“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளாக பார்ப்போர் உளர்; ஆனால் அவ்வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு கலையாகவே பழந்தமிழர் வகைப்படுத்தினர். அந்தவரிசையில் தற்போதைய தொழில்நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே கலைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வாறே கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், தமிழ் கணினி கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. இதில் கணினித் தமிழ் ஆர்வலர்கள், இணையத் தமிழ் சமூக குழுமங்கள், ஊடகத் துறையினர், எழுத்தாளர்கள், அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கணினி பயனர்கள் என பலரதும் பங்கு உள்ளது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்து விடுபவையும் உள்ளன. இங்கே பெரும்பாலும் இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் 635 ஆங்கில கணினிச் சொற்களையும் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களையும் அட்டவணையாக இட்டுள்ளேன்.
ஆங்கிலக் கணினிச் சொற்களின் உச்சரிப்பு பயிற்சி பெற விரும்புவோருக்கான ஒலிதக் கோப்பினை கீழே சொடுக்கி பயிற்சி பெறலாம். (விரைவில் இணைக்கப்படும்)
மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்
மொழிப்பெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல்லாக்கம் என்பதற்கும் இடையில் அதிக வேறுப்பாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள் பெயர்ப்பாகும். கலைச்சொல்லாக்கம் என்பது ஒவ்வொரு துறையும் சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்படும் சொற்களாகும்.
நேரடி மொழிப்பெயர்ப்பு சொற்கள்:
Application = விண்ணப்பம்
architecture = கட்டடக்கலை
Home = வீடு
கணினித் துறைச்சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்:
Application = செயலி
architecture = கட்டமைப்பு
Home = முகப்பு
நிலைக்கும் கலைச்சொற்கள்
ஏனையத் துறைகளைப் போலவே, கணினித் துறையிலும் உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்தவையும் உள்ளன. அதேவேளை ஒரே பொருள் கொண்ட இரண்டு மூன்று சொற்கள் பயனரின் விருப்பிற்கமைய பயன்படுத்தப்படுபவையும் உள்ளன.
“Blog = வலைப்பூ, வலைமனை, வலைப்பக்கம், வலைப்பதிவு” போன்ற கலைச்சொற்களில் தற்போதும் பெரும்பாலும் நிலைத்து நிற்கும் சொல் “வலைப்பதிவு” மட்டுமே ஆகும்.
“Comment = விமர்சனம், கருத்துரை, முன்னிகை, பின்னூட்டம்” என பலசொற்கள் இருந்தாலும், அநேகமானோர் பயன்படுத்தும் சொற்கள் “கருத்துரை, பின்னூட்டம்” போன்றவைகள் மட்டும் தான்.
இருப்பினும் இவ்வாறு ஒரே சொல்லுக்கான பல சொற்கள் இருப்பதில் எவ்விதக் குறையும் இல்லை. அவை குறித்த சொல்லின் சரியான பொருளைத் தருமாயின் அவற்றை ஒத்தக்கருத்துச் சொற்களாகக் கொள்ளலாம். அது எம் தமிழின் சொல்வளத்தை மேலும் பெருக்கிக்கொள்ள உதவும்.
ஒலிப்பெயர்ப்பு சொற்கள்
ஆங்கிலத்திலிருந்து கலைச்சொற்களாக மாற்றக்கூடாத, மொழிப்பெயர்க்கக் கூடாத சொற்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கையில் உள்ள “மகாராஜா நிறுவனம்” எனும் பெயரில் உள்ள “மகாராஜா” என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை “The great King என்றோ, Emperor” என்றோ ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதுதல் முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில் அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயராகும்; அதனாலேயே மகாராஜா என்பதனை ஆங்கிலத்தில் எழுதினாலும் அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டு “Maharaja” என்று எழுதப்படுகின்றது. அவ்வாறே கணினித் துறையிலும் இணையத்திலும் காணப்படும் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்களை எம்மொழியில் எழுதினாலும், அவற்றை ஒலிப்பெயர்த்து பயன்படுத்துதலே சரியானதாகும்.
Google = கூகிள்
Yahoo = யாஹு
மகாராஜா = Maharaja (Organization Limited)
கலைச்சொல் உருவாக்குனர்கள்
இந்த அட்டவணையில் காணப்படும் தமிழ் கணினிக் கலைச்சொற்களில் அதிகமானவை இணையத்தில் பரவலாக பயன்படும் சொற்களின் தொகுப்பே ஆகும். என்னால் உருவாக்கப்பட்டவை “Branching = கிளைப்பிரிதல், Customize = விருப்பமை (தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்தல்)” போன்ற ஒரு சில சொற்கள் மட்டுமே ஆகும். கணிசமானவை விக்சனரி குழுமத்தினரால் கலந்தாய்வு செய்து பெறப்படும் சொற்களில் பொருத்தமானவைகளாக நான் கருதும் சொற்கள், குறிப்பாக இராம.கி ஐயாவினால் அறிமுகப்படுத்தும் அருமையான கலைச்சொற்கள் இவ்வட்டணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக:
Moderation = மட்டுறுத்தல்
Post = இடுகை
Comment = பின்னூட்டம்/முன்னிகை
System = கட்டகம்
Domain = கொற்றம்
தமிழ் மொழிக்கும், தமிழ் கலைச்சொல்லாக்கத்திலும் இராம.கி ஐயாவின் பங்களிப்பு காலத்தால் போற்றத்தக்கவை. இவரது வலைப்பதிவை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும். கலைச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் இவரது இடுகைகள் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.
இராம்.கி ஐயாவின் வலைப்பதிவு: http://valavu.blogspot.com/
அண்ணா பல்கலைக்கழகத்தின்: கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி பதிவிறக்கம்
குறிப்பு: கணினி கலைச்சொற்களை தொகுத்து வழங்குவதன் நோக்கம், இன்றைய கணினி உலகில் பயன்படும் ஆங்கில கணினிச்சொற்களுக்கு இணையான கலைச்சொற்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென்பதே ஆகும். இத்தொகுப்பு மின்னஞ்சல் ஊடாக கோரப்படும் பலரது வேண்டுகோளுக்கு இணங்கவே இடப்பட்டுள்ளது. அதேவேளை இவை மேலும் தமிழ் கணினி உலகில் பலருக்கும், குறிப்பாக புதிதாக கணினி உலகிற்குள் நுழையும் இளையோருக்கும் பயன்படக் கூடியதாகவும் அமையும். chnical Computer Terms, கணினி சொல்லடைவுகள்
ணினி அருஞ்சொற்கள், Tamil Computing Words
25.271139
55.307485
Like this:
Like ஏற்றப்படுகின்றது...