தொகுப்பு

Archive for the ‘கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்’ Category

பகுதி-3 கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்

ஜூலை 17, 2010 1 மறுமொழி

கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும்?

கல்விக் கடன் திட்டம் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கடந்த 3 வாரங்களாக இடம்பெற்றன. இந்ததொடரின் இறுதிப்பகுதி இங்கு இடம்பெறுகிறது. இதில் கல்விக்கடன் பெற தேவையான சான்றிதழ்கள் மற்றும் கல்விக்காக பெற்ற கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது.கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர் தான் எங்கு வசிக்கிறாரோ? அல்லது தனது நிரந்தர முகவரி எதுவோ? அந்த இடத்தில் உள்ள வங்கியில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்க கூடாது என்பதால் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்விக்கடனை கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் தவிர்த்து அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். சில தனியார் வங்கிகளும் கல்விக்கடன்களை அளிக்கின்றன.

தேவைப்படும் சான்றிதழ்கள்

கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம் வருமாறு:-

* மேற்படிப்பிற்கான அனுமதிச்சான்று

* கடைசியாக படித்த கல்வியின் மதிப்பெண் சான்று

* பெற்றோர் அல்லது காப்பாளரின் வங்கி கணக்கின் 6 மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்

* மாணவர் மற்றும் பெற்றோர் அல்லது காப்பாளரின் புகைப்படங்கள்

* புகைப்படச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று

* பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச்சான்று

* படிக்கப்போகும் கல்வியின் செலவு அட்டவணை

* கடனுக்காக சொத்து அடமானம் கொடுக்க வேண்டி இருந்தால் அது தொடர்பான சொத்துகளின் மீதான வங்கி வழக்கறிஞரின் சான்று மற்றும் பொறியாளரின் மதிப்பு சான்று. சொத்து குறித்த வில்லங்கச்சான்றிதழ்

மேற்கண்ட சான்றிதழ்கள் பொதுவாக தேவைப்படும். சில வங்கிகள் கூடுதலாக சில சான்றிதழ்களையும் கேட்கலாம்.

கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கல்விக்கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில், தவறாது தனது படிப்பின் நிலையை, மதிப்பெண் சான்றிதழை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

* கல்வி நிலையத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, வங்கி வரைவோலை மூலமாக கல்விநிறுவனத்துக்கு நேரடியாக அனுப்பப்படும்.

* பொதுவாக இந்தியாவில் படிக்க பெறும் கல்விக்கடனுக்கு வங்கிகள் பிற சேவைக் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பதில்லை.

* மாணவரது பெற்றோர் அல்லது மாணவரின் குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாதவராக இருக்க கூடாது. சில வங்கிகள் `கடன் நிலுவை எதுவும் இல்லை’ என்ற தடையில்லாச்சான்றிதழை கேட்கலாம்.

* கல்விக்கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் வசதியும் உள்ளது.

* ஒரு மாணவர் கல்விக்கடன் பெற்ற பிறகு, முதலில் தான் விண்ணப்பித்த படிப்பு மற்றும் கல்விநிலையத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கும் வங்கிகள்
அனுமதிக்கின்றன. ஆனால் இதற்கு சில விதிமுறைகளை வங்கிகள் வகுத்துள்ளன.

செலுத்த வேண்டிய காலம்?

ஒரு மாணவர்-மாணவி தனது உயர்கல்விக்காக பெற்ற கடனை, படிப்பு முடிந்த ஒரு ஆண்டு கழிந்த உடன் அல்லது படிப்பு முடிந்து வேலை கிடைத்து 6 மாதங்கள் கழிந்த உடன் தவணைத்தொகையை திரும்ப செலுத்த வேண்டும். மேலும் இந்த தவணைத்தொகையை 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் மாணவர் தனது படிப்பை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க இயலவில்லை என்றால் படிப்பு கால அளவு 2 ஆண்டுகள் வரை கூடுதலாக நீடிக்கப்படும்.

கல்வி கற்க வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவது ஒவ்வொரு மாணவர் மற்றும் அவரது பெற்றோரின் முக்கிய கடமையாகும். இதை ஒரு சமுதாய கடமையாகவும் அவர்கள் கருதவேண்டும். கல்விக்கடன் பெற்றவர்கள் அதை திருப்பிச்செலுத்தினால் தான் வங்கிகளால் எளிதில் புதிய கடன்களை ஆண்டுதோறும் தாராளமாக அளிக்க இயலும்.

எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நாட்டில் உள்ள மனித வளம் மேம்பட, கல்வி இன்றியமையாதது. தடையில்லா கல்வி அனைவரையும் சென்றடைய, வங்கிகள் கல்விக்கடனை அளித்து வருகின்றன. இதன் மூலம் வங்கிகள், தமது சமுதாய சேவையை செய்து வருகின்றன. இதுவரை கல்விக்கடன் பெற்றவர்கள், அதை தவறாமல் திரும்பச்செலுத்தி மற்றவர்களும் கடன் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவரின் உயர்கல்வி கனவை நனவாக்குவோம், வளமான இந்தியாவை நமதாக்குவோம்.

நன்றி:-தினத்தந்தி

தொகுத்தவர் : ஜெர்க்

பகுதி-2 கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்


எந்த ஒரு மாணவ-மாணவியின் கல்வியும் பண வசதி இல்லாமல் தடைப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தான் வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கும் `கல்விக்கடன் திட்டம்’.

இந்த திட்டத்தின் சிறப்புகள் மற்றும் கல்விக்கடன் பெற உதவும் தகவல்கள் இந்த மினித்தொடரில் இடம்பெறுகிறது.

கடந்த வாரம் கல்விக்கடன் பெறத் தகுதியானவர்கள் யார் என்ற தகவல்களை அறிந்தோம்.

இந்த வாரம் கல்விக்கடன் பெறத்தகுதியான படிப்புகள் குறித்த விவரங்கள் இடம் பெறுகிறது.

பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு கல்விக்கடன் பெற முடியும். அதுபோல சில பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் தங்களது பட்ட மேற்படிப்புகளுக்கு வங்கி கடன் பெறலாம். கல்விக்கடன் பெற தகுதியான படிப்புகள் எவை என்பது பற்றிய விவரம் வருமாறு:-

* பட்டப்படிப்புகள்:- இளநிலை கலை, அறிவியல் மற்றும் கணிதவியல் படிப்புகள்.

* பட்டமேற்படிப்புகள்:- முதுகலை கலை, அறிவியல், கணிதவியல் மற்றும் ஆய்வு படிப்புகள்.

* தொழிற்கல்வி:- பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகள், மேலாண்மை படிப்புகள், கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு கல்விக்கடன் கிடைக்கும்.

* ICWA, CA, CFA போன்ற கணக்கியல் தொடர்பான படிப்புகள்.

* இந்திய மேலாண்மை பயிலகம் (IIM), இந்திய தொழிற்கல்வி நிறுவனம் (IIT), இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), மற்றும் தோல் மற்றும் காலணி தயாரிப்பு தொடர்பான படிப்புகள்அளிக்கும் நிறுவனமான சிலிஸிமி அளிக்கும் படிப்புகள், பேஷன் டெக்னாலஜி மற்றும் அதுதொடர்பான படிப்புகளை அளிக்கும் ழிமிதிஜி போன்ற நிறுவனங்கள் அளிக்கும் பட்ட மற்றும் பட்டய மேற்படிப்புகள் போன்றவற்றுக்கும் கல்விக்கடன் கிடைக்கும்.

* கப்பல் மற்றும் விமான துறை சார்ந்த படிப்புகள். இவை கப்பல் மற்றும் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அங்கீகாரம் பெற்ற படிப்புகளாக இருக்க வேண்டும்.

*அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்விநிறுவனங்கள் இந்தியாவில் அளிக்கும் படிப்புகள்.

*அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் மாலைநேர படிப்புகள்.

*ஆசிரிய பயிற்சி படிப்பில் பட்டயம் அல்லது இளநிலை படிப்பு மற்றும் செவிலியர் பணியில் சேர தகுதியான பட்டய மற்றும் இளநிலை படிப்பு. (சான்றிதழ் படிப்பில் சேருபவர்களுக்கு கல்விக்கடன் வழங்க தகுதியில்லை.)

* இதர பட்டய- இளநிலை- மேல்நிலைப்படிப்புகள். இவற்றுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அல்லது அரசு மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றிருப்பது அவசியம்.

* ரஷியா, நேபாளம், சீனா போன்ற நாடுகளில் வழங்கும் மருத்துவப்படிப்புகளுக்கு கல்விக்கடன் பெற இயலாது.

*தொலைதூர கல்வி, பகுதி நேர படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், குறுகிய கால படிப்புகள் மற்றும் தொழிற் பயிற்சி படிப்புகளுக்கு கல்விக்கடன் பெற தகுதி இல்லை.

* பொதுவாக எந்தப்படிப்பாக இருந்தாலும் அதற்கு அரசு அல்லது அரசு துறை சார்ந்த அங்கீகாரம் இருந்தால் தான் வங்கிக்கடன் கிடைக்கும்.

* இந்த கடன் வழங்கும் திட்டத்தில் உள்ள விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும். தனியார் வங்கிகள் சில விதிமுறைகளையும், அரசு சார்ந்த வங்கிகள் பொதுவான விதிமுறைகளையும் கடைப்பிடிக்கின்றன. எனவே அந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப கடன் பெறும் தகுதியை அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த செலவுகளுக்கு கடன் கிடைக்கும்?

கல்விக்கடன் என்பது படிப்பு செலவுகளுக்கு மட்டுமின்றி மாணவர்களின் கல்வித்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பயன்தருகிறது. ஒரு மாணவர் அல்லது மாணவியின் எந்த செலவுகளுக்கு கடன் அளிக்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

* கல்விக்கட்டணம், விடுதியில் தங்கிப்படிப்பதாக இருந்தால் விடுதிக்கட்டணங்கள்.

* கல்லூரியில் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை மற்றும் போக்குவரத்து செலவு போன்றவை.

* தேர்வுக்கட்டணம், நூலக கட்டணம் மற்றும் ஆய்வக கட்டணம்.

* மாணவர்கள் தங்களது படிப்புக்கு தேவையான புத்தகங்கள், கருவிகள், சீருடைகள் வாங்கத் தேவையான செலவுகளுக்குரிய பணம்.

* படிப்புக்கு தேவை என்றால் கணினி மற்றும் அதுதொடர்பான கருவிகள் வாங்க கடன் உதவி.

* மாணவரின் காப்பீட்டுக்கான தவணை தொகை.

மற்றும் கல்விக்கு தேவையான அவசியமான செலவுகளுக்கு கடன் உதவி.

இந்த வசதியும் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் மாணவர்கள் கல்லூரி சென்று வர 2 சக்கர வாகனம் வாங்கவும் கடன் வசதி அளிக்கின்றன.

எனவே நீங்கள் கடன் பெற விரும்பும் வங்கி கல்விகடன் அளிப்பதில் எதுபோன்ற சேவைகளை அளிக்கின்றன என்பதை விசாரித்து அறிந்து கொள்வது அவசியம்.

பகுதி-1 கனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்

ஜூன் 30, 2010 1 மறுமொழி

`பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஆத்திச்சூடியில் பாடி இருக்கிறார் தமிழ் மூதாட்டி அவ்வையார். அந்த அளவுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.

எந்த ஒரு மாணவரின் கல்வி கற்கும் ஆசையும் பணம் இல்லை என்பதால் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் மாணவர்கள் கல்விக்கடன் வசதி திட்டம். வங்கிகள் மூலம் மாணவர்கள் கடன் பெற்று அதன் மூலம் தங்களது கல்வி அறிவைப்பெறும் இந்த திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ள பெற்றோர்களால் கூட தங்களது பிள்ளைகளுக்கு உயர் கல்வி அளிக்க முடிகிறது. உயர் கல்வி என்பது வாழ்க்கையில் நாம் செய்யும் சிறந்த முதலீடு ஆகும். மேலும் கல்விக்கட்டணங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் சாதாரண குடும்பத்தினர் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தினரும் தங்களது குழந்தைகளின் உயர்கல்விக்காக கல்விக்கடன் பெற வங்கிகளை அணுகும் நிலை உருவாகி இருக்கிறது.

இளைஞர்களின் கனவான உயர்கல்வியைப்பெற உதவி செய்யும் வங்கிகள் வழங்கும் கடன் திட்டம் குறித்தும், அந்த கடனை பெறுவதற்கு தேவையான தகுதிகள் எவை என்பது குறித்தும் இந்த மினித்தொடரில் காண்போம்.

கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்திய வங்கிகள் கூட்டமைப்பு 2004 ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. இந்தக்கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம், தகுதியான, படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு, உயர் கல்வி பயில தேவையான பண உதவியை கடனாக வழங்கி, இந்தியா அல்லது வெளிநாட்டில் கல்வியை தொடர வழிவகை செய்வது ஆகும்.

வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் குறித்த பொதுவான தகவல்கள் வருமாறு:-

1) கல்விக்கடன் யாருக்கு கிடைக்கும்?….

* இந்தியராக இருக்க வேண்டும்.

* எந்தக்கல்லூரியில் சேர்ந்து படிக்க இருக்கிறாரோ அந்தக்கல்லூரியின் சேர்க்கை அனுமதி கடிதம் (அட்மிஷன்) பெற்றிருக்க வேண்டும்.

* பொறியியல், மருத்துவம், நிதி நிர்வாகம் உள்பட அனைத்து வித பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு கல்விக்கடன் அளிக்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டயம் (டிப்ளமோ) படிப்புக்கும் கல்விக்கடன் அளிக்கப்படும்.

* எந்தக்கல்வி நிலையத்தில் சேர இருக்கிறீர்களோ அந்தக்கல்வி நிறுவனம் அரசு அங்கீகாரம் அல்லது அரசு அனுமதி பெற்றதாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாணவர் என்ஜினீயரிங் கல்வியில் சேரப்போகிறார் என்றால் அவர் தேர்ந்து எடுத்துள்ள கல்லூரி ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி அமைப்பின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இதுபோல ஒவ்வொரு கல்வியும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்பு அல்லது பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கும்.

* மாணவர் தான் சேரப்போகும் படிப்பிற்கு முந்தைய படிப்பில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அதாவது என்ஜினீயரிங் படிப்பில் ஒரு மாணவர் சேருவதாக இருந்தால் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.