தொகுப்பு

Archive for the ‘கம்பெனி செகரட்டரிஷிப்’ Category

கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! – ஆகாஷ்

பிப்ரவரி 24, 2013 1 மறுமொழி

இன்றைக்கு கைநிறையச் சம்பளமும், கண்ணியமான வேலையும் பெறவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்படி ஆசை இருக்கும் இளைஞர்கள் இப்போதே கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கல்லூரிக்குச் சென்று படிக்க நேரம் இல்லாதவர்கள்

அஞ்சல் வழி மூலம் வீட்டில் இருந்தபடியே இந்தப் படிப்பை படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படிப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சொல்கிறார் ஐ.சி.எஸ்.ஐ.யின் இணை இயக்குநர் சாரா ஆரோக்கியசாமி.

”கம்பெனி செகரட்டரி படிப்பை தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) நடத்துகிறது. இதற்கு சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய நான்கு நகரங்களில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் இந்தியா முழுக்க இயங்கி வருகிறது. தென் இந்திய தலைமை மண்டல அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது.

இந்தப் படிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. ஆரம்ப நிலை, அதாவது பவுண்டேஷன் புரோகிராமில் 4 தாள்கள் இருக்கின்றன. இரண்டாம் நிலையான, நிர்வாக நிலையில் (Executive Programme) இரண்டு பிரிவுகள் உண்டு. இதில் ஆறு தாள்கள் உள்ளன. மூன்றாவது, தொழில்முறை நிலையில் (புரொபஷனல் புரோகிராம்) நான்கு பிரிவுகள் உண்டு. இதில் 8 தாள்கள் உள்ளன.  

பிளஸ் டூவில் எந்த குரூப் படித்தவர்களும் இந்த அடிப்படைத் தேர்வு எழுதலாம். அடிப்படைத் தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக நிலை தேர்வில் நேரடியாகச் சேரலாம். இதன் பின்பு புரொபஷனல் படிப்புக்குத் தேர்வு எழுதலாம். புரொபஷனல் தேர்வு முடித்தபின் 16 மாத மேலாண்மை பயிற்சிக்குச்

(Management Training) செல்லவேண்டும். இதற்குப் பின் இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால் அசோசியேட் கம்பெனி செகரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுத முடியும்.

இந்தப் படிப்பை படித்தால் வேலை கிடைப்பது சுலபம். காரணம், 5 கோடி ரூபாயும் அதற்கு மேலும் செலுத்தப்பட்ட மூலதனம் உள்ள கம்பெனிகள் கட்டாயம் ஒரு கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும் என்பது கம்பெனிகள் சட்ட விதி. அந்தப் பதவிக்கு இந்த கோர்ஸ் படித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 5 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள கம்பெனிகள் எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாகப் பணியில் அமர்த்தலாம். தவிர, பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து கம்பெனிகளும் கம்பெனி செகரட்டரியை நியமனம் செய்ய வேண்டும்.

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை படித்து முடித்தவர்கள் நிர்வாக இயக்குநரா கவும், முழுநேர இயக்குநராகவும்,  கம்பெனி யின் தலைவராகவும் உயர் பதவியில் இருக்கிறார்கள். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை முடித்தவர்கள் கம்பெனியில் முழுநேர அதிகாரியாகப் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் வேலை பார்க்கலாம்.  

ஒரு கம்பெனி செகரட்டரி என்பவர் கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி  தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராகுதல், பல்வேறு துறை சார்ந்த சட்டப் பணிகள் உள்பட பல வேலைகளைச் செய்வார்.  

இந்தப் படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் சேரலாம். தபால் வழிக் கல்வி தான் என்பதால் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். மண்டல அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நடக்கும் நேர்முக வகுப்பிலும் சேர்ந்து படிக்கலாம். ஓர் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டுமுறை தேர்வு நடக்கும். மார்ச் 31-க்குள் சேருபவர்கள் டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-க்குள் சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறும் அடிப்படைத் தேர்வு எழுதலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு” என்று முடித்தார் சாரா ஆரோக்கியசாமி.

கைநிறையச் சம்பளம், நிறுவனங்களைக் கட்டிக்காக்கும் கண்ணியமான வேலையைத் தரும் கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை நீங்களும் படிக்கலாமே!

நன்றி:  ஆகாஷ்,  சாரா ஆரோக்கியசாமி.

நன்றி:- நாணயம் விகடன்