தொகுப்பு

Archive for the ‘ரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்’ Category

ரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்! – மதன்


ரத்தம் என்பது இயற்கை உருவாக்கிய ஒரு பேராச்சரியம்! உடலுக்குள்ளே ஓடும் ஜீவநதி அது. கடைசி மூச்சும், இதயத்துடிப்பும் நிற்கும் வரை உள்ளே இந்த நதி சளைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது!

உடலுக்குள்ளே கிளைகள் விட்டுப் படர்ந்திருக்கும் ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் மைல்கள். இது பூமியின் நான்கு மடங்கு சுற்றளவு!

மனித உடலிலுள்ள ரத்தம் (மற்றுமுள்ள திரவங்களைப்) பற்றிய ஆராய்ச்சிக்கு ஸராலஜி என்று பெயர். ‘ஸர’ என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது இது. ‘ஸர’ என்றால் ஓடுவது – டொ fலொந் என்று அர்த்தம்!

ரத்தத்துக்கு இரு ‘முகங்கள்’ உண்டு! ஒன்று | அது மருத்துவர்களுக்குக் காட்டும் (நமக்கு ஓரளவுக்குத் தெரிந்த) முகம். மற்றது | போலீஸுக்குக் காட்டும் முகம்! இந்தத் தொடரில், ரத்தம் மிக முக்கியமாக பங்கேற்பதால், அதன் ‘இரண்டாவது முகம்’ பற்றி நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது!

மருத்துவ சம்பந்தமாக மட்டும் அல்லாமல் போலீஸாரின் கோணத்திலும் ரத்தத்துக்கு நாமெல்லாரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். எத்தனை கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க அது உதவியிருக்கிறது!

ஒவ்வொரு மனிதனின் எடையில் ஒன்பது சதவிகிதம் எடையுள்ள ரத்தம் அவன் உடலில் ஓடுகிறது. அதாவது நூறு கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் எடை ஒன்பது கிலோ!

கொலைகாரர்களுக்கு மிகுந்த பிரச்னை தருவது ரத்தம்! கழுத்தை நெரித்துக் கொன்றால்கூட உடலுக்குள் உறைந்து நின்று போன ரத்தம் பல தகவல்களை போலீஸுக்குத் தெரியப்படுத்திவிடும்!

ஒரு கொலைகாரன் கொலை யின்போது சிதறிய ரத்தத்தை மெனக்கெட்டு எவ்வளவு துப்புரவாக துடைத்து அகற்றப் பார்த்தாலும் அது பிடிவாதமாக எங்கேயாவது ஒளிந்து கொண்டு தன் எஜமானைக் கொலை செய்தவனை போலீஸில் காட்டிக் கொடுக்க போராடும்! ரத்தம் அந்த அளவுக்கு மிகவும் விசுவாசமானது!

சென்ற நூற்றாண்டில் பிரான்ஸில் வசித்த கஸ்டாஃப் மேஸ் என்னும் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் ரத்தத்தின் விசுவாசத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தவர். 1869|ல் பாரிஸில் பியர் வாய்ர்போ என்பவனின் வீட்டில் நடந்த கொலைக்குப் பிறகு, கொலைகாரன் அந்த வீட்டை முழுக்கப் புதுப்பித்திருந்தான்! அப்படியும் விடாமல் வீட்டை நுணுக்கமாக சோதனையிட்டார் மேஸ். தரையில் இரு ‘டைல்ஸ்’ இணையும் கோட்டுப் பகுதியில் ஊசி முனையளவு துவாரத்துக்குள் அவர் சற்று தண்ணீரை ஊற்றிப் பார்த்தபோது அது குட்டியாகக் கொப்பளித்தது. அந்த டைல்ஸை அகற்றியபோது உள்ளே ஒரு முற்றுப்புள்ளி அளவு ரத்தம் ஒளிந்து கொண்டிருந்தது. அந்த டைல்ஸ் பகுதியை அப்படியே பெயர்த்தெடுத்துச் சென்று சோதித்து கொலையுண்டவரின் ரத்தம் அது என்று நிரூபித்தார் மேஸ். பிறகு கொலைகாரன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்!

ஒரு துளி ரத்தம் கிடைத்தால்கூடப் போதும். காவல்துறையில் உள்ள தடய நிபுணர்கள் அதை வைத்துக் கொண்டு படிப்படியாக துப்பறியத் தொடங்குவார்கள். முதலில் அது ரத்தம்தானா? எனில் அது மனித ரத்தமா? ஆணுடையதா, பெண்ணுடையதா? இறந்தவரின் வயது என்ன? ரத்த குரூப் என்ன? ஏதாவது நோய் உண்டா? என்ன மருந்துகள் உபயோகித்தார்? ரத்தம் சிந்தி எத்தனை மணிநேரம் ஆனது?… போன்ற பல விஷயங்களை துளியூண்டு ரத்தத்தை வைத்துக் கொண்டு கண்டுபிடிக்க முடியும்!

சில சமயம் ரத்தத்தில் விரல் ரேகைகளும் பதிந்திருக்கலாம்! இறந்தவரின் நக இடுக்குகளில் கொலையாளியின் சதையும் ரத்தமும் ஒளிந்து கொண்டிருக்கலாம் | கொலைக்கு முன் இறந் தவர் போராடியிருந் தால்! ரத்தம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் சிந்தி, பிறகு அது துப்புரவாக துடைக்கப்பட்டிருக் கலாம் என்று போலீஸ் சந்தேகித்தால் ‘காஸில்|மேயர்’ என்னும் ஒரு சோதனையை மேற்கொள்வார்கள். அதாவது தரையில் ரத்தம் முழுக்கத் துடைக்கப் பட்டிருந்தாலும் பெனால்ஃப்தலீன் என்னும் கெமிக்கலை அங்கே விட்டால், அந்த இடம் ரோஸ் கலராக மாறும்! ரத்தம் அங்கே சிந்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிடும்!

சிந்திய ரத்தத்தையும் கத்திக் குத்துக் காயத்தையும் வைத்து எந்த வகை ஆயுதம் பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு உயரத்திலிருந்து ரத்தம் சிந்தியிருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும். கூரையில்கூட ரத்தத்துளிகள் இருக்கலாம்! கொலையாளி ஒரு கோடாலியால் பல முறை உயரத் தூக்கி வெட்டும் போது ரத்தம் கூரைக்குப் பறக்கும்! ரத்தம் ‘தகவல்களை அள்ளித் தரும் ஒரு பொக்கிஷம்’ என்று போலீஸார் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை!

முதன்முதலில் காயம்பட்டு ரத்தம் வெளியேறியதைப் பார்த்த மனிதன் எந்த அளவுக்கு கலவரப்பட்டுப் போயிருப்பான் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்! இப்போதும் ‘தைரியமான’ பலர் ரத்தத்தைப் பார்த்த மாத்திரத்தில் தடாலென்று மயக்கம் போட்டு விழுவதை வாசகர்கள் பார்த்திருக்கலாம்!

பண்டைய காலத்திலிருந்து ரத்தம் மனிதனைப் பல விதங்களில் ஈர்த்தது. ரத்தத்தைப் பற்றிய பல மூடநம்பிக்கைகள் இன்றளவும் உண்டு. ஒரு விலங்கின் ரத்தத்தைக் குடித்தால் அதன் ஆன்மா(சொஉல்) நம் உடலுக்குள்ளே போய்விடும் என்கிற நம்பிக்கை உலகெங்கும் உண்டு. இந்தியா உட்பட, பல நாடுகளில் ஆடு, மாடுகளைப் பலி கொடுத்தவுடன் அதன் ரத்தத்தை பூசாரியும், பிறகு மற்றவர்களும் குடிப்பது தெரிந்த விஷயம்! நார்வேயில் வசிக்கும் பழங்குடி மக்கள் கரடியைக் கொன்று அதன் ரத்தத்தைக் குடித்தால் கரடியின் பலம் தங்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவில், மஸாய் இன மக்கள் சிங்கத்தைக் கொன்று அதன் ரத்தத்தைக் குழந்தை களின் உடல் முழுவதும் தடவி விடுகிறார்கள்!

முதன் முதலில் கச்சித மான சிறு கப்பல்களைக் கட்டிய வைகிங்ஸ் இனத்தினரிடையே, எதிரிகளைக் கட்டி கப்பலுக்கு முன்னே படுக்க வைத்து, அவர்களை தரையோடு தரையாகத் தேய்த்தபடியே வெள்ளோட்டம் விட்டு, கடலை சிவப்பாக்குவது ஒரு சம்பிரதாயம். அதைப் பின்பற்றித்தான் இன்றும் கூட புதிய கப்பல்கள் கட்டி முடித்த பிறகு சிவந்த மது அடங்கிய பாட்டிலை (தேங்காய் மாதிரி) கப்பல் மீது வீசி உடைத்த பிறகே கப்பலை கடலுக்குள் இறக்குகிறார்கள்!

இதெல்லாம் சரி! உண்மையிலேயே ரத்தக் காட்டேரிகள் (Vஅம்பிரெச்) உண்டா?!

————————————————————–

நன்றி:-மதன்

நன்றி:- ஜூ.வி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++