தொகுப்பு

Archive for the ‘அன்னையும் பிதாவும்’ Category

அன்னையும் பிதாவும் – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி


அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலா பெற்றோர் இருவருக்கும் நன்மை செய்யும்படி மனிதர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறான். இதற்கான காரணத்தையும் வல்ல நாயன் கூறியிருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:

நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அத்தியாயம்: 31, ஸூரத்து லுக்மான், வசனம்: 14). வசனம் 15 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.” (ஸுரத்து லுக்மான், வசனம்: 15).

ஸூரத்துல் அஹ்காஃபில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைப் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (16) சுவனவசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான – நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும். (அத்தியாயம்: 46, ஸூரத்துல் அஹ்காஃப், வசனம்: 15, 16)

‘தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; ‘ என ஸூரத்துல் அ’ன்கபூத், வசனம் 8 ல் கூறப்பட்டுள்ளது.

மேலும், அல்லாஹ்வையே வழிடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; என ஸூரத்துன்னிஸாவு, வசனம் 36 ல் கூறப்பட்டுள்ளது.

ஸூரத்து பனீ இஸ்ராயீலில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ!) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

(24) இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக! (அத்தியாயம்: 17, ஸூரத்து பனீ இஸ்ராயீல், வசனம்: 23, 24)

மேலும், ஸூரத்துல் அன்ஆம், வசனம் 151 ன் இடையில், ‘எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்;’ என்றும் கூறப்பட்டுள்ளது. ஸூரத்துல் பகரா, வசனம் 83 ன் இடையிலும், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் – எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது; (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்;’ என கூறப்பட்டுள்ளது.

‘ஹழரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராக இருந்தார்’ என அத்தியாயம் 19, ஸூரத்து மர்யமில் கூறப்பட்டுள்ளது. ஹழரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “எங்கள் இறைவா! என்னையும் என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள். (அத்தியாயம்: 14, ஸூரத்து இப்ராஹீம், வசனம்: 41)

அல்லாஹூ ஸூப்ஹானஹூ வதஆலாவிற்கு இணை வைக்கும்படி பெற்றோர்கள் வற்புறுத்தினால் அதற்கு கீழ்படிய வேண்டாம்:

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்;’ என அத்தியாயம் 31, ஸூரத்து லுக்மான், வசனம் 15 ல் கூறப்பட்டுள்ளது. அத்தியாயம் 29, ஸூரத்துல் அ’ன்கபூத், வசனம் 8 ல், ‘எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்;’ என கூறப்பட்டுள்ளது. ‘ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என அத்தியாயம் 9, ஸூரத்துத் தவ்பா, வசனம் 23 ல் கூறப்பட்டுள்ளது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பெற்றோரின் சிறப்புகள் குறித்து கூறியுள்ளார்கள். அவற்றில் சில:

“அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். “உரிய நேரத்தில் தொழுவது” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “பின்பு எது?” என்று கேட்டேன். “பெற்றோருக்கு நன்மை செய்தல்” என்று கூறினார்கள். “பின்பு எது?” என்று கேட்டேன். “இறைவழியில் போர் புரிதல்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அப்துர் ரஹ்மான் என்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

“மூன்று செயல்கள் இருக்கின்றன. எவரில் இவை குடிகொண்டிருக்கின்றனவோ அவர் மீது அல்லாஹ், தன் அடைக்கலம் என்ற போர்வையைப் போர்த்தி விடுகிறான். மேலும், அவரைச் சுவனபதியில் நுழையவும் வைக்கிறான். அவை: (1) இயலதவர்களுக்கு உதவுதல், (2) பெற்றோர்கள் மீது அன்பு கொள்ளுதல், (3) அடிமைகளுக்கு உதவுதல் ஆகியவைகளாகும்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சன்மார்க்க யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரினார். “உங்களுடைய பெற்றோர்களிருவரும் வாழ்கினறனரா?”என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். அதற்கவர், “ஆம்” என்றார். “அப்படியானால், அவர்களுக்கு (உழைப்பதிலேயே) நீர் பிரயாசை எடுத்துக் கொள்வீராக” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

“முதிய வயதுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ இருந்தும், சொர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதர் நாசமாகட்டுமாக! நாசமாகட்டுமாக! நாசமாகட்டுமாக!” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: முஸ்லிம்.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, “யா ரஸூலுல்லாஹ்! என்னுடைய நல்ல உறவுக்கு மக்களில் அதிக தகுதியுள்ளவர் யார்?” என்று கேட்டார். “உன்னுடைய தாய்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் அளித்தார்கள். “பின்னர் யார்?” என்று அவர் (மீண்டும்) கேட்டார். “உன்னுடைய தாய்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (மீண்டும்) பதில் அளித்தார்கள். “பின்னர் யார்?” என்று (மீண்டும்) கேட்டார். “உன்னுடைய தாய்” என்று (மீண்டும்) பதில் அளித்தார்கள். “பின்னர் யார்?” என்று (நான்காவதாக) கேட்டார். “பின்னர் உன்னுடைய தந்தை” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (நான்காவதாக) பதில் அளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

“இறைவனின் திருப் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தைப் பொருத்ததாயுள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தைப் பொருத்திருக்கிறது” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: திர்மிதீ.

“உங்களுடைய தந்தையர்களைப் புறக்கணிக்காதீர்கள். தன் தந்தையைப் புறக்கணிப்பவர் காஃபிராகிவிட்டார்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி.

“தெரிந்து கொண்டே தன்னுடைய தந்தை அல்லாத வேறு ஒருவரை தன் தந்தை என்று வாதிப்பவர் காஃபிராகிவிடுவார். ஒரு வர்க்கத்தாரில் தனக்கு பந்தத்துவம் இல்லாதிருக்கும் போது அவ்வர்க்கத்தைச் சேர்ந்தவரென வாதிடுபவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகில் எடுத்துக் கொள்ளட்டும்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறச் செவியுற்றேன். அறிவிப்பவர்: அபூதர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி.

பெற்றோர் மனம் புண்படச் செய்வது பெரும் பாவமாகும்:

“பெரும்பாவங்களிலும் மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை வினவினார்கள். “நல்லது யாரஸூலுல்லாஹ்!” என்று (நபித் தோழர்கள்) கூறினார்கள். “அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோர்கள் மனம் புண்படச் செய்தல்” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து உட்கார்ந்து, “அறிந்து கொள்! பொய் சாட்சியம் கூறல்” என்று கூறினார்கள். அதன் பின்னர், அதனை திரும்பத் திரும்பக் கூறுவதை அன்னார் விடமாட்டார்களா என்று நாங்கள் கூறும்வரை, அதனை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

“அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, கொலை செய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும் பாவங்களில் அடங்கும்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

பிறருடைய தாய் தந்தையரை திட்டாதீர்கள்:

“பெரிதினும் பெரிது தன்னுடைய இரு பெற்றோர்களையும் மனிதன் சபிப்பது” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “இறைத்தூதர் அவர்களே, மனிதன் தன் இரு பெற்றோர்களையும் சபிப்பது எப்படி?” என்று கேட்கப்பட்டது. “(வேறு) ஒரு மனிதனின் தந்தையை இந்த மனிதன் திட்டுவான். இவனுடைய தந்தையை அவன் திட்டுவான். அவனுடைய தாயை இவன் திட்டுவான். உடனே, இவனுடைய தாயை அவன் திட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

பெற்றோர் இறந்த பிறகும் ஆற்ற வேண்டிய காரியங்கள்:

“ஒரு மனிதன் இறந்துவிட்டால், மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்கள் துண்டிக்கப்பட்டுவிடும். (1) நிரந்தரமாக நன்மை பெற்றுத் தரும் தர்மம் (2) பயன் பெறப்படும் கல்வி (3 அவருக்காக துஆச் செய்யும் அவரின் நல்ல பிள்ளைகள்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், ஆதாரம்: முஸ்லிம்.

“என்னுடைய தாய்க்கு அவளுடைய உயிர் (திடீரென) பிரிந்து விட்டது. அவளுக்கு பேச முடிந்திருந்தால், அவள் தர்மம் செய்திருப்பாள் என்று நான் எண்ணுகிறேன். அவள் சார்பாக நான் தர்மம் செய்தால், அவளுக்கு (அதன்) நற்கூலி கிடைக்குமா?” என்று ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினார். அதற்கு “ஆம்” என்று பதில் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், ஆதாரம்: புகாரி.

ஜூஹைனிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ்ஜூச் செய்யாமல் இறந்து விட்டாள். அவளுக்காக நான் ஹஜ்ஜூச் செய்யலாமா?” என்று கேட்டாள். அதற்கு, “ஆம், அவளுக்காக ஹஜ்ஜூச் செய். உன் தாய் கொடுக்க வேண்டிய கடன் ஏதாவதிருந்தால் அதனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா? அல்லாஹ்வுக்கும் கொடு. அல்லாஹ் (தன் கடனை அடைய) அதிக உரிமையுள்ளவன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ஆதாரம்: புகாரி.

“நாயகமே! நான் என்னுடைய அன்னைக்கு ஒரு அடிமைப் பெண்ணை அன்பளிப்புச் செய்திருந்தேன். (இப்போது) என்னுடைய அன்னை இறந்து விட்டார்கள்” என்று ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினாள். (அதற்கு) அவர்கள், “உமககு (அவ்விதம் அன்பளிப்புச் செய்ததற்கான) நன்மையும் கிடைக்கும். வாரிசு என்ற முறையில் உமக்கு அந்த அடிமைப் பெண் மீண்டும் உரியவளாகி விட்டாள்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அது கேட்டு அப்பெண்மணி) “என் அன்னை மீது ஒரு மாதம் நோன்பு நோற்பது கடமையாக இருந்தது. அவருக்காக நான் நோன்பு நோற்கவா?”என கேட்டாள். (அதற்கு) “அவருக்காக நீர் நோன்பு நோற்பீராக!” என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மீண்டும்) அப்பெண்மணி, “அவர் ஹஜ்ஜூச் செய்யவில்லை. அவருக்காக நான் ஹஜ்ஜூச் செய்துவிடலாமா?” என்று கேட்டாள். “அவருக்காக நீர் ஹஜ்ஜூச் செய்யும்” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ. .

“ஒருவர் தம்முடைய பெற்றோரில் ஒருவருக்காக ஹஜ்ஜூச் செய்தால், அது அவருக்குப் போதுமானதாகும். அவருடைய ஆன்மாவுக்கும் வானலோகத்தில் நன்மாராயம் கூறப்படும். மேலும், இறைவனிடம் “இவர் நன்மை செய்பவர்” என்று எழுதப்படும். அவர் பாவியாக இருப்பினும் சரியே!” என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதுப்னு அர்கம் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், ஆதாரம்: ரஜீன்.

“நாயகமே! என் பெற்றோர் இறந்த பின்னரும் நான் அவர்களுக்கு நன்மை செய்யும்படியான கடமை யாதேனும் என்மீது உள்ளதா?” என்று ஒருவர் (நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்) வினவினார். அதற்கு அவர்கள், “ஆம். அவர்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சும். அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும்; அவர்களுக்குப் பின் அவர்களின் மரணசாஸனத்தை நிறைவேற்றும். (அவர்களுடைய வாக்குறுதிகளைப் பூரணமாக்கும்.) அவர்களின் உறவின் முறையார்களுடன் உறவு கொண்டாடும். அவர்களுடைய நண்பர்களைக் கண்ணியப்படுத்தும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உஸைத் மாலிக் இப்னு ரபீ அதஸ்ஸா இதீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், ஆதாரம்: அபூ தாவூத்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அறிவிப்பில் உலக முடிவு நாளுக்கான பதினைந்து செயல்கள் பற்றி கூறியுள்ளார்கள். அவற்றில் இந்த தலைப்புடன் தொடர்புடைய இரண்டு செயல்கள் பற்றி மட்டும் இங்கே கூறப்படுகிறது. (1) கணவன் தன் மனைவிக்கு அடங்கி நடப்பான் (2) மனிதன் தன் நண்பனுக்கு நன்மை புரிந்து தன் தாய்க்கு தீங்கு செய்வான், தன் தந்தைக்கும் அநீதம் செய்வான் என்பதாகும். இந்த ஹதீஸை ஹழரத் அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆதாரம்: திர்மிதீ.

நன்றி:- ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி

நன்றி:- http://islammargam.com