தொகுப்பு

Archive for the ‘கல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்’ Category

கல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்


சென்னை, ஆக. 17:   தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வகையான உதவி தொகைகள் இருந்த போதிலும் அது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மாணவர்களிடம் இல்லை. இது குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் கூறினார்.

உதவித்தொகை திட்டங்கள் குறித்து உதவி இயக்குநர் ராம் மோகன் கூறியதாவது:

மாணவிகளுக்கு…முதுநிலை பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்:   இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு எழுதி அனுப்ப வேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்:  பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித்தொகையைப் பெறலாம்.

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்: முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி., படிக்கும் இடைநிலை பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித்தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ், உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒரே பெண் குழந்தை:   தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி / ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி. / எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித்தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அது குறித்து தொலைபேசி எண்கள், 044 -28271911 / 6792 / 28212090- ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்’ என்று ராம் மோகன் கூறியுள்ளார்.

நன்றி:–தினமணி

Advertisements
%d bloggers like this: