தொகுப்பு

Archive for the ‘காலம் செய்யும் கோலம்’ Category

காலம் செய்யும் கோலம் – உதயை மு.வீரையன்


இயற்கையின் சுழற்சியால் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. காலத்துக்கு ஏற்ப கருத்தும் மாறிக்கொண்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியால் உலகமும் மாறிக்கொண்டிருக்கிறது. இவை மாறுவதால் சமுதாயமும் மாறிக்கொண்டிருக்கிறது. “மாற்றம்’ மட்டுமே மாறாதது என்பது அறிவியல் உணர்த்தும் பாடம்.

மாற்றங்களைத் தனிமனிதர்களும், சமுதாயமும் ஏற்றுக் கொண்டால்தான் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். இந்த மாற்றங்கள் நல்லவைகளாக இருக்க வேண்டும். தீயவைகளை ஏற்றுக்கொள்வதால் தனிமனித சீர்கேடும், சமுதாயச் சீரழிவுகளுமே ஏற்படும். இது மனிதகுல வரலாற்றையே பின்னோக்கிச் செலுத்திவிடும்.

ஒவ்வோராண்டும் பிப்ரவரி 14-ம் நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலை நாடுகளில் உருவான இந்தக் கொண்டாட்டங்கள் இப்போது இங்கும் வந்துவிட்டன. இதற்கு ஊடகங்கள் தூபம் போடுகின்றன. வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தூண்டிவிடுகின்றன. இளைஞர்களையும், மாணவர்களையும் குறிவைத்துத் தூண்டில் போட்டு இழுக்கின்றன.

இந்த இளம் வயதினர் நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய ஆடுவதும், பாடுவதும், குடித்துவிட்டுக் கும்மாளம் போடுவதும் அன்பைப் பறிமாறிக் கொள்வதாகக் கூறிக்கொண்டு உடலைப் பரிமாறிக் கொள்வதும் நாகரிக வளர்ச்சியா? கலாசாரச் சீரழிவா?

பொது இடங்களில் சில காதலர்கள் செய்யும் லீலைகளைக் கண்டால் விலங்குகள்கூட வெட்கப்படும். பொழுதுபோக்குக்காகக் குடும்பத்துடன் வரும் பலர், இந்த லீலைகளைப் பார்க்கும்போது முகம் சுழித்துக்கொண்டு செல்வதைக் காண முடியும் என்று காவல்துறை அறிக்கையே கூறியுள்ளது.

“காதல்’ என்பது கெட்டவார்த்தையல்லதான். காதல் என்பது உயிர்களின் உணர்வுதான்; உள்ளங்களின் இணைப்புத்தான். காதல் இல்லாமல் உயிர்களின் இயக்கமே இல்லைதான். “ஆதலினால் காதல் செய்வீர்’ என்று மகாகவி பாரதி பாடியதும் அதனால்தான்.

இங்கே காதலை விரும்பாத – காதலை ஏற்றுக்கொள்ளாத – காதல் செய்யாத உயிர்களும் உண்டோ? இல்லை, இல்லவே இல்லை.

ஆனால், “காதல்’ என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக்கப்பட்டிருக்கிறது. காதல் என்ற பெயரால் செய்யப்படும் ஆரவாரங்களும், அலங்கோலங்களும், ஆபாசங்களும் இளைய தலைமுறையைச் சீரழிக்கின்றன என்று பெரியவர்கள் கவலைப்படுகின்றனர். இதில் நியாயம் இல்லாமல் இல்லை.

தமிழர்களின் சங்ககால வாழ்க்கையே காதலும் வீரமும்தான். இதனையே அகம், புறம் என்று தொல்காப்பியம் விரித்துரைக்கிறது. பொற்காலமாகப் போற்றப்படும் சங்ககால வரலாறுகளே செம்மொழி இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்.

ஒருவனும், ஒருத்தியும் சந்திப்பதும், சிந்திப்பதும் ஊருக்கும், உலகுக்கும் தெரியாமல் நிகழ்கின்றன. உள்ளங்கள் மட்டுமே இல்லங்களை மீறி இணைகின்றன. ஊரார் அறிந்து “அலர்’ ஏற்படுவதற்கு முன்னர் வரைந்து கொள்ள வேண்டும். “உடன் போக்கு’ என்பதும் ஊரும், உறவும் உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் படிநிலையாகவும் இருந்தது.

உள்ளம் ஒத்த தலைவனும், தலைவியும் ஒன்றுகூடித் தாம் துய்த்த இன்பம் இத்தகையது எனப் பிறருக்குப் புலப்படுத்த முடியாததாக விளங்குவது அகம்; அதாவது காதல். இதை “அன்பின் ஐந்திணை’ என்றே தமிழ் இலக்கணம் கூறுகிறது.

தலைவன், தலைவி பெயர்களைச் சுட்டிக்கூறுவதையும் தடை செய்கிறது. ஒருதலைக் காதலை கைக்கிளை என்றும், பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் கூறுகிறது. இவை இரண்டும் ஒவ்வாத காதலாகும்.

இன்றைய ஊடகங்களும், திரையுலகமும், சின்னத்திரையும் காட்டும் காதல் காட்சிகள் எப்படி இருக்கின்றன? அந்தரங்கமாக நடைபெற வேண்டிய ஓர் உணர்வுமிக்க செயல்பாடு பெருங்கூட்டமாக ஆட்டம் ஆடி தெரியப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணை நண்பர்கள் குழுவே சேர்ந்து நெருக்கடி கொடுத்து காதலை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர். “ஐ லவ் யூ’ சொல்லச் சொல்லி கதாநாயகனே கட்டாயப்படுத்தும் கொடுமை. நமது திரைப்படங்களில் காட்டப்படும் பாத்திரங்களில் கதாநாயகன் யார்? வில்லன் யார்? என்பது தெரியாமல் சித்திரிக்கப்படுகின்றனர்.

இங்கே காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. இவனை விரும்பிய குற்றத்துக்காக அந்தப் பெண் கேவலப்படுத்தப்படுகிறாள். அவனை விரும்பிய அந்தப் பெண்ணின் பெயரை “கழிப்பறை’வரை எழுதிவைத்து அவமானப்படுத்துகின்றனர். ஒரு பெண் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அந்தரங்கத்துக்குள் நுழைந்து அதைப் பலர் அறியப் பகிரங்கப்படுத்தும் உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்? இந்த மன நோயாளிகளின் செயலுக்குப் பெயர் காதலா?

“அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்று கம்பன் பாடுவதே காதலுக்கான முன்மாதிரியாகும். “கண்களோடு கண்கள் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்களால் ஒரு பயனும் இல்லை’ என்று திருவள்ளுவர் கூறுவதும் இதுவே. இதுதான் இயற்கையான அன்பின் வெளிப்பாடு.

ஒரு பூ மலர்வதுபோல அரும்பி வளர்கிறது. இதைத்தான் குறளும், “காலை அரும்பி பகலெல்லாம் போதாகி/ மாலை மலரும் இந்நோய்’ என்கிறது. கடிதம் கொடுத்து, கட்டாயப்படுத்தி பூ மலர்வதில்லை. பூக்களை “மலர வேண்டாம்’ என்று தடுத்தாலும் நின்றுவிடப் போவதில்லை. அது வாழ்க்கையின் உயிர்ப்பாக இருக்கலாம்; ஆனால், அதுமட்டுமே வாழ்க்கையல்ல என்பதை இளைஞர்கள் உணர்வது எப்போது?

“எதையும் மிகைப்படுத்திக் கூறினால்தான் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்’ என்று கலையுலகில் இருக்கும் சில நல்ல படைப்பாளிகள் கூறுகின்றனர்.

“அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய மூத்த சிந்தனையாளர்கள் பணம் பண்ணும் நோக்கில் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லலாமா என்று மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் கேட்பது உங்கள் காதுகளில் விழுகிறதா? எல்லோருக்குமே சமுதாயக் கடமையிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

இந்தக் காதலர் தினம் உருவானதே ஒரு சமுதாய அக்கறையின் வெளிப்பாடுதான் என்று கூறுகின்றனர். வாலண்டைன் என்பவர் ரோமில் வாழ்ந்த மதபோதகர். அப்போதைய அரசரான இரண்டாவது கிளாடியஸ் திருமணம் ஆகாத வீரர்களே போரில் திறம்படப் பணியாற்ற வல்லவர்கள் என்று கருதி இளைஞர்கள் திருமணம் செய்வதற்குத் தடை விதித்தார்.

இதுகேட்டு வாலண்டைன் கொதித்தெழுந்தார். மன்னனின் உத்தரவைப் புறக்கணித்துவிட்டு, திருமணம் நடத்தி வைத்தார். இதனால் மதபோதகர் வாலண்டைனுக்கு மன்னர் மரணதண்டனை விதித்தார். அவரது தியாகத்தை மதித்து அவர் பெயராலேயே இந்தக் காதலர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதான் காதலர் தின வரலாறு.

இத்தகைய தியாக வரலாற்றை நினைவுகூர்ந்து அதற்குத்தக நடந்துகொள்ள வேண்டாமா? தியாகங்களை மதிப்பதும், தியாகிகளைப் போற்றுவதுமே ஒரு நாகரிக சமுதாயத்தின் கடமைகளாகும், இந்தக் கடமைகளைப் புறந்தள்ளிவிட்டு ஆணுக்கும், பெண்ணுக்குமான புனிதமான உறவை வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளலாமா?

அழிக்க முடியாத காதலை வரலாறுகள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. ரோமியோ-ஜூலியட், அனார்கலி-சலீம், லைலா-மஜ்னு, ஆட்டனத்தி-ஆதிமந்தி, கோவலன்-மாதவி கதைகள் காலம் கடந்தும் நமது மனத்தில் நீங்காமல் நிற்கின்றன.

இவை வெற்றியா? தோல்வியா? என்பது பற்றிக் கவலையில்லை. காலத்தால் அழியாமல் வரலாற்றில் நிலைத்திருக்கின்றனர். ஒவ்வோர் ஊரிலும் இவர்கள் இன்னும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் அரசியல் வரலாற்றில் நிலைத்து நிற்கும் காதலர்களாக கார்ல் மார்க்ஸ்- ஜென்னியைப் பற்றிக் குறிப்பிடலாம். செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த ஜென்னியும், மார்க்ஸýம் காதலித்து மணந்து கொண்டனர். ஜென்னி, மார்க்ûஸவிட 4 வயது மூத்தவர். பொதுவுடைமைக் கொள்கையின் தந்தையான மார்க்ஸ் கடுமையான வறுமையில் வாட நேர்ந்தது. அப்போதும் ஜென்னி அவரை விட்டு விலகவில்லை.

குழந்தை பிறந்தபோது அதற்குத் தொட்டில் இல்லை. வறுமையாலும், பிணியாலும் அது மரித்த போதும் சவப்பெட்டிக்கும் வழியில்லை. அத்தகைய கொடிய வறுமை நிலையிலும் அவர் மார்க்ûஸ நிழல்போலத் தொடர்ந்தார். இன்ப துன்பங்களில் துணையாக இருந்தார். புகழையும், பழியையும் பங்கிட்டுக் கொண்டார்.

இப்படிப்பட்ட காதலர்கள் இப்போதும் இல்லையா? இருக்கின்றனர். ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் இருக்கின்றனர். இனியும் இருப்பார்கள். ஆனால், வெளியில் தெரிவதில்லை. பலர் அறிய வீதியில் வந்து கூத்தடிப்பதில்லை, கும்மாளம் போடுவதில்லை. அவசியமானதாக இருந்தாலும் அந்தரங்கமானது. அந்தரங்கம் புனிதமானது, காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. அதையே மரபு என்கிறோம். இது காப்பாற்றப்பட வேண்டும் என நினைப்பது தவறா?

இந்தக் காதலர் தினத்தன்று எல்லைமீறிக் காதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியம் என்ன? சென்னை போன்ற நகரங்களில் அவர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகளே! இதனை ஒரு வாழ்வியல் பிரச்னையாக எண்ணாமல் பொழுதுபோக்காக நினைப்பதே காரணம். உலகமயம், தனியார் மயம், தாராளமயம் தந்த கேடுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

“கதவைத் திறவுங்கள்; காற்று வரட்டும்’ என்று ஞானியரும், யோகிகளும் கூறுகின்றனர். காற்று வந்தால் நல்லதுதான்; குப்பைகளும், குமட்டும் நாற்றமும் வருமானால் கதவை அடைத்து வைப்பதே நல்லது. இது காதல் செய்யும் மோதல் அல்ல; காலம் செய்யும் கோலம்.

நன்றி:-உதயை மு.வீரையன்

நன்றி:- http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=378099&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D