுகின்றீர்களோ அதை அடைவதற்கு உங்கள் இலக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், இலக்கை அடைவீர்கள்.

* உங்களது இலக்கு உங்களை நம்பிக்கையுடன் செயல்பட தூண்டுவ தாக அமைய வேண்டும். இலக்குகளை திட்டமிடும்போது எதிர் மறையான வார்த்தைகளை, சொற்களை பயன்படுத்தக்கூடாது. உங்களது எதிர்கால திட்டத்தை இலக்குகள் நிர்ணயித்து அறிக்கை யாக தயாரிக்கும்போது நம்பிக்கை ஊட்டும் சொற்களையே பயன்படுத்தப் பழக வேண்டும்.

* உங்களது இலக்குகள் ஒன்றை யொன்று சம்பந்தப்படுத்தி வலுப் படுத்துவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடைமுறைப்படுத்துவது எளிது. வளர்ச்சியும் வெற்றியை நோக்கி இருக்கும்.

இலக்குகளின் வகைகள்:

இலக்குகளை பொதுவாக குறுகிய கால இலக்கு, இடைக்கால இலக்கு, நீண்ட கால இலக்கு என்று வகைப்படுத்தலாம். 5 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் தேவைப்படும் இலக்கை நீண்ட கால இலக்கு என்று கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு ஆண்டு களுக்குள் அடையும் இலக்கை இடைக்கால இலக்கு என்றும், ஒரு சில மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்குள் அடைய முடியும் என்றால் அதை குறுகிய கால இலக்கு என்றும் கூறலாம்.

ஒரு மாணவர் வக்கீலாக வரவேண்டும் என்பது ஒரு நீண்ட கால இலக்கு. இதை ஒருவர் இலக்காக கொண்டால் அதற்காக அவர் பள்ளிப் பருவத்திலேயே ஏதாவது ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு வாதிடுதல் மற்றும் மறுத்து வாதிடுதல் என்று விவாத திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி- கல்லூரிப் பருவங்களில் தலைமைப் பண்புடன் செயல்படுவது, சட்டம் சார்ந்த படிப்பை தேர்வு செய்து படிப்பது ஆகிய அனைத்துமே இலக்கை அடைய வழி வகுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தமது துறையில் மூத்தவர்களுடன் நட்பு ஏற்படுத்தி வாடிக்கையாளர்கள் பற்றியும், சட்டம் சார்ந்த அடிப்படை நடை முறைகளையும் அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ள வேண்டும்.

இலக்கை அடையும் வழிகள்

உங்களது வருங்காலத் திட்டத்தை சிறு சிறு பிரிவு களாக பிரித்துக் கொண்டால் உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு நிலையிலும் உணர முடியும். எந்த செயல் நம்மை அடுத்த கட்டத்திற்கு எளிதாக கொண்டு செல்லுமோ அதை முதலில் செய்யப் பழகுங்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் உருவாக்கிய செயல் திட்டத்தை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்காமலே சில சின்னச்சின்ன மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதற்கேற்ப உங்களது செயல் திட்டத்தை அவ்வப்போது திருத்தி அமைத்துக் கொள்வது தவிர்க்க முடியாத அவசியமாகும். அதுதான் நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் எதிர்பார்க்காத விளைவுகளை எதிர்கொள்ளும்போதும் மாற்று வழிகளை தேர்ந்தெடுத்து இலக்கை அடையும் வகையில் வடிவமைப்பதே நல்ல செயல் திட்டம் ஆகும். எப்போதுமே ஒரு மாற்றுத் திட்டமும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எத்தகைய விளைவுகளையும் எதிர்கொள்வது சாத்தியமாகும்.

நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் இலக்கு என்பது உங்களுக்கு ஒரு வேலையை பெற்றுத் தருவது மட்டுமல்ல. வாழ்வு தழுவிய ஒன்றாகவும் கருத வேண்டும். அவை உங்களது வாழ்வியல் கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பிரதிபலிக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும். ஒன்றுக் கொன்று முரண்படக் கூடாது.

உங்களுடைய செயல் திட்டத்தை எழுதி வைத்திருந்தால் ஒவ்வொரு நிலையையும் கண்காணிக்க உதவும். எழுதப்படாத இலக்குகள் வெறும் விருப்பங்களே.