தொகுப்பு

Archive for the ‘சிறப்பிடம் தரும் சி.எஃப்.ஏ’ Category

சிறப்பிடம் தரும் சி.எஃப்.ஏ.! நிதித்துறை படிப்பு – வா.கார்த்திகேயேன்


சி.எஃப்.ஏ. (Chartered Financial Analyst)

நிதி சார்ந்த படிப்புகளுக்கு எப்போழுதுமே ஒரு தேவை இருக்கிறது. தினமும் புதுவிதமான நிதி சேவைகள் வந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிதியை கையாளுவதற்கே தனியே ஒரு திறமை வேண்டும் என்பது தான் இதற்கு காரணம்.

சார்ட்டட் ஃபைனான்ஸியல் அனலிஸ்ட் என்று சொல்லக்கூடிய சி.எஃப்.ஏ.களுக்கு தேவையும் அதிகம், அதற்கான சம்பளமும் அதிகம். இந்தியாவில் திரிபுரா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த படிப்பை அளிக்கிறது ( அமெரிக்க சி.எஃப்.ஏ. என்று தனியாக ஒரு படிப்பு இருக்கிறது. அதை இந்தியாவில் இருந்தும் படிக்கலாம்.)

மாஸ்டர் ஆஃப் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸியல் அனலிசஸ் என்பது இந்த டிகிரியின் பெயர்.

கடினமான பாடத்திட்டம் என்பதால், இந்த படிப்புக்கு மிக அதிக முனைப்பு அவசியம். இந்த படிப்பின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘சி.எஃப்.ஏ’ என்று போட்டுக்கொள்ளலாம்.

யாரெல்லாம் படிக்கலாம்?

 

எந்த டிகிரி முடித்தவர்களும் இந்த படிப்பை படிக்கலாம். ஆனால் ஆங்கில வழியில் அவர் படித்திருக்கவேண்டும். ஒருவேளை அந்த டிகிரி ஆங்கில வழியில் இல்லையென்றால் தனியே ஒரு கோர்ஸ் முடித்த பின்னர் இந்த படிப்பை படிக்க முடியும்.

எப்படி படிப்பது?

இந்த படிப்பை நிறைவு செய்ய குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் ஆகும். மொத்தமாக 6 குரூப் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஒரு வருடத்துக்கு மூன்று குரூப்பைகளை முடிக்கலாம்.

ஒவ்வொரு குரூப்பிலும் இரண்டு பாடங்கள் இருக்கும்.

குரூப் தேர்ச்சி பெற ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். அதே சமயம், இரண்டு பாடங்களில் மொத்தமாக 110 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். அப்போது தான் அந்த குரூப் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.

ஒருவேளை ஒரு பாடத்தில் 70 மதிப்பெண்களும் இன்னொரு பாடத்தில் 40 மதிப்பெண்களும் பெற்றிருந்தால் அந்த இரண்டு பாடங்களையும் மீண்டும் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

இரண்டு குரூப்களை முடித்த பின்னரே மூன்றாவது குரூப் தேர்வுக்கு செல்ல முடியும். அதாவது, குரூப் ஏ தேர்வை எழுதி தேர்வாகாமல் அடுத்த குரூப்பான குரூப் பி தேர்வை எழுதலாம். ஆனால் இது இரண்டையும் முடிக்காமல் குரூப் சி தேர்வுக்கு செல்ல முடியாது.

முதல் வருடம் முழுவதும் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் தான் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஐந்து பதில்கள் இருக்கும். இரண்டாவது வருடத்தில் விரிவான பதில்களை எழுத வேண்டும்.

விதிவிலக்கு!

6 குரூப்களையும் சேர்த்து 12 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் இதில் சில விதிவிலக்குகள் இருக்கிறது. எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர்கள், இந்த கோர்ஸில் இருக்கும் பொருளாதார பாடத்தை படிக்க வேண்டாம். அதே போல எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படித்தவர்கள் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் பாடத்தை படிக்க தேவையில்லை. இது போல சில விதிவிலக்குகள் இருக்கிறது.

எவ்வளவு செலவாகும்?

இது தொலைதூர கல்வி. வழக்கமாக தொலைதூர கல்விக்கு அதிகம் செலவாகாது. ஆனால், இந்த படிப்பை பொருத்தவரை செலவு அதிகம்தான். இரண்டு வருடத்துக்கு 60,000 ரூபாய் வரை செலவாகும். தவணை முறையிலும் கட்டணம் செலுத்தலாம். அப்படி செலுத்தும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். இதைத் தவிர தேர்வு கட்டணமும் உண்டு.

எப்போது சேரலாம்.?
மூன்று மாதத்துக்கு ஒரு முறை சேர்க்கை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்புகள் எப்படி?

இப்போதைய நிலையில் நிதித்துறைகளில் இருக்கும் தலைவர்களில் பெரும்பாலோனர் சி.எஃப்.ஏ. படித்தவர்கள் தான். மியூச்சுவல் ஃபண்ட், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட், பங்குத்தரகு நிறுவனங்கள், ஈக்விட்டி ரிசர்ச், வங்கி போன்ற நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது.

கொஞ்சம் சிரமப்பட்டால் பெரிய பதவியும் அந்தஸ்தும் காத்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு :

http://www.iutripura.edu.in/

சென்னை முகவரி:

ஐ.எஃப்.இ.என். தகவல் மையம்

6 இ. 6வது தளம்.
எல்டோராடோ பில்டிங்.
112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை. சென்னை=34

044 28235633

நன்றி:- வா.கார்த்திகேயேன்.

நன்றி:- நா.வி