தொகுப்பு

Archive for the ‘வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்!’ Category

வெள்ளிக்கிழமை வணக்கத்துக்குரிய நாள்! – அப்துல் மலிக் அல் காஸிம்


بسم الله الرحمن الرحيم

ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை வாராந்திர திருநாளாக ஆக்கி இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கட்டளைகளுக்கு மாற்றம் செய்ததினால் வழிதவறியவர்களாகவும் ஆக்கினான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யூதர்களுக்கு வணக்கத்துகுரிய தினமாக சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு வணக்கத்துக்குரிய தினமாக ஞாயிற்றுக்கிழமையையும் ஆக்கினான். நமக்கு முன் சென்ற சமுதாயமாகிய இவர்கள் வெள்ளிக்கிழமையை விட்டும் வழிதவற செய்து விட்டான். நமக்கு இத்தினத்தை தந்து நேர்வழியையும் காட்டினான். இதனால் வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரக்கூடிய நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமையை ஆக்கினான். உலகத்துக்கு கடைசியாக அனுப்பப்பட்டவர்கள் நாமே! மறுமையில் படைப்பினங்களுக்கு மத்தியில் முதலில் விசாரணை செய்யப்படுபவர்களும் நாமே!” (ஆதாரம் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது, “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

புனிதம் மிக்க இந்த நாளை சிலர் தூக்கத்திலும், பிரயாணத்திலும், விளையாட்டிலும் கழிப்பதோடு பெண்கள் கடைத்தெருக்களிலும், வீடு வாசல் சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நாளின் மகத்துவத்தையும், சிறப்பையும் அறியாதவர்களாக கவனமின்மையாக இருக்கின்றார்கள். இவற்றை விட்டுவிட்டு இந்த நாளின் சிறப்பையும், நன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து இறைவனை வழிபடுவதிலும், அதிகம் திக்ர் செய்வதிலும் அதிகமதிகம் பிரார்திப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதிலும் ஈடுபட முயல வேண்டும்.

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் செய்யவேண்டிய சில வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். ஏனைய நாட்களை விடவும் குறிப்பாக இந்த நாளில் சில வணக்க வழிபாடுகளை குறிப்பிட்டு சிறப்பித்து மகத்துவப்படுத்தியுள்ளார்கள். மார்க்க அறிஞர்கள் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையா? அல்லது அரபா உடைய நாளா? என்பதில் கூட கருத்து வேறுபாடுபட்டுள்ளார்கள்.

இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 30 க்கு மேற்பட்ட சிறப்புக்களை கூறியுள்ளார்கள்.

அவற்றில் சிலவை பின்வருமாறு:

1) மாறி மாறி வரக்கூடிய திருநாள்: வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.

2) நன்மைகள் அதிகமாக உள்ள நாள்: சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்” (ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)

3) நாட்களிலே சிறந்த நாள்: நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

4) பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அந்த நாளில் செய்யக்கூடிய நற்செயல்களின் சிறப்பு: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்”(அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)

இங்கு வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது என்பது தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்கக்கூடிய ஒருவர் அந்த நாளில் நோன்பை அடைந்தால் தனியாக நோற்கலாம் என்பதனையே குறிக்கின்றது.

6) மறுமை நாள் நிகழக்கூடிய நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்)

7) பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல் பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

8) ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

9) இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம் ஜும்ஆவை முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்)

10) ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிப்பவரது மரணம் நல்ல மரணத்தின் அடையாளங்களில் நின்றும் ஒன்றாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்”(ஆதாரம்: அஹ்மத்)

11) இத்தினத்தில் தர்மம் செய்வது ஏனய நாற்களில் தர்மம் செய்வதனை விடவும் சிறந்ததாகும்: இமாம் இப்னு கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:“ரமலான் மாதத்தில் தர்மம் செய்வது எவ்வாறு ஏனைய மாதங்களில் தர்மம் செய்வதை விடவும் சிறபானதோ அதே போன்று வெள்ளிக்கிழமையன்று தர்மம் செய்வது ஏனைய நாட்களில் தர்மம் செய்வதைவிடவும் சிறந்ததாகும்” இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் வெள்ளியன்று பள்ளிவாசலுக்கு செல்லும் போது ரொட்டி அல்லது வேறு ஏதாவது உணவு பண்டங்களை கொண்டு சென்று இரகசியமாக தர்மம் செய்வார்கள்.

மேற்கூறப்பட்ட விஷயங்கள் வெள்ளிக்கிழமைகுரிய சில சிறப்புக்களாகும்,

வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:

1) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுபஹ் தொழுகையில் அத்தியாயங்களான அஸ் ஸஜ்த, அல் இன்ஸான் என்ற இரண்டையும் ஓதுபவராக இருந்தார்கள். இவ்வத்தியாயங்களில் மனிதனின் பிறப்பு மற்றும் கப்ரிலிருந்தும், மறுமை நாளிலும் எழுப்பப்படுவன சம்பந்தமான விஷயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2) ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வது: இந்த விஷயத்தில் முஸ்லிங்கள் அதிகம் பொடுபோக்காக இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலையில் சிலர் தூங்கிக் கொண்டும், இன்னும் சிலர் ஜும்ஆ ஆரம்பமான பின்னரும், மேலும் சிலர் இமாம் ஜும்ஆவுக்கு மின்பருக்கு ஏறுவதற்கு ஒரு சில நிமிடத்துக்கு முன்னருமாகவே செல்கின்றனர். இதில் கூடிய கவனம் செலுத்தி வெள்ளிக்கிழமை தினத்தில் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும் என்பதற்கான ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் பள்ளிவாசலில் அனைத்து நுழைவாயிலிலும் நிற்பார்கள். அவர்கள் முதல் முதலில் வருபவர்களது பெயர்களை பதிவு செய்வார்கள். பிரசங்கத்திற்காக இமாம் வந்துவிட்டால் தங்களது ஏடுகளை மூடிவிட்டு பிரசங்கத்தை செவிமெடுப்பதற்காக அமருவார்கள். இத்தினத்தில் பள்ளிவாசலுக்கு முதலில் வருபவர் ஒரு ஒட்டகத்தையும், இரண்டாவது வருபவர் ஒரு மாட்டையும், மூன்றாவது வருபவர் ஒரு ஆட்டையும், நான்காவது வருபவர் ஒரு கோழியையும், ஜந்தாவது வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவரை போன்றாவார்”

இந்த நபிமொழியில், பள்ளிவாசலுக்கு நேரத்தோடு வருபவரை தனது பொருளாதாரத்தால் தர்மம் செய்து அல்லாஹ்விடம் நெருங்குகின்றவர்களுக்கு ஒப்பாக கூறுகின்றார்கள். இதனால் எவர் நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வருகின்றாரோ அவர் உடல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான இரண்டு வணக்கங்களையும் செய்தவர்களாக ஆகிவிடுகின்றார்கள்.

நமக்கு முன் சென்ற அறிஞர்கள் வெள்ளிக்கிழமை தினத்தில் வழக்கமாக நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடும் பொழுது “வெள்ளியன்று சுபஹ் தொழுகைக்கு முன்னர் ஜும்ஆவுக்கு செல்வது நன்றாக இருக்கும்” ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் மக்கள் ஸஹருடைய நேரத்திலும் சுபஹ் தொழுகைக்கு பின்னாலும் பாதைகளில் திருநாட்களை போன்று பள்ளிவாசலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள், ஜும்ஆவுக்கு முன்னால் 12 ரக்அத்துக்கள் நபிலான தொழுகையை தொழுபவராக இருந்தார்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 8 ரக்அத்துக்கள் தொழுபவர்களாகவும் இருந்தார். அன்மைகாலத்தில் ஒருவர் ரியாதில் இருக்கின்ற பெரிய பள்ளிவாசலுக்கு சுபஹ் தொழுகைக்காக செல்பவர் ஜும்ஆ முடிந்ததன் பின்னரே வெளியே வருபவராக இருந்தார்.

பள்ளிவாசலுக்கு இத்தினத்தில் நேரத்தோடு செல்வதற்கு மிக முக்கியமான காரணி, இரவில் விழித்திருக்காமல் நேரத்தோடு தூங்கி காலையிலே உலக காரியங்களை விட்டுவிட்டு ஜும்ஆவுக்காக தாயாராவதாகும். இதனால் அல்லாஹ் அடியானுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்ற மகத்துவமான முழுமையான கூலியை அடைய முடியும்.

3) இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன் விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில் எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும் அல்லாஹ் ஹராமாக்கினான்”(ஆதாரம்: அஹ்மத்)

4) ஜும்ஆ தினத்தில் குழிப்பது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது சுன்னத்தாகும்: இந்த விஷயத்தில் மனிதர்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். இதற்கு மாற்றமாக திருமண வைபவங்களுக்கும், விழாக்களுக்குமாக அழகான ஆடைகளை அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம்கள் நபிகளார் காட்டித்தந்த வாராந்திர திருநாளாகிய வெள்ளிக்கிழமை தினத்தில் கவனமின்மையாக இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மெளனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: அஹ்மத்)

6) அத்தியாயம் கஃபை ஓதுவது சுன்னத்தாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் வெள்ளிகிழமை தினத்தில் அத்தியாயம் கஃபை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடையில் பிரகாசம் கிடைக்கும்” (ஆதாரம்: ஹாகிம்)

இந்த அத்தியாயத்தை பள்ளிவாசலில் மாத்திரம்தான் ஓத வேண்டிய அவசியமில்லை! வீட்டில் ஓதினாலும் போதுமானதாகும்.

7) இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

8) மனிதர்களின் பிடரியை கடந்து செல்வதை விட்டும், தொழுகையாளியை நோவினை செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நபி (ஸல்) அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் மனிதர்களின் பிடரியை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து “உக்கார்ந்து விடுங்கள். நிச்சயமாக நீங்கள் அவர்களை நோவினை செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மத்) பெரும்பாலும் பள்ளிவாசலுக்கு பிந்திவருபவருக்கே இவ்வாரான சந்தர்ப்பம் நிகழும்.

9) ஜும்-ஆ தொழுகை முடிந்து விட்டால் தொழுகைக்கு பின்னால் ஓதக்கூடிய துஆக்களை ஓத வேண்டும்; பின்னர் பள்ளிவாசலில் 4 ரக்அத்துக்கள் சுன்னத்து தொழுது கொள்ளவேண்டும். வீட்டில் தொழக்கூடியவராக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டும், வீட்டில் இரண்டும் தொழுது கொள்ளவேண்டும்.

சகோதரர்களே! இத்தினத்தின் சிறப்புக்களையும் நபியவர்களின் வழிமுறைகளையும் இத்தினத்தில் நடந்து கொள்ளவேன்டிய ஒழுங்குமுறைகளையும் அறிந்த நாம், இதனது முழுமையான சிறப்பையும் நன்மையையும் அடைய இறைவன் அருள் புரிவானாக! இறைவனிடத்தில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அந்த நேரத்தை அடைவதற்கு இறைவன் அருள் புரிவானாக!

நாம் அனைவரும் இறைவனை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி அவனை மாத்திரமே வணங்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

நன்றி:-அரபி மூலம்: அப்துல் மலிக் அல் காஸிம்  தமிழில்: அர்ஷத் ஸாலிஹ்

நன்றி:- உண்மை வலம்